(Reading time: 18 - 36 minutes)

து இன்னைக்கு ஹாட் நியூஸ் என்னன்னு தெரியுமில்ல..”

“சாத்விக் மேரேஜ் நியூஸ் தான.. இப்போ தான் தேவி படிச்சு சொன்னா அண்ணி..”

“உனக்கு தெரியுமா மது.. சாத்விக் மேரேஜ் செஞ்சுக்க போறது வேற யாருமில்ல.. என்னோட ப்ரண்ட் சுஜனா தான்.. காலேஜ்ல இருந்தே நாங்க பெஸ்ட் ப்ரண்ட்..”

“அப்படியா அண்ணி.. ஆனா அதைப்பத்தி பேப்பர்ல நியூஸ் எதுவும் போடல போலயே..”

“ஆமாம் ப்ரஸ்க்கு மெதுவா சொல்ல இருக்காங்க.. சுஜனா  மட்டும் இல்ல.. அவ பேமிலியும் எங்க பேமிலியும் நல்ல நெருக்கமானங்க.. அதால தான் எனக்கு நியூஸ் தெரிஞ்சுது.. அதுமட்டுமில்ல மது பாலாவும் சுஜாவோட அப்பாவும் புதுசா பார்டனர்ஷிப்ல பிஸ்னஸ் செய்யப் போறாங்க.. எல்லாம் அப்பா ஏற்பாடு தான்..” என்று பெருமையோடு சொல்ல, மதுரிமா தன் அண்ணனை கேள்வியாக பார்த்தாள். இதுவரை அவன் பார்டனர்ஷிப்பில் தொழில் செய்ததில்லையே!! ஓரளவுக்கு லாபம் வந்தால் கூட போதுமென்று எதிலும் அகல கால் வைப்பதில்லை அவன், தன் மாமனாரின் தொழிலை இப்போது அவன் பார்த்துக் கொள்வது கூட, அவருக்கு உடல்நலம் சரியில்லாததால் தான்.. அப்படியிருக்க இப்போது இது என்ன புதிதாக பார்டனர்ஷிப் என்று நினைத்தாள்.

“அது என்னோட ப்ரண்ட் விபா புதுசா ஒரு பெரிய ப்ராஜக்ட் பண்ணப் போறான். அதுக்கு நிறைய இன்வஸ்ட் தேவைப்படுது மதும்மா.. அதான் என்கிட்ட அதைப்பத்தி பேசினான். கண்டிப்பா லாபம் வர கூடிய ப்ராஜக்ட் தான்.. அதான் ஓகே சொல்லிட்டேன்.. கூட இன்னொருத்தரும் பார்டனரா சேர்ந்தா நல்லா இருக்கும்னு ஃபீல் பண்ணோம்.. அப்போ தான் மாமா அவங்க ப்ரண்டை பத்தி சொன்னாரு.. விபா சென்னைக்கு வந்ததும் வேலையை ஆரம்பிச்சிட வேண்டியது தான்..” என்று விளக்கம் கொடுத்தான்.

விபாகரனை பற்றி அவளும் கேள்விப்பட்டிருக்கிறாள். அவன் கைப்பட்ட வியாபாரம் எல்லாம் வெற்றி தான்.. அவன் தன் சகோதரனின் நண்பன் என்பதும் அவளுக்கு ஏற்கனவே தெரியும்.. அவனை நேரில் பார்த்ததில்லை என்றாலும், செய்தித்தாள்களில் புகைப்படத்தில் பார்த்திருக்கிறாள். அவர்களின் தயாரிப்புக்களுக்காக ஒரு விளம்பரத்திலும் நடித்துக் கொடுத்திருக்கிறாள். அதனால் தன் சகோதரனின் இந்த முயற்சி வெற்றிப் பெறும் என்ற நம்பிக்கையில் அதற்கு மேல் எதுவும் அவள் கேட்கவில்லை.

இவர்கள் மூவரும் இங்கே பேசிக் கொண்டிருக்க, புவனாவின் கவனம் முழுவதும் தேவியை பற்றி தான் இருந்தது. பதினெட்டு வயதில் அவர்கள் வீட்டில் வேலை செய்ய வந்த அவளது அன்னை தனத்தோடு வந்தவள் தான் தேவி. அப்போதே வேலை செய்பவளின் மகள் என்று நினைக்காமல், தங்கள் விட்டில் ஒரு பெண் போலத்தான் அவரும் அவரது கணவர் சிவகுருவும் தேவியை நினைத்தனர். அப்போது திருமண வயதில் இருந்த தன் மகனிடனும், “இவளும் நம்ம மதும்மா போல தான் பாலா..” என்று தான் அவளை அறிமுகப்படுத்தினர். பாலாவும் அதற்குப்பிறகு தேவியையும் தன் தங்கையாக தான் பாவித்தான். ஐந்து வருடங்கள் கடந்த பின்பும் இதுவரை அப்படித்தான் அவர்கள் மனதில் தேவி என்றும் மாறாத ஒரு இடத்தை பிடித்திருக்கிறாள்.

ஆனால் ரூபினி மட்டும் தேவியை எப்போதும் வேலைக்காரியின் மகள், அவளும் ஒரு வேலைக்காரி என்று நினைப்பதும், அவளை அப்படி நடத்துவதும் புவனாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பாலாவிற்கும் பிடிக்காமல் தான் ரூபினியிடம் கோபமாக பேச முயற்சித்தான். ஆனால் தேவி குறித்து கணவன் மனைவிக்குள்ளே பிரச்சனைகள் வருவதை அவர் விரும்பவில்லை.

