(Reading time: 14 - 27 minutes)

“இல்ல சிந்தாம்மா அவரு உறுதியா சொல்லிட்டாரு..அவரு முடிவெடுத்தா கண்டிப்பா மாத்திக்க மாட்டாரு..”

அப்படியே அவள் போக்கில் புலம்பியவள் சிந்தாம்மாவின் எந்த ஆறுதலையும் காதில் வாங்குவதாய் இல்லை.அப்படியே புலம்பிக் கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில் உறங்கியும் போனாள்.

அவளை மடியில் கிடத்தியிருந்தவருக்கு அவள் கூறியதுபடி எத்தனை அழகான கல்யாணம் அவர்களுடையது என்றே யோசிக்கத் தோன்றியது.

அன்று அந்த கெட்டு கெதருக்குப் பின்னான நாட்கள் இன்னும் இன்னும் இனிமையாய் மாறியிருந்தது.அத்தனை வேலை பொறுப்புகளுக்கு நடுவிலும் திவ்யாந்த் அவளிடம் தன்னையும் தன் காதலையும் உணர்த்திக் கொண்டேயிருந்தான்.

இருவருக்குமாய் கிடைத்த விடுமுறை நாளில் கல்யாண ஷாப்பிங் செல்லலாம் என முடிவு செய்து இருவருமாய் கிளம்பினர்.சிந்தாம்மா வழக்கம் போல் நல்ல காரியங்களுக்கு நான் முன்னிருப்பது சரி வராது என மறுத்துவிட வேறு வழியின்றி திவ்யாந்தும் வெண்பாவும் மட்டுமே  சென்றனர்.

முகூர்த்த புடவை செக்ஷனையே தலைகீழ் ஆக்கிக் கொண்டிருந்தாள் வெண்பா.திவ்யாந்த் வழக்கம் போல் அமைதியாய் அங்கு பார்வையாளனாகவே இருந்தான்.

சட்டென திவ்யாந்தின் கண் ஒருபுடவையில் நிலைகொள்ள அதே நேரம் மிகச் சரியாய் வெண்பாவும் அதையே கையில் எடுத்திருந்தாள்.

“திவா இது எப்படியிருக்கு.டிஃபெரெண்ட் கலரா இருக்குல எடுத்துக்கலாமா?”

“ரொம்ப நல்லாயிருக்கு கண்ணம்மா..எடுத்துக்கலாம்”

அதன் பிறகு மத்த சடங்குகளுக்கும் ரிசெப்ஷனுக்குமான புடவைகளையும் எடுத்துவிட்டு திவ்யாந்திற்கு பட்டு வேஷ்டி சட்டை எடுத்து அங்கிருந்து கிளம்பினர்.

பின் ரிசெப்ஷனுக்கான கோட் சூட் எடுப்பதற்கு  ப்ரத்யேக பொட்டிக்கிற்கு சென்று அளவெடுத்து துணியையும் செலெக்ட் செய்து கொடுத்து வந்தனர்.

இதற்கிடையில் கல்யாண மண்டபம் சாப்பாட்டு மத்த வேலைகள் அனைத்தையும் திவ்யாந்த் பார்த்து பார்த்து அரேண்ஞ்ச் செய்திருந்தான்.

வெண்பா தனக்கான உடைகள் ஸ்ட்ரிச்சிங் பார்லர் என அவளும் பிசியாய் இருக்க இருவருமாய் அடுத்து சந்திக்க நேர்ந்தது திருமணத்திற்கு முந்தைய நாள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த மெஹந்தி பங்ஷனில் தான்.

திருமண மண்டபத்திலேயே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்க அரங்கமே மழலை குரல்களால் நிரம்பி வழிந்தது.அங்கு வந்திருந்த மருத்துவமனையின் கடைநிலை ஊழியர்களுக்கு அப்படியாய் ஒரு ஆச்சரியம்.

ஏனெனில் அவர்களையும் ஆசிரம குழந்தைகளையும் தவிர சத்திரத்தில் யாருமிருக்கவில்லை.

என்னவென்று பேச்சு எழுந்தபோது திவ்யாந்தின் கீழ் பணிபுரியும் ஆண் செவிலி ஊழியர் கூறினார்,

“டாக்டர் எல்லாருக்கும் தனித்தனியாதான் இன்விடேஷன் வச்சுருக்காரு.இன்னையோட அழைப்பு நம்மளை மாதிரி ஸ்டாப்ஸ் அண்ட் ஹெல்பர்ஸ் அப்பறம் அவரு வளர்ந்த ஆசிரமத்தின் குழந்தைங்களுக்கு மட்டும் தான்.

நா கூட இப்படி பிரிச்சு பார்த்து கூப்பிடுறாரே மனுஷன்னு அவர்டயே கேட்டேன்.அதுக்கு அவரு துளியும் கோபடாம சொல்றாரு..நம்ம ஹாஸ்பிட்டல யாரு எப்படினு எனக்கு நல்லா தெரியும்.சில டாக்டர்ஸ் எல்லாரையும் சமமா பார்ப்பாங்க சிலருக்கு ப்ரெஸ்டீஜ் இஷு இருக்கும்.

எல்லாரையும் ஒரே நேரத்துக்கு கூப்பிட்டு யாராவது என் குழந்தைங்களை தப்பா பேசிட்டா எனக்கு ரொம்ப கஷ்டமாய்டும்.அதே நேரம் அவங்களை மட்டும் கூப்பிட்டா அதுவும் வித்தியாசமா தோணும்.அதான் யோசிச்சேன் அவங்களை சாதாரணமா பார்த்து நகர்ந்து போக யாரால முடியும்னு..கண்டிப்பா அது நீங்க எல்லாரும் தான்.

கல்யாணத்துக்கு வர்ற யாராவது இவங்க மனசு கஷ்டபடுற மாதிரி எதாவது சொல்லிட்டா ரொம்ப கஷ்டமாய்டும்.அதனால தான் இந்த பங்ஷன் பத்தி யாருக்கும் எந்த அறிவிப்பும் கொடுக்கல..கல்யாணம் முடிஞ்சு நாங்க உடனே திருப்பதி போறதா சொல்லிட்டேன்.

என் கல்யாணத்துல எல்லாருக்கும் வயிறும் நிறையணும் மனசும் நிறையணும் அதனால தான் இந்த ஏற்பாடு தப்பா எடுத்துக்காம கண்டிப்பா வந்துருங்கனு சொன்னாரு..”

அவர் கூறியதை கேட்ட அனைவருக்குமே அங்குள்ள குழந்தைகளின் உதடுச் சிரிப்பும் குதுகலிப்பும் மனதை மயக்குவதாய் இருந்தது.

குழந்தைகளுக்காகவே மெஹந்தி டட்டூ போட தனி தனி ஆட்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க பானி பூரி பஞ்சுமிட்டாய் பாப் கார்ன் ஐஸ்கீரிம் என அத்தனை அத்தனை உணவுப் பொருட்களும் அரங்கத்தை அழகுபடுத்தியது.

அங்கு குழந்தைகள் மட்டுமே பிரதானமாய் இருக்க கேட்டரிங் சர்வீஸ் செய்தவர்களும் அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.

குழந்தைகள் மட்டும் அல்லாது மருத்துவமனை ஊழியர்களுமே ஏதோ தன் குடும்ப விழாவிற்கு வந்தது போன்றே உணர்ந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.