(Reading time: 17 - 34 minutes)

“அப்போ இந்திரவிழாக்காக புகார் வந்திருந்த மணிமேகலா தெய்வம் பெண் உருவத்துல பதுமபீடிகையை வணங்க வந்திருந்தது.  கவலையோட நின்றிருந்த இவங்களை பார்த்து உதவ முன் வந்தது”

விடிவெள்ளி வெளிச்சத்தில், இத்தனை நேரம் மறுபேச்சின்றி கதையை கேட்டபடி படுத்திருந்த நிஷ்டா துள்ளி எழுந்து அறையின் விளக்குகளை ஒளிரவிட்டாள்.

“நிறுத்துங்க பாட்டி! மணிமேகலை ஒரு பொண்ணு தானே? எதுக்காக தெய்வம்னு சொல்றீங்க? கதைய மறந்துட்டீங்களா? இல்லை தப்பு தப்பா கதை சொல்றீங்களா?” இரு கைகளையும் இடுப்பில் வைத்து கல்யாணியை கேள்வி கேட்ட விதத்தில் ‘யாருகிட்ட? என்னை ஏமாத்த முடியாது’ என்ற தோரணை இருந்தது.

வானை பிளந்த மாருத வேகன் என்ற மக்களின் முழக்கம் வானையும் மெரினாவையும் மிரட்டிக்கொண்டிருக்க, தன் முழு வேகத்தோடு மின்னல் சீற, சங்கரோ எரிச்சலில் சீறிக்கொண்டிருந்தான். 

“மூளைக்கெட்ட ஜனங்க! பறந்தானாம் காப்பாத்தினானாம்..., லூசுங்க மாதிரி ஒன்னு சேர்ந்து, எங்களை வேற நாயிங்க கணக்கா இங்க காக்க வச்சிருக்குங்க.  எல்லாம் அவனை சொல்லனும்.  பேரை பாரு மாருத வேகனாம்.  மூஞ்சியும் அவனும்....” கோபத்தில் கையில் சிக்கிய நகர நாயகனின் உருவத்தை தாங்கியிருந்த காகிதம் சுக்கலானது.

“என்ன சர் செய்றீங்க? யாராவது பார்த்தா என்னாகிறது?” பதறி அவன் கையிலிருந்த காகிதத்தை பறித்த சுந்தரத்தின் கண்கள் சுற்றும் முற்றும் யாராவது தங்களை கவனிக்கிறார்களா என்று விரைந்து சுழன்றது.

அந்த வார்த்தைகள் சங்கரின் கோபத்திற்கு தூபம் போட, சுந்தரத்தின் சட்டையை கொத்தாக பிடித்தான்.

“பார்த்தா? பார்த்தா என்னய்யா? நானும் பார்த்துக்கிட்டே இருக்க... மக்களுக்கு நம்ம மேலிருந்த மரியாதையே போச்சுயா.  சில தப்பான அதிகாரிகளால காவல் துறை மேல நம்பிக்கை இல்லாமயிருந்தது உண்மைதா.  அதுக்காக நல்லவங்க யாருமே இந்த துறைக்கு வரக்கூடாதா இல்லை மக்களுக்கு சேவை செய்ய கூடாதா?” சிவந்து துடித்த கண்களில், அத்தனை ருத்ரம் குடியேறியிருந்தது சங்கரிடம்.

“நம்ம மேல மரியாதை இல்லைதா.  நீங்க செய்த காரியத்தை யாரவது பார்த்திருந்த நம்மளை இங்கேயே கொன்று புதைச்சிருப்பாங்க சர்.  இங்க இருக்க எல்லாருமே அவன் மேல பித்து பிடிச்சு சுத்துற கூட்டம்” பதட்டமும் ஆதங்கமும் போட்டியிட நிதர்சனத்தை எடுத்து சொல்ல

“அவங்களுக்கு மட்டும்தா அவன் மேல பித்தா? எனக்கில்லை பித்து? இந்த காக்கி சட்டை மேல? என்னோட இந்த வேலை மேல? மக்களுக்கு நல்லது செய்யனும்னு துடிக்குதே! அது ஏன் யாருக்கும் புரியவே மாட்டிங்குது?”

