(Reading time: 18 - 36 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 03 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai 

பிரபல தமிழ் முன்னனி நடிகர் தொழிலதிபர் மகளை மணக்க இருக்கிறார்.” என்று அன்றைய பத்திரிக்கையில் உள்ள தலைப்புச் செய்தியை தேவி படிக்க ஆரம்பிக்க, ஃபேஸ்பேக் போட்ட முகத்தோடு கண்களில் வெள்ளரி துண்டை வைத்து கண்களை மூடியப்படி சாய்வு நாற்காலியில் சாய்வாக உட்கார்ந்துக் கொண்டு மதுரிமா அதை கேட்டுக் கொண்டிருந்தாள்.

“சாத்விக் மதுரமான நடிகையை மணக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த நடிகையின் தரப்பிலிருந்து கூறப்படுகிறது” என்ற கிசுகிசு செய்தியை கடைசியாக தேவி படித்து முடிக்கவும், “என்ன?” என்று கண்களில் இருந்த வெள்ளரி துண்டை கையில் எடுத்தப்படி அவள் எழுந்து உட்கார்ந்தாள்.

“ஹேய் ஃபேஸ்பேக் போட்ருக்க மது.. பேசினா சுருக்கம் விழும்..” என்று தேவி பதறி, எழுந்து சென்று ஒரு ஈரத்துண்டை எடுத்து வந்து மதுரிமாவிடம் கொடுத்தாள். அதில் தன் முகத்தை துடைத்தப்படியே, “இந்த ப்ரஸ்க்காரங்க எப்படில்லாம் எழுதறாங்க பாரு தேவி.. சாத்விக் என்னை கல்யாணம் செய்யவும் வாய்ப்பு இருக்குன்னு என்னோட  தரப்புல இருந்து சொல்லியிருக்கேன்னு போட்ருக்காங்க.. நானோ இல்லை என் சார்பாவோ இப்படி போய் அவங்கக்கிட்ட சொன்னோமா..

சாத்விக் கல்யாணம் செஞ்சுக்கப் போறதா அவங்க அப்பாவே ப்ரஸ்க்காரங்கக்கிட்ட சொல்லியும் இப்படியெல்லாம் நியூஸ் போட்றாங்க பாரேன்..”

“அவங்க பத்திரிக்கை விக்க இப்படியெல்லாம் நியூஸ் போட்றது சகஜம்னு நீதானே சொல்லியிருக்க மது.. இப்போ ஏன் கோபப்பட்ற?”

“அதுக்காக இந்த நியூஸ்ல கூடவா..”

“சரி விடு.. சாத்விக்கோட திருமண செய்தி கேட்டு எனக்கு ரொம்ப சந்தோஷம்.. அவருக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று ஒரு செய்தியை நீயும் பத்திரிக்கைக்கு கொடுத்திடு..” என்று தேவி யோசனை சொன்னதும்,

“அடடா பூவோட சேர்ந்து நாறும் மணக்கும்னு சொல்றது போல நீயும் கலக்குற தேவி..” என்று மதுரிமா பாராட்டிக் கொண்டிருந்தாள். இருவரும் அந்த பெரிய பங்களாவின்  வரவேற்பறையில் அமர்ந்து தான் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த நேரம் அங்கே வந்த புவனா.. “தேவி கையில் இருந்த பத்திரிக்கையை வாங்கி, “நிஜமாவே சாத்விக்கோட கல்யாண அறிவிப்பு உனக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தலையா மதும்மா..” என்றுக் கேட்டப்படி தேவி உட்கார்ந்திருந்த சோஃபாவில் அவள் அருகில் சென்று அமர்ந்தார்.

