(Reading time: 11 - 22 minutes)

அவள் அமேலியாவை நோக்கி தலையைத் திருப்பி எதுவும் பேசாதே என்பது போல் வாய் மேல் கை வைத்து சைகை காட்டியது போலிஸ்காரனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

வசந்த் கார் இன்ஜினை உசுப்பினான்.

"காரை நிறுத்துங்க" போலிஸ்காரன் கட்டளையிட்டான்.

வசந்த் காரை நிறுத்தினான்.

பின் இருக்கையின் கண்ணாடியை கீழே இறக்குமாறு கட்டளையிட்டான் போலிஸ்காரன். குடும்பத்தினருக்கு பயம் பிடித்துக்கொண்டது. என்ன செய்வதென்று புரியாமல் விழித்தார்கள்.

"கண்ணாடியை கீழே இறக்க சொன்னேன்"

வேறு வழியில்லை என்று புரிந்துகொண்ட மேகலா மெதுவாய் கண்ணாடியை கீழே இறக்கினாள். போலிஸ்காரனின் விழிகள் அமேலியாவை துளைத்தெடுத்தன.

அமேலியா பயத்தாள். மேகலாவின் மேல் சாய்ந்துகொண்டாள். அமேலியாவின் மேல் சந்தேகம் கொண்ட போலிஸ்காரன் வசந்தை நோக்கினான்.

"யார் இவங்க?"

வசந்த் என்ன சொல்வதென்று விழித்தான்.

"இவங்க பேரு என்ன?"

வசந்தும் நாராயணனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"என்ன பதிலே சொல்லமாட்டுறீங்க?" அதிகார தோரணையில் போலிஸ்காரன் கேட்டான்.

வசந்த் காரை விட்டு கீழே இறங்கினான். "இபோ என்ன சார் உங்களுக்கு வேணும்?"

"இவங்க யாரு?"

"நான் கட்டிக்க போற பொண்ணு"

மேகலா அதிர்ச்சியடைந்தாள். அவர்கள் பேசியது நாராயணனுக்கு சரியாக கேட்கவில்லை. பயத்தில் இருந்ததால் அதையெல்லாம் கேட்கும் நிலையிலும் அவரும் இல்லை.

"அவங்க பேரு?"

"அபர்ணா"

"அவங்க பேச மாட்டாங்களா?"

"அவங்களுக்கு ஆங்கிலம் தெரியாது. எங்க தாய்மொழி தமிழ்ல மட்டும் தான் பேசுவாங்க"

"தமிழ்...?" போலிஸ்காரன் புரியாமல் கேட்டான்.

"உலகத்தின் தொன்மையான மொழி"

"அவங்களும் சிட்டிசன்சிப் வாங்கிருக்காங்களா?"

"இல்லை சார், ஆறு மாசம் எங்களோட சேர்ந்து தங்க வந்திருக்காங்க. ஜனவரி மாசம் எங்களுக்கு திருமணம்"

"ஓ ஓகே. கொஞ்ச நாளைக்கு முன்னாடி இவங்கள ஹாலோவீன் திருவிழாவுல பார்த்தேன். பாக்கவே பரிதாபமா கிழிஞ்ச ஆடைகளை உடுத்திட்டு இருந்தாங்க"

வசந்திற்கு ஒருவாறாக நிலைமை புரிந்துபோனது. அந்த இடத்தில் தான் ஜானின் மூலமாக தன் வீட்டிற்கு அமேலியா வந்து சேர்ந்தாள் என புரிந்துகொண்டான் வசந்த்.

"கிழிஞ்ச ஆடையையா உடுத்திட்டா இருந்தாங்க?"

"ஆமா"

வசந்த் சிரித்தான்.

போலிஸ்காரன் புரியாமல் வசந்தையே பார்த்தான்.

"உங்களுக்கு பயமா இருந்ததா சார்?"

"புரியல"

"அபர்ணா அந்த வேஷத்துல இருந்ததை பார்த்து நீங்க பயந்திங்களா?" வசந்த் கதையை ஜோடிக்கத் துவங்கினான்.

"வேஷமா?"

"ஆமா சார், அந்த ஹாலோவின் திருவிழால பேய் வேஷம் போடுறேன்னு அந்த கோலத்துல சுத்திட்டு இருந்தா. அதை நீங்க தப்பா புரிஞ்சிட்டு இருந்திருக்கிங்க"

"ஓஓ" என விசில் அடித்த போலிஸ்காரன் புரிந்தது போல் தலையாட்டினான். "ஓகே மிஸ்டர்…?"

"வசந்த்"

"ஆ ஆங் வசந்த் உங்களை தொந்தரவு செய்ததுக்கு சாரி"

"இட்ஸ் ஓகே சார். உங்க கடமையை தான செஞ்சிங்க. இப்போ நாங்க கிளம்பலாம்ல. உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனையில்லையே?".

"தாராளாமா மிஸ்டர் வசந்த்"

காரில் ஏறிய வசந்த் சிட்டாக பறந்தான்.

"மாட்டிப்போம்னு பயந்துட்டேன்" முதல் வார்த்தையை உதிர்த்தாள் மேகலா.

"அந்த போலிஸ்காரன்கிட்ட என்ன சொன்ன? அந்த பொண்ணை பத்தி தான உங்கிட்ட விசாரிச்சான்?"

"ஆமா"

"எப்படி சமாளிச்ச?" என்றார் நாராயணன் யோசனையாய்.

வசந்த் பதில் பேசவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.