பாலாவிற்கும் ரூபினிக்கும் திருமணம் ஆன புதிதிலேயே தேவி பற்றி தெளிவாகவே அவளிடம் புவனா அனைத்தையும் கூறினார். அப்போது பாலா மனைவியுடன் இங்கே சென்னையில் இருந்ததாலும், இவர்கள் அங்கே ஊரில் இருந்ததாலும் அப்போது எதுவும் தெரியவில்லை. ஆனால் சிவகுரு இறந்த பின் புவனாவும் தேவியும் சென்னை வந்த பின்பு தான் இப்படியெல்லாம்..

தேவி விஷயத்தில் மட்டும் தான் ரூபினி இப்படி நடந்துக் கொள்வாள். மற்றப்படி புவனாவிடமோ, பாலாவிடமோ, புகுந்த வீட்டு மற்ற சொந்தங்களிடமோ அவள் எப்போதும் மரியாதையாக தான் நடந்துக் கொள்வாள். இதற்கும் ரூபினி வீட்டார் இவர்களை விட வசதியில் உயர்ந்தவர்கள் தான்.. இருந்தும் ரூபினி அதை எப்போதும் செயலில் காட்டமாட்டாள். அப்படிப்பட்டவள் தேவியிடத்தில் மட்டும் ஏன் இப்படி? ரூபினி வீட்டில் வேலை செய்பவர்களை எப்போதும் கொஞ்சம் கீழாக தான் நடத்துவார்கள். அதனால் தான் ரூபினி தேவியிடம் இப்படி நடந்துக் கொள்கிறாள் என்பதை புவனா புரிந்துக் கொண்டதால் இப்படி அமைதியாக இருக்கிறார். தேவியும் ரூபினியின் செயல்களை பக்குவத்தோடு புரிந்து கொள்வதால் புவனாவின் இந்த அமைதியை தவறாக புரிந்துக் கொள்ள மாட்டாள் என்பதும் புவனாவிற்கு தெரியும்.. இருந்தாலும் இந்த நிலையை இப்படியே நீடிக்க விடாமல் ஏதாவது செய்தாக வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டார் அவர்.

புவனா நினைப்பது மட்டுமில்லாமல் ரூபினிக்கு தேவியிடம் இப்படி நடந்து கொள்வதற்கு வேறு சில காரணங்களும் இருந்தது. ரூபினி தோற்றத்தில் சுமாராக தான் இருப்பாள். அப்படிப்பட்டவள் வேலைக்காரியான தேவியின் அழகை பார்த்து முதலில் பிரம்மித்து தான் போனாள். நாளடைவில் அது பொறாமையாகவும் மாறிவிட்டது. மதுரிமாவும் அழகு தான், இருந்தும் அவள் ஒரு நடிகை என்பதால், என் நாத்தானார் முன்னனி கதாநாயகி என்று சொல்லிக் கொள்வதில் ரூபினிக்கு பெருமை. ஆனால் தேவி அப்படியில்லை.

இதில் மதுரிமா பாலாவிற்கு உடன்பிறந்த சகோதரி இல்லையென்றாலும் ரத்த சம்பந்தம் இருவருக்கும் உள்ளது. ஆனால் தேவியை உடன்பிறவா சகோதரி என்று சொல்வதை தான் ரூபினியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதில் அவளின் அன்னை வேறு, என்ன இருந்தாலும் அந்த பெண்ணை கொஞ்சம் தள்ளி நிறுத்து என்று வேறு ரூபினி பிறந்த வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் தூபம் போட்டுக் கொண்டே இருப்பார். அதனால் கணவன் இருக்குமிடத்தில் அவள் இருந்தால் ரூபினிக்கு பிடிக்காது. அவளை வேலைக்காரி என்று மட்டம் தட்ட பார்ப்பாள்.

தேவிக்கும் அது புரிந்ததால் எப்போதும் ரூபினி மற்றும் பாலாவிடம் கொஞ்சம் ஒதுங்கி தான் இருப்பாள். ஆனாலும் படப்பிடிப்பு இல்லாத ஓய்வு சமயத்தில் வீட்டிற்கு வரும் மதுரிமாவிற்காக அவர்களோடு சேர்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஆகிவிடும். தன் வீட்டு சூழ்நிலையை வெறுக்கும் மதுரிமா ஓய்வு நேரத்தில் எப்போதும் பெரியம்மா வீட்டிற்கு வந்துவிடுவாள். அதுவும் அவர்கள் சென்னை வந்தது அவளுக்கு இன்னும் வசதி. அப்படி தான் தேவியோடும் மதுரிமாவிற்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அதனால் தான் மதுரிமாவிற்காகவும் புவனாவிற்காகவும் தேவி ரூபினியை பொறுத்துக் கொள்வாள். அப்படி ரூபினியின் செயலுக்காக கோபப்பட்டாலும் தான், தன் அன்னை தனம் இப்போது உயிரோடு இல்லாத நிலையில் தேவிக்கு செல்வதற்கு வேறு போக்கிடம் ஏது? அதனால் இதெல்லாம் அவள் எப்போதும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்க பழகிக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.