“பெரியம்மா நீங்க வேற விளையாடாதீங்க..” என்று அவள் சிரிக்க,

“நான் விளையாடல மது.. சீரியஸா தான் கேட்கிறேன்.. உங்க ரெண்டுப்பேருக்குள்ள இருக்க கெமிஸ்ட்ரி வெறும் நடிப்புல மட்டும் தானா? நிஜத்துல இல்லையா?”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஹிஸ்ட்ரி ஸ்டூடண்ட் எதுக்கு கெமிஸ்ட்ரி பத்தில்லாம் பேசறீங்க..” என்று புவனா பேசிய விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாதது போல் மதுரிமா விளையாட்டாக பதில் கூற,

“இன்னுமே என்னோட பேச்சை விளையாட்டா தான் எடுத்துக்கிட்டு இருக்க போல மது.. ரெண்டுப்பேரும் ஒரே ஃபீல்ட்ல இருக்கீங்க.. சாத்விக் உன்னை புரிஞ்சு நடந்துக்க வாய்ப்பு இருக்கு.. உன் கூட சேர்த்து வந்த கிசிகிசுவை தவிர்த்து, சாத்விக் பத்தி எதுவும் தப்பா வந்ததில்ல.. உனக்கும் சாத்விக்கிக்கும் ஏதோ இருக்குன்னு தான் நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.. நீ சாத்விக்கை கல்யாணம் செஞ்சுக்கிட்டா கூட நல்லா இருக்கும்னு ஆசைப்பட்ருக்கேன் தெரியுமா?”

புவனாவின் பேச்சு மதுரிமாவிற்கு நெகிழ்ச்சியை உண்டாக்கியது. இவரோடு கூட பிறந்தவள் தானே அவளின் அன்னை மோகனா.. ஆனால் இவரது மனம் போல் ஏன் அவளின் அன்னைக்கு இருக்கவில்லை. ரெண்டுப்பேருக்கும் சரிசமமாக தானே தாத்தா அவரது சொத்தை பிரித்துக் கொடுத்தார். அதை பெரியப்பாவோடு சேர்த்து நல்ல முறையில் உழைத்து அந்த சொத்தை இவர்கள் பன்மடங்கு பெருக்கவில்லையா? ஆனால் அவளின் தந்தையோடு சேர்ந்து தாத்தா கொடுத்த சொத்துக்களை ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டு, அதே வசதியுடன் வாழ வேண்டுமென்று மகளை ஒரு நடிகையாக மாற்றி, அவள் சம்பாதிக்கும் காசை இப்போதும் ஊதாரித்தனமாக செலவழித்துக் கொண்டிருக்கின்றனர் அவள் பெற்றோர்கள்.

இன்னும் இன்னும் அவள் நடித்து சம்பாதித்து கொடுக்க வேண்டும் என்ற பேராசையுடன் தான் இருவரும் இருக்கின்றனர். இதில் அவளது திருமணத்தை பற்றியெல்லாம் சிந்தித்து பார்ப்பார்களா?? அந்த எண்ணமே அவர்களுக்கு தோன்றியிருக்காது. மனதிற்கு கொஞ்சம் கூட விருப்பமில்லாமல், பெற்றவர்களின் கட்டாயத்தில் தான் அவள் சினிமாவில் நடிக்க நுழைந்ததே.. அந்த துறையில் பெண்ணாக அவளுக்கு ஏற்பட்ட இடையூறுகளை வெற்றிகரமாக இந்த ஐந்து வருடத்தில் கடந்து வந்து, தன் பெண்மையை காப்பாற்றிக் கொண்டிருக்கிறாள். ஆனால் பெற்றவர்களாக அந்த அக்கறை கூட அவர்களுக்கு கிடையாது. எத்தனை பட வாய்ப்புகள் வரும்.. அதில் எவ்வளவு வருமானம் வரும்? இதையெல்லாம் மட்டும் தான் இருவரும் கவனிப்பர்.

புவனாவிற்கு சுத்தமாக இதில் விருப்பமில்லை. தங்கையிடமும் தங்கை கணவனிடமும் எவ்வளவு பேசியும் இருவரும் கேட்கவில்லை. “உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் மதுவை படிக்க  வைத்து அவளுக்கு திருமணம் முடிக்கும் செலவு முழுக்க நாங்களே பார்த்துக் கொள்கிறோம்.. உங்கள் செலவுக்கான பணத்தை கூட கொடுக்கிறோம்.. மதுவை சினிமாவில் எல்லாம் நடிக்க வைக்க வேண்டாம்” என்று எடுத்து சொல்லியும் அவர்கள் இருவரும் காதில் வாங்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.