(Reading time: 11 - 22 minutes)

அமேலியா - 57 - சிவாஜிதாசன்

Ameliya

ப்ராங்க்ளினின் சந்திப்பு வசந்தின் மனதில் பல கேள்விகளை சுழன்றடிக்க செய்தன. இதுவரை அவன் மனதில் கட்டப்பட்ட பிம்பங்கள் அத்தனையும் சுக்கு நூறாக உடைந்து நொறுங்கின.

உடல் மட்டுமே காரை கட்டுப்படுத்தி பயணம் செய்துகொண்டிருந்தது. உள்ளம் எதையோ தேடி எங்கோ பறந்துகொண்டிருந்தது. அவன் இதயம் எப்போதும் இல்லாத அளவு வேகமாய் துடிக்க முகம் ஏனோ கலவரமாய் காட்சி தந்தது.

"வசந்த்" மேகலா மெல்லமாய் அழைத்தாள்.

வசந்தின் காதில் எதுவும் விழவில்லை. பின்னாலிருந்த அமேலியா வசந்தின் நிலையை புரிந்துகொள்ள முடியாமல் தவித்தாள். இருவருக்குள்ளும் மொழி தடையாக இருப்பது அவளுக்கு வேதனையாக இருந்தது.

"வசந்த்"

சிந்தனையோடு இருந்த வசந்த் வேண்டாவெறுப்பாக முகம்சுழித்தபடி, "சொல்லு அக்கா" என்றான்.

"அவர் பேரு என்ன?"

"யாரு?"

"அதான் ரெஸ்டாரண்ட்ல உன் கூட பேசினாரே"

"ஃப்ராங்க்ளின்"

"அவர் உனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரா?"

"கொஞ்சம் பேசாம வரியா" வசந்த் கோபத்தில் எரிந்து விழுந்தான்.

"இப்போ உன் அக்கா அப்படி என்ன கேட்டுட்டான்னு நீ கோபப்படுற?" நாராயணன் பொறுமையோடு கேட்டார்.

"அப்பா பிளீஸ் எதுவும் பேசாதிங்க எனக்கே குழப்பமா இருக்கு"

"தெளிவான முடிவு எடுக்கலன்னா இப்படி தான் குழப்பத்தோட நாட்களை தள்ளவேண்டி வரும்"

வசந்திற்கு கோபம் தலைக்கேறியது. அதை சமாளிக்க நீண்ட மூச்சினை இழுத்து விட்டான்.

"இதுக்கு தான் இந்த ராத்திரி வேளையில வெளியே வரக்கூடாதுன்னு சொல்லுறது. யாரு என் பேச்சை கேக்குறிங்க" நாராயணன் தனக்குள்ளாகவே புலம்பினார்.

மேற்கொண்டு யாரும் எதுவும் பேசவில்லை. மொழியை மறந்தவர்கள் போல அமைதியாக அமர்ந்திருந்தனர். கார் மிதமான வேகத்தோடு சென்றுகொண்டிருந்தது. யாரிடமும் சந்தோசம் காணப்படவில்லை.

திடீரென ஒரு கை அவர்கள் காரை நிறுத்துமாறு பணித்தது. வசந்த் அதிர்ச்சியடைந்தான். உடனிருந்தவர்களும் அதை எதிர்பார்க்கவில்லை. அவ்வாறு நடக்கும் என்று அவர்கள் பயந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கையை சுமந்து பயத்திலிருந்து வெளியே வந்தார்கள். இனி நடக்கப் போவதை எவ்வாறு கையாள்வது? எப்படி சமாளிப்பது?

காரை நிறுத்துமாறு போலிஸ்காரன் கட்டளையோடு கை காட்டினான். காரின் வேகம் மெதுவாக குறைந்து அவனை நோக்கி சென்று மெதுவாக தேங்கி நின்றது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

நாராயணனின் இதயம் படபடவென துடித்தது. கடைக்கண்ணால் அமேலியாவைப் பார்த்தார். மேகலா அமேலியாவை பின்னால் தள்ளிக்கொள்ளுமாறு கையை பிடித்து இழுத்தாள்.

அமேலியாவின் கண்கள் காரை நோக்கி வரும் போலிஸ்காரனை பார்த்தன. அவள் உடல் பயத்தால் சில்லிட்டது. அந்த போலிஸ்காரனை அமேலியா இன்னும் மறக்கவில்லை. நாதியற்ற நிலையில் அமெரிக்காவில் சுற்றிக்கொண்டிருந்தபோது தன்னை மடக்கிய போலிஸ்காரன் இவன் என அமேலியா நொடிப் பொழுதில் ஊகித்துக்கொண்டாள்.

வசந்த் கார் கண்ணாடியை இறக்கினான். "சொல்லுங்க சார்" பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வசந்த் பேசினான்.

"பேமிலியோட வெளியே போறிங்க போல" போலிஸ்காரன் பேச்சை துவங்கினான்.

"வீட்டுக்கு போயிட்டு இருக்கோம் சார்"

"உங்கள எங்கயோ பாத்திருக்கனே" போலிஸ்காரன் வசந்தை புதிரோடு பார்த்தான்.

வசந்தின் உள்ளத்தில் பயம் உருவானது. "நான் விளம்பர கம்பனியில வேலை செய்யிறவன். எங்காவது லொக்கேஷன் பாக்க போயிருக்கலாம். அப்போ நீங்க பாத்திருக்கலாம் சார்"

"இருக்கலாம்" என்ற போலிஸ்காரன் தன் சக போலிஸ் நண்பனை பார்த்தான். அவன் வசந்தின் கார் எண்ணை வைத்து குறிப்புகளை அலசிக்கொண்டிருந்தான்.

"முடிஞ்சிதா?" போலிஸ்காரன் சத்தமாக கேட்டான்.

"இன்னும் ரெண்டு நிமிஷம்" திரையைப் பார்த்தபடி சொன்னான் மற்றொருவன்.

"சார் எங்களுக்கு நேரமாகுது, சீக்கிரம் உங்க ப்ரொசிஜர்ஸ் முடிங்க"

போலிஸ்காரனின் கண்கள் நாராயணனையும் உள்ளே இருந்த மேகலாவையும் பார்த்தன.

"நீங்க அமெரிக்கர்களா?" சந்தேகத்தோடு கேட்டான் போலிஸ்காரன்.

"இரண்டு வருஷத்துக்கு முன்னாடி சிட்டிசன்ஷிப் வாங்கிட்டோம்"

"நீங்க எந்த நாட்டுகாரங்க?"

"இந்தியர்கள்.." வசந்த் பொறுமையிழந்தான்.

"எல்லாம் சரியாயிருக்கு" இரண்டாவது போலிஸ்காரன் சத்தமாக சொன்னான்.

"நாங்க கிளம்பலாமா சார்?" வசந்த் படபடப்போடு கேட்டான்.

"தாராளமா" என்ற போலிஸ்காரன் மேகலாவின் முகத்தை இறுதியாக நோக்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.