(Reading time: 16 - 31 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 32 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

விமான நிலையத்தில் நுழைந்ததிலிருந்தே சுடரொளி அமுதனின் கையை பிடித்தப்படியே  இருந்தாள். அவனை விட்டு பிரிவது அவளது மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது , இங்கு வந்த போது இருந்த மனநிலைக்கு அவனது வரவை அதிகம் எதிர்பார்த்திருந்தாள். ஆனால் இப்போது அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கவில்லை தான், மகியின் நட்பு இப்போது கிடைத்திருக்கவே அவளுக்கு தனிமை பெரிதாக தெரிவதில்லை, இத்தனை நாள் அவனுக்கு வேலை இருந்த நாட்களிலும் கூட அமுதனை பார்க்காமல் அவளால் இருக்க  முடிந்தது. அதற்கு காரணம் அவன் இங்கு தானே இருக்கிறான் என்பதால் தான், ஆனால் இப்போது அவன் கிளம்ப போகிறான் என்று தெரிந்ததும், இன்னும் சிறிது நாட்கள் அவன் இந்தியாவில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவளுக்கு தோன்றியது.

நேற்று இரவு வெளியில் சென்ற போது கூட அவனிடம்  அதை சொல்லிப் பார்த்தால், ஆனால் முக்கியமான வேலை இருப்பதால், செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதாக அவன் கூறினான். அவனது நிலை புரிந்தாலும், அவன் இங்கேயே இருக்க வேண்டி அவளது மனம் அதிகம் எதிர் பார்த்தது. அவளது மனம் புரிந்தவனாக அவனும்,

“திரும்ப எப்படியோ சீக்கிரம் இங்க திரும்ப வரும் மாதிரி தான் இருக்கும் சுடர், கூட என்னோட கம்பெனிய வேற பார்க்க்கணும், அதனால் அடுத்த முறை வந்தா உன்னோட இன்னும் சில நாள் அதிகமா டைம் ஸ்பெண்ட் செய்றேன் போதுமா?” என்று சொன்னான்.

இவர்களுடன் வந்த மகி இருவரையும் அமைதியாக கவனித்துக் கொண்டு இருந்தான். அமுதனை பார்க்கும் போது அவனுக்கு பொறாமையாக இருந்தது. அமுதன்  உடன் இருந்தால், சுடரின் கண்களுக்கு அவன் தெரிவதேயில்லை, அதை நேற்று இரவு அமுதனோடு டின்னர் செல்லும் போதே கவனித்திருந்தான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அமுதன்  திடிரென்று லண்டன் செல்லவிருப்பதால், இதுவரை அமுதனும் மகியும் சந்தித்துக் கொள்ளவில்லை என்பதால், மகியை சந்திக்கும் எண்ணத்தில் தான் அமுதன் மகியை டின்னருக்கு அழைத்து வரும்படி சுடரொளியிடம் கூறியிருந்தான். ஆரம்பத்தில் சுடர் இங்கு வந்த போது இருந்ததற்கும், இப்போது அவள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மகி தான் காரணம் என்பதால் அவனை காண வேண்டும் என்று அமுதன் ஆவலாக இருந்தான்.

ஆனால் மகிக்கு அந்த அளவுக்கு அமுதனை பார்க்கும் ஆவல் இல்லை, சுடரொளியை பொறுத்த வரை தன்னை விட அமுதனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது அவனுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. அமுதனும் சுடரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள், அவனது நட்பு தான் அவளது தனிமைக்கு மருந்தாக இருக்கிறது, இருவரும் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் அண்ணன் தங்கை போலத்  தான் இருவரும் பழகுகின்றனர். என்பதெல்லாம் அவன் அறிந்திருந்தாலும், அமுதன் என்று வந்தால் தன்னை அவள் முற்றிலும் மறந்து விடுவதாக தோன்றியது.  இவர்களது பழக்கம் சிறிது காலமாக இருந்தாலும்  எப்போதும் அவன் சுடரொளியை பற்றி நினைப்பது போல் அவள் தன்னை நினைப்பதில்லையோ என்று தோன்றியது. ஆனால் நான் மட்டும் ஏன் எப்போதும் அவளையே நினைத்துக்  கொண்டிருக்கிறேன்? அது எதனால்? என்று அவன் நினைத்துப் பார்த்ததில்லை.

