(Reading time: 16 - 31 minutes)

கிழ் மீது தனக்கு இருக்கும் காதலை அறிந்த பின், அவர்கள் வீட்டிற்குள் நுழையும் போது சுடரொளியை புது வித உணர்வு ஆட்கொண்டது. இதுவரை அவர்களெல்லாம் தன் தந்தை மூலமாக தனக்கும் உறவினர்களாய் ஆனவர்கள். ஆனால் இனி அவள் இந்த வீட்டின் மருமகளாக மாறிவிட்டால், அவர்களெல்லாம் இன்னும் தனக்கு நெருக்கமானவர்கள் ஆகிவிடுவார்கள் இல்லையா? அதை நினைத்து உள்ளம் பூரித்தப்படியே உள்ளே நுழைந்தாள்.

வரவேற்பறையில் கலை யாரிடமோ கொஞ்சம் கோபமாக பேசிக் கொண்டிருந்தார். உடன் பாட்டியும் அமர்ந்திருந்தார். இவளை பார்த்தும் இருவரும் வா என்று கூப்பிடவில்லை.

“இன்னும் எத்தனை நாள் இப்படி இருப்பீங்க.. நான் இந்த வீட்டு மருமகளா ஆயிட்டா என்கிட்ட பேசுவீங்க தானே..” என்று மனதில் நினைத்து அவர்களை பார்த்து புன்னகைத்தப்படியே,

“எப்படி இருக்கீங்க பாட்டி.. எப்படி இருக்கீங்க பெரியம்மா..” என்றுக் கேட்டதும், இருவரும் தங்களுக்குள் பார்த்துக் கொண்டு, ஒரு தலையசைவில் நலமாக இருப்பதாக கூறினார்கள்.

இதுவரையிலும் அவர்கள் கடுமையாக பேசுவதால், அவளாக சென்று அவர்களிடம் பேச மாட்டாள். அப்படியே பேசினாலும், உறவு முறை வைத்தெல்லாம் அழைக்கமாட்டாள். இன்று மட்டும் என்ன? என்று அதிசயத்து பார்த்தனர்.

இதில், “பூங்கொடி அத்தை எங்கே இருக்காங்க..” என்றுக் கேட்டப்படியே உள்ளே சென்றாள்.

இதுவரை ஆன்ட்டி என்று தானே அவள் அழைப்பாள், எனவே அவள் அத்தை என்று அழைத்ததை கேட்டு வியந்தப்படி, “இங்கே இருக்கேன் சுடர்..” என்று பூங்கொடி குரல் கொடுத்தார்.

அவர் அருகே அவள் வந்ததும், “இப்போ என்னை என்னன்னு கூப்பிட்ட?..” என்றுக் கேட்டார்.

“அத்தைன்னு கூப்பிட்டேன்.. ஏன் அப்படி கூப்பிடக் கூடாதா? முறைப்படி பார்த்தா உங்களை அப்படித்தானே கூப்பிடணும்..” எனவும்,

“ம்ம் இப்போவாச்சும் இதெல்லாம் தெரிஞ்சா சரி தான்.. இனி என்னை அப்படியே கூப்பிடு இதுவே நல்லா இருக்கு” என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

வழக்கமாக வீட்டிற்குள் வந்ததும், இவங்க எங்கே? அவங்க எங்கே?’ என்ற விசாரிப்புகள் முடிந்ததும், “கலை பெரியம்மா யார்க்கிட்டயோ கோபமா பேசிட்டு இருந்தாங்களே யார் அத்தை அவங்க?’ என்றுக் கேட்டாள்.

“அது பக்கத்து வீட்டுல இருக்கவங்கம்மா.. எப்பயாச்சும் இங்க வந்து கொஞ்ச நேரம் பேசிட்டு போவாங்க.. ரெண்டு நாள் முன்ன அவங்க பொண்ணை மாப்பிள்ளை வீட்ல இருந்து பார்க்க வந்திருக்காங்க, காலையில் வேலைக்கு போன பொண்ணுக்கிட்ட சாயந்திரம் சீக்கிரம் வான்னு சொல்லியிருக்காங்க.. ஆனா அந்த பொண்ணு வீட்டுக்கு லேட்டா வந்திருக்கு,

லேட்டா வந்தது மட்டுமில்லாம, வரும் போதே ஒரு பையனோட பைக்ல வந்து இறங்கியிருக்கு, இதைப்பார்த்து மாப்பிள்ளை வீட்ல இந்த சம்பந்தம் வேண்டாம்னு போயிட்டாங்க..”

