(Reading time: 16 - 32 minutes)

“எனக்கு உன்னை விட உன் கல்யாணத்தை விட பாப்பா தான் முக்கியம்” தெளிவாக சொன்ன தந்தை மேல் கொண்ட கோபம் எல்லாம் அதற்குக் காரணமானவள் மேல் திரும்பியது.

சிறுவயது முதல் போர்டிங் பள்ளியில் படித்து பின் வேலை நிமித்தம் சிங்கப்பூரில் வசித்து வந்தவளுக்கு அவளின் தந்தையின் பணியின் மீதெல்லாம் ஆர்வம் இருந்தது இல்லை.

தந்தை தேசிய விருது பெற அதற்கு நடந்த பாராட்டு விழாவில் விளையாட்டாக அவள் பாட அதைக் கேட்டு மெய்மறந்த இளமாறன் அவளைத் திரைப்படங்களில் பாட அழைத்தான்.

இளைய தலைமுறையின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் இளமாறனை அவள் நேரில் பார்ப்பது அதுவே முதல் முறை.

அவனது உயரமும் கம்பீரமும் அவனது நேர்ப்பார்வையும் கனிவான குரலும் முதல் பார்வையிலேயே அமுதாவின் மனதில் காதலை துளிர்க்கச் செய்தது.

அவள் அதிகமாக சினிமா துறையினரைப் பற்றி எல்லாம் பத்திரிக்கைகளில் அல்லது இணையத்தில் படித்ததில்லை.

எப்போவாவது நண்பர்களோடு திரைப்படங்கள் பார்ப்பதோடு சரி. கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றிருந்ததால் அந்த வகை இசையையே பெரும்பாலும் விரும்பிக் கேட்பாள். ஏதேனும் நல்ல திரையிசைப்பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கேட்பாள்.

இளமாறனின் பாடல்கள்  அவளுக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும் அவனது சொந்த வாழ்வின் விவரங்களை அவள் அறியவில்லை.

விழாவில் இளமாறன் கரங்களைப் பற்றியபடியே ஓர் பெண் சுற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்தவளுக்கு மனதில் தோன்றிய நேசம் வாடியது.

ஆனால் விழா முடியும் தருவாயில் இளமாறன் உடனே இருந்தப் பெண் அவளைத் தேடி வந்தாள்.

“மாறன் கேட்டதுக்கு நீ பதில் சொல்லவில்லையாமே” அவள் கேட்க உன்னிடம் என்ன பேச்சு என்பது போல அலட்சியப் பார்வை பார்த்தாள் அமுதா.

“எங்க ப்ரொடக்ஷன் தான். சேகர் மாமாகிட்ட பேசிட்டேன். அவரும் ஒகே சொல்லிட்டார். சரின்னு சொல்லு அமுதா. உனக்கு பெரிய டர்னிங் பாய்ண்டா அமையும்” அவள் சொல்ல யாரிவள் என்ற கேள்வி அமுதாவினுள் எழுந்தது.

“நீங்க”

“நான் வானதி, மாறனோட அண்ணி. ஒரு முறை நீ பாப்பாவோட பர்த்டேக்கு உன் அப்பாவோட வந்திருந்த. அப்போ வானதி அக்கான்னு என் பின்னாடியே சுத்திட்டு இருந்தியே” வானதி நினைவூட்டியும் அமுதாவிற்கு நியாபகம் வரவில்லை.

ஆனால் அண்ணி என்று அவள் கூறியது அமுதாவின் காதில் அமுதகானமாக இசைத்தது.

ஒரே வருடத்தில் அமுதாவின் குரலில் தமிழ்நாடே மயங்கிப் போயிருந்தது. அடுத்தடுத்து அனைத்துப் பாடல்களும் ஹிட்டாக அமுதா புகழ் பெற்ற பின்னணி பாடகியானாள்.

திடீர் புகழில் சிறு போதையும் அவள் தலைகேறியது என்னவோ உண்மை தான். ஆனாலும் மிக ஹிட் பாடல்களைக் கொடுத்த போதும் இளமாறன் எப்படி அசராமல் இருக்கிறான் என்று அவளுக்கு வியப்பே.

அவள் மனதில் துளிர்த்திருந்த காதலும் அவளை அறியாமலேயே விருட்சமாக வளர்ந்து விட வானதியின் நட்பும் அவர்கள் குடும்பத்தினரும் அன்பும் கிடைக்கப் பெற வானிலே மிதந்தாள்.

அதிலும் அவள் தந்தை அவளின் திருமணம் குறித்து அவளிடம் விவாதிக்க மனதிலேயே பொத்தி வைத்திருக்கும் காதலை எவ்வாறு வெளிப்படுத்த என்று அவள் தவித்திருந்த போது மாறனுக்கு உன்னைப் பெண் கேட்டார்கள் என்று தந்தை சொன்னதும் மகிழ்ச்சியில் மூச்சு முட்டியது.

நிச்சயதார்த்தம் முடிவாகியிருந்த நிலையில் அடிக்கடி மாறன் வீட்டிற்கு சென்று வந்த அமுதாவிற்கு ஒன்று மட்டும் புரிந்து போனது.

கூட்டுக் குடும்பம் என்ற போதிலும் தனி நபர் விருப்பு வெறுப்புகளை அனைவரும் மதித்தனர். ஆனாலும் ஒரு சில கோட்பாடுகள் இருந்தன. அதில் மிக முக்கியமானது அவர்கள் வீட்டுப்  பாப்பாவின் சொல்லே அங்கே வேதம் என உணர்ந்தாள்.

“உன் அப்பாவோட பங்க்ஷன்ல நீ பாடிட்டு இருந்த போது பாப்பா போன் பேசிட்டு இருந்தா. இந்தக் குரல் ரொம்ப அருமையா இருக்குன்னு அவ சொல்லவும் தான் நான் கவனித்துக் கேட்டேன். பாப்பா ஆரம்பித்து வைத்தா சக்சஸ் தான்” அவளது இன்றைய நிலைக்கு அடித்தளம் அமைத்ததும் பாப்பா தான் என்ற செய்தி அவளுக்குப் பிடித்தமானதாக இல்லை.

“பாப்பா உன்னை விட ஐந்து வயது சின்னவ தான். நீயும் பாப்பான்னே கூப்பிடு. என் மாமியார் பேரும் பாப்பா பேரும் ஒன்னு அதனால பாப்பாவை யாரும் பேர் சொல்லி கூப்பிடுவதில்லை” தனது வருங்கால மாமியார் சொல்லவும் அமுதாவும் பாப்பா என்றே குறிப்பிட்டாள்.

“நீ கொடுத்து வச்சவ அமுதா. உன்னை மட்டும் தான் பாப்பா அண்ணின்னு கூப்பிடுவா. என்னை அவ அக்கான்னு கூப்பிட்டே பழகிட்டா, அதான் அண்ணி ஆன பிறகும் அக்காவாகவே இருக்கேன். மாறனும் நானும் க்ளாஸ்மேட். அவனும் பேர் சொல்லித் தான் கூப்பிடுவான். உனக்கும் நான் அக்கா” எதைப் பற்றிப் பேசினாலும் அங்கே பாப்பா வந்து போகாமல் இருக்க மாட்டாள்.

மிக பிரம்மாண்டமாக நிச்சயதாரத்த விழா நடைபெறும் என எதிர்பார்த்திருந்த அமுதாவிற்கு ஏமாற்றமே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.