டின்னருக்கு அவன்  வரமுடியாது  என்று மகி சுடரிடம் கூறினான். ஆனால் அவள் அவனை கட்டாயப்படுத்தி அழைத்தாள். உடன் அறிவழகனையும் அழைத்தாள். அவன் ஊருக்கு செல்ல வேண்டியிருந்தது. அவர்கள் செல்ல வேண்டிய நேரத்திற்கு தான் அவன் கிளம்ப வேண்டும் என்பதால், இன்னொரு நாள் அமுதனை பார்த்துக் கொள்வதாக அவன் சொல்லிவிட்டான். சுடரொளியின் தம்பிகளையும்  பார்த்து வெகு காலம் ஆனதால் அவர்களையும் அழைத்து வரும்படி அமுதன் கூறியிருந்தான். அவள் பேச்சை மறுக்க முடியாமல் மகியும் அவர்களோடு கிளம்ப வேண்டியிருந்தது.

அமுதனை நேரில் சந்தித்த போது தன் மனதில் உள்ள எண்ணத்தை வெளிப்படையாக அவன் காண்பிக்கவில்லை, நன்றாக தான் பேசினான். ஆனாலும் சுடர் அமுதனை கண்டதும், அவனோடு மட்டுமே பேசிக் கொண்டிருந்தாள். தான் இங்கு வந்திருக்கவே வேண்டாம் என்று தான் அந்த நேரம் மகிக்கு தோன்றியது. இன்று காலையில் அமுதனை வழியனுப்ப  விமான நிலையம் கிளம்ப வேண்டும், அதனால் மகி துணைக்கு வர வேண்டும் என்று சுடரொளி அவனிடம் பேசினாள். முதலில் அவளிடம் வரமுடியாது என்று சொல்ல நினைத்து, பின் அவனை வழி அனுப்பிவிட்டு அவள் திரும்பி வர இரவாகிவிடும் என்பதால் வருவதாக ஒத்துக் கொண்டான்.

வந்ததிலிருந்தே மகி அமைதியாக தங்களை கவனித்துக் கொண்டிருந்ததை கவனித்த அமுதன்,

“மகி கொஞ்சம் சுடர்க்கிட்ட தனியா பேசணும்..” என்று சொல்லிவிட்டு அவனது பதிலை கூட எதிர்பார்க்காமல், சுடரின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு கொஞ்சம் தள்ளி நின்றான்.

மகியை ஒருமுறை பார்த்தவள், பின் அமுதனிடம் திரும்பியவள், “என்ன சார்லி, எதுக்கு இப்போ தனியா கூட்டிட்டு வந்த?” என்றுக் கேட்க,

ஒருமுறை மகியை திரும்பி பார்த்தவன், “மகியோட முகத்தை பாரேன், வந்ததுல இருந்து என்னையே முறைச்சிக்கிட்டு இருக்கான்..” என்றதும்,

அவளும் திரும்ப ஒருமுறை பார்த்துவிட்டு, “என்னடா சொல்ற, எதுக்கு மகிழ் உன்னை முறைக்கணும்?” என்றுக் கேட்டாள்.

“ம்ம் காதலில் இதெல்லாம் சகஜம், தன்னோட ஆள் தன்னை விட்டுட்டு, இன்னொருத்தர் கூட கடலை போட்டுக்கிட்டு இருந்தா இப்படித்தான் பொறாமை வரும், அது முறைச்சு பார்க்கச் சொல்லும்..” என்று அதற்கு பதில் கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.