“இதுக்கு ஏன் அத்தை வேண்டாம்னு சொல்லிட்டு போகணும்..”

“ஒரு பையனோட வந்து இறங்கியிருக்காளே அது போதாதா?”

“ஏன் பையனோட வந்து இறங்கறது தப்பா? அவன் அவளுக்கு ப்ரண்டா கூட இருந்திருக்கலாமே..”

“உண்மை தான் அந்த பொண்ணுக்கு அந்த பையன் ப்ரண்ட் தான்.. ஆனா பசங்க கூட ப்ரண்ட்னு சொன்னா சில பேருக்கு பிடிக்கறதில்ல”

“ஏன் அத்தை பசங்க கூட ப்ரண்டா இருக்கறது தப்பா” அவளுக்கும் லண்டனில் சில ஆண் நண்பர்கள் இருந்திருக்கிறார்களே, அதிலும் பெஸ்ட் ப்ரண்ட்னு சொல்ல வேண்டுமென்றால் அவள் சார்லியை தானே சொல்வாள். அதனால் பூங்கொடியின் எண்ணத்தை தெரிந்துக் கொள்ள வேண்டி அப்படி கேட்டாள்.

“பசங்க கூட நட்பா இருப்பது தப்பில்லம்மா, ஆனா எதுக்குமே எல்லை இருக்கு, இப்போ இந்த பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னா வீட்ல சொல்லியிருக்கலாம், அதை விட்டுட்டு அன்னைக்கு வேணும்னே லேட்டா வந்து, அவங்கக்கிட்ட தப்பா காட்டிக்க ப்ர்ண்டோட வந்திருக்கா.. இந்த பொண்ணு தான் இப்படின்னா, அந்த பையனாவது அவளுக்கு புத்தி சொல்லலாம் இல்ல, என்னத்தான் இந்த காலத்துல இதெல்லாம் தப்பில்லன்னாலும், முதல்முதலா பொண்ணு பார்க்க வர்றவங்களுக்கு பொண்ணை நல்லமாதிரியா தானே பார்க்க ஆசைப்படுவாங்க..

தன்னோட பொண்ணு இப்படி செஞ்சுடுச்சேன்னு இவ்வளவு நேரம் குறையா சொல்லிக்கிட்டு இருந்தாங்க.. கலைக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது.. பசங்க கூட ப்ரண்டா இருக்கறது, நேரம் தவறி வீட்டுக்கு வர்றது இதெல்லாம் விரும்பமாட்டா.. வீட்ல மலர், மணி, அருள் மூணு பேரும் கலைக்கு பயந்துக்கிட்டே இதெல்லாம் கரெக்டா பாலோ பண்ணுவாங்க.. அதான் அந்தம்மாக்கு அறிவுரையா சொல்லிக்கிட்டு இருக்கா..” என்று பூங்கொடி சொல்லிவிட்டு சென்றார்.

இதையெல்லாம் கேட்டு சுடர் ஒருவித குழப்பத்தில் இருந்தாள். இதுபோன்ற கட்டுப்பாடுகள் அவளுக்கு இருந்ததில்லை. இரவு வெகு நேரம் கூட ஆண், பெண் என அனைவரும் வெளியில் சுற்றியிருக்கிறார்கள். அது தவறு என்று சொல்ல அவளுக்கு யாரும் இருந்ததில்லை.

ஆனந்தியின் கண்டிப்பால் அமுதன் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தான். அவன் எப்போதும் சுடரொளியோடு இருப்பதால், அவளை தவறான பாதையில் செல்ல அவன் அனுமதித்ததில்லை. அவளுக்கு அது பாதுகாப்பாக தான் இருந்தது. இந்த மதுப்பழக்கம் கூட வேண்டாமென்று தான் அமுதன் கூறுவான். அவள் எப்போதாவது மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காக அவனிடம் அனுமதி வாங்கிக் கொண்டு தான் மது அருந்துவாள். மற்றப்படி ஒருவேளை அமுதனோடு நட்பு இல்லையென்றால் அவள் எப்படி மாறியிருப்பாளோ, ஆனால் இதுவரையில் மது அருந்துவதை தவிர, அவள் ஒழுக்கம் தவறி நடந்துக் கொண்டதில்லை.

ஆனால் இதற்கே தன்னை இந்த வீட்டு மருமகளாக அனைவரும் ஏற்றுக் கொள்வார்களா? என்ற குழப்பத்தோடு அமர்ந்திருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.