(Reading time: 16 - 32 minutes)

“நாம மொரிஷியஸ் போறோம். அங்கே சிம்பிளா என்கேஜ்மன்ட். மீடியாவிற்கு வந்து நியூஸ் குடுக்கலாம்” என்று சொன்னது அவளின் தந்தை.

“எதுக்கு மொரிஷியஸ் போகணும்” என்று கேட்டவளுக்கும்  பாப்பா அங்கே இருக்கிறாள் என்றே பதில் வந்தது.

இளமாறன் அவளிடம் தெளிவாக சொல்லியிருந்தான் தான். இருப்பினும் ஒற்றைப் பிள்ளையாக தனித்தே வளர்ந்தவளுக்கு சட்டென்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எனினும் நிச்சயத்தில் ‘அண்ணி’, ‘அண்ணி’ என்று உருகியப் பெண்ணின் மீது தானே அன்பு சுரந்தது.

“என் அண்ணனின் உரிமையானவள் நீ” என சொல்லும் அந்த சொல்லில் தான் எத்தனை இன்பம். வானதி அக்காவின் ஏக்கமும் புரியத் தான் செய்கிறது” என மனம் நிறைந்தாள் அமுதா.

ஆனால் சில மாதங்களிலேயே நடந்த அந்த சம்பவமும், அந்தக் குடும்பமே உடைந்து போனதும் அவர்களின் திருமணம் தள்ளிப் போனதும் பேரிடியாக இருந்த போதும் விரைவில் எல்லாம் சரியாகி விடும் என்றே நம்பிக்கை கொண்டிருந்தாள்.

ஆனால் ஒரு வருடம் கடந்த நிலையிலும் எந்த மாற்றமும் இல்லை.

“கல்யாணம் தான் தள்ளி வச்சாச்சு. இளங்கோ மாமா ப்ரொடக்ஷனையே நிறுத்திட்டாங்க. மாறன் இசை அமைப்பதையே விட்டுட்டார். அத்தையும் அக்காவும் கூட அவங்க வேலை எல்லாம் நிறுத்திட்டாங்க.  இந்த வருட அவார்டு பங்க்ஷனுக்கு கூட யாரும் வரலையாம். நான் போகத் தான் போறேன்” எனக் கூறிய மகள் மீது மிகுந்த சினம் கொண்டார் சேகர்.

“நீ பங்க்ஷனுக்குப் போறதை அந்தக் குடும்பத்தில் யாரும் தடுக்க மாட்டாங்க. ஆனா அந்தக் குடும்பத்தில் ஒருத்தின்னு நீ நினச்சா நீயே போக மாட்டாய்” என்று தந்தை சொல்லவும் தான் நேரில் சென்று ஏன் இப்படி துக்கம் அனுஷ்டிப்பது போல இருக்கிறார்கள் என்று கேட்டு வரலாம் என்று  அமுதா அங்கே வந்தது.

இளமாறன் அவளிடம் எடுத்துச் சொல்லவும் அதை ஏற்றுக் கொண்டவள் தனது மாமியாரைத் தேடி அவரது அறைக்குச் சென்றாள்.

அங்கே வானதி சமாதானப் படுத்த முயன்றும் தோற்றுப் போய்க் கொண்டிருக்க மூன்று வயது சிறு குழந்தை அணியும் கவுன் ஒன்றை வைத்துக் கொண்டு அதில் இருந்த தங்க மீனை தடவிக் கொண்டே அழுதுக் கொண்டிருந்தார் கயல்விழி.

“அம்மா பாப்பா மெயில் பண்ணிருக்கா, பாப்பா பிஷ் ட்ரஸ் வேணும்னு கேட்டிருக்கா” புயல் போல் அங்கே நுழைந்த மகன்கள் இருவரும் ஒரு சேர கூறியதைக் கேட்ட அந்த தாய் இப்போது ஆனந்த கண்ணீர் வடித்தார்.

அந்தப் பின் மாலை நேரத்தில் அனைவரும் சிற்றுண்டியை மறந்து பரபரப்பானார்கள்.

“இளங்கோ எங்கடா இருக்கா பாப்பா” முத்துக்குமரன் விழிகளும் சமுத்திரமானது.

“அப்பா பிரஸ்ளின்க்கு நாளைக்கு காலையில அனுப்ப சொல்லி கேட்டிருக்கா. இதோ பாருங்க மெயில்” என்று தந்தையிடம் காண்பிக்க இளமாறன் அவர்களின் மேனேஜருக்குப் போன் செய்தான்.

“மும்பையில் இருந்து மாஹேவிற்கு நேரடியாக ப்ளைட் இருக்காம். பிரஸ்ளினுக்கு காலையில் பதினோரு மணிக்கெல்லாம் போயிடலாம். எல்லோருக்கும் டிக்கெட் போடுவோமா” இந்த ஒரு வருடத்தில் இவ்வளவு உற்சாகமாக அவனைப் பார்த்ததில்லை அமுதா.

“அத்தை நீங்க போன வருஷம் மிலன் பேஷன் ஷோவிற்கு டிசைன் செய்தது அனுப்பலாமா” அந்த ஷோவில் அவர்கள் கலந்து கொள்ள வில்லை என்றாலும் முழுவதுமாக தைத்த நிலையில் இருந்த அழகிய உடையை எடுத்து வந்தாள் வானதி.

அந்த உடையின் அழகைக் கண்டு பிரமித்துப் போனாள் அமுதா. தனது மாமியார் கயல்விழி உலகப் புகழ் பெற்ற பேஷன் டிசைனர் என்று அவள் அறிந்தது தான். அவருக்கு வலது கையாக வானதி செயல்பட்டாள் என்பதும் அவளுக்குத் தெரியும்.

ஆனால் அதில் எல்லாம் பெரிதாக நாட்டம் இருந்ததில்லை அவளுக்கு.

ஆனால் இன்று இந்த உடையைப் பார்த்ததும் அதன் அழகில் இருந்து விழிகளை அகற்ற முடியவில்லை.

தனது வியப்பைக் கயல்விழியிடம் வெளிப்படுத்தி விட மருமகளை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தவர் அவளின் கரம் பற்றி அந்த அறையை ஒட்டியிருந்த மற்றோர் அறைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கே இருந்த ஆடைகளைக் கண்டவள் இமை தட்டவும் மறந்து போனாள். மூன்று வயதுச் சிறுமியின் ஆடையில் தொடங்கி ஒவ்வொரு படியாக இருந்த அந்த கலெக்ஷனைப் பார்த்தவள் அவை அனைத்திலும் ஓர் தங்க மீனும் வெண்முத்தும் எம்ப்ராய்டரி செய்யப்படிருந்ததைக் கண்டாள்.

“அத்தை இதில பினிஷிங் செய்திடுங்க” என்று வானதி கொண்டு வந்து கொடுக்க சில நிமிடங்களிலேயே அதில் அழகான தங்க மீனை தைத்து விட்டிருந்தார்.

“அந்த ட்ரஸ்ல இருக்க மாதிரி இதுல முத்து வைக்கலையா அத்தை. இந்த மீன் சின்னதா இருக்கே” சந்தேகம் கேட்ட அமுதாவிடம் விளக்கம் சொன்னார் கயல்விழி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.