சங்கரின் இளம் வயது கனவு, லட்சியம் அனைத்துமே காக்கி சட்டை தான்.  சிறுவயதில் மகனின் ஆசையை ஏற்ற பெற்றவர்களால், தோளுக்கு மேல் அவன் வளர்ந்து நின்ற போது ஒப்ப முடியவில்லை.  கையூட்டு இல்லாது நியாயமான முறையில் எந்த அரசு பணியிலும் அமரமுடியாத சூழ்நிலையில் நடுத்தர வர்கத்தை சேர்ந்த சங்கரால் காக்கி சட்டையை கையால் தொடவாவது முடியுமா என்று அவனுடைய தந்தை கவலையில் மூழ்கினார்.  ஆனால் சங்கரோ அதை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.  நினைத்ததை சாதித்துவிடும் தன்னம்பிக்கையோடு பட்ட படிப்பை முடித்தவன், போட்டி தேர்விற்கு தயாரானான்.  இந்திய அளவிலான தேர்வில் பங்கேற்று வெற்றிக் கண்டான்.  அவன் கடும் உழைப்பு நல்ல மதிப்பெண்ணை பெற வைத்திருந்தது.  எஸ்.பி.யாக பதவியேற்று பணியில் சேர்ந்து திருச்சி மக்களுக்கு சேவை செய்திகொண்டிருந்த வேளையில் வந்தது அந்த நாள்.  அவன் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம், சென்னைக்கு இடமாற்றம்.  மகிழ்ச்சியோடு கிளம்பி வந்தவனுக்கு சில மாதங்கள் வாழ்வின் வசந்த காலம். 

அவனுடைய நேர்மையும், கடமை தவறாத கண்ணியமும் சென்னையிலும் புகழை தேடித் தந்தது.  சங்கரின் வீரத்திலும் கம்பீரத்திலும் மயங்கி காதலில் விழுந்தாள் சுமித்ரா.  மக்கள் சேவையில் தன்னை அர்பணித்து ஆனந்தம் கண்டிருந்தவனுக்கு சுமித்ராவின் காதல் வரமாக கிடைத்தது.  அவளின் கடைசியாண்டு படிப்பு முடிந்ததும் திருமணம் செய்வதாக இருவீட்டிலும் முடிவு செய்திருந்தனர்.  எல்லாம் சரியாக போய் கொண்டிருந்த போதுதான் மாருத வேகன் நகரத்தில் உதித்திருந்தான்.  அதன் பிறகு சங்கரின் வாழ்வே தலை கீழாய் மாறிவிட்டது.   

க்களின் நிற்காத மாருத வேகன் என்ற முழக்கமும், சங்கரின் மனக்குமுறலும் இடி முழக்கமாய் வானத்தில் பட்டு தெறிக்க அவன் கண்களோ இலக்கில்லாமல் மக்கள் கூட்டத்தை வெறித்தது.

“பாரு சுந்தர்!” மக்கள் கூட்டத்தை நோக்கி கைக்காட்டி, “நன்றி கெட்ட மக்கள்! இராத்திரி பகல்னு பார்க்காம எவ்வளவு ஓடியிருப்ப? எத்தனை செய்திருப்ப இவங்களுக்காக? எவனோ ஒருத்த பறந்தா... ஆபத்திலிருந்த சிலரை காப்பாத்தினான்ன உடனே நம்மளை சுத்தமா மறந்துட்டாங்க.  அவனை பார்க்க இவங்கெல்லாம் கூடியிருக்காங்க.  ஆனா நாம... இப்போ கூட இந்த மக்களோட நலனுக்காக பாதுகாப்புக்காக தானே வந்து நின்னுட்டிருக்கோம்.  அது ஏன் இவங்களுக்கு புரிய மாட்டேங்குது?” சங்கரிடம் கோபம் குறைந்து ஆதங்கம் வெளிவரவும் சுந்தரத்துக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.