(Reading time: 17 - 34 minutes)

கடந்த பத்து மாதங்களாக சங்கரின் கோபத்தையும், அதன் பின்விளைவுகளையும் அருகிலிருந்து கண்டிருந்த சுந்தரத்துக்கு அவன் எதையாவது செய்து வைத்தால் இந்த கூட்டமே தங்களுக்கு எதிராய் திரும்பிவிடுமே என்பதே திக் திக்கென்றிருந்தது.  இப்போது அவன் கோபம் குறைந்தது புரிந்து,

“விடுங்க சர்! இதெல்லாம் எத்தனை நாளுக்கு? என்னைக்கா இருந்தாலும் போலீஸ் கெத்து திரும்பி வரும்” என்று சொல்லிக் கொண்டிருக்கையில் கூட்டத்தில் ஒரு பெண்ணின் முகம் நன்கறிந்தாதாக இருக்கவும், “ஒரு நிமிஷம் சர்” என்றுவிட்டு தன் மேலதிகாரியின் பதிலுக்கும் காத்திராது அப்பெண்ணை தேடிச் சென்றான்.

ஹே சுமி!” என்று வியந்த தீபா, “ஏன்டி சொல்லலை?” என்று குறைபடவும்

“என்ன சொல்லலை?” எரிச்சலாக வந்த வார்த்தைகளின் சூட்டில் அவள் ருசித்து கொண்டிருந்த குளுமையான ஐஸ் க்ரீம் உருகிவிட்டது.

‘சும்மா நை நைனு... மாருத வேகன் எப்போ வரப்போறாரோ, இவளுக வேற.  அவன் தொல்லை தாங்காமதா திருட்டுதனமா வந்திருக்க’ மனம் அதன் பாட்டில் புலம்ப, தோழியரோடு கூட்டத்தை நோக்கி நடந்தாள் சுமித்ரா.

“அவரோட பரந்த தோளும், மார்பும், முறுக்கிவிட்ட மீசையும், உரமேறின புஜங்களும்” அனிதாவின் வர்ணனையும் அதில் வழிந்த ஏக்கமும் மனதை உருத்த, விருப்பமே இல்லாமல் திரும்பி தோழியின் முகத்தை பார்த்தாள்.

தன்னையை மறந்து நின்றிருந்தவளின் பார்வையை தொடர்ந்து இவளும் பார்க்க, காவல்துறை காரின் மீது சங்கர் கம்பீரமாக அமர்ந்திருந்தான்.

“அய்யய்யோ!” என்று சுமித்ரா அலறியதில் தெளிந்த மற்ற இரு பெண்களும்,

“என்னடி ஆச்சு? ஏன் இப்படி கத்துற?” என்று ஒரே சமயத்தில் கடுகடுக்க..

இருவரின் கைகளை பிடித்து இழுத்தபடி “வாங்கடி அந்த பக்கம் போயிடலாம்” அவசரமாக கூட்டத்தினுள் கலந்தாள்.

“அவர் வராருனு ஏன்டி சொல்லலை?” சுமித்ராவின் முறைப்பில் அனிதா வாயை மூடிகொள்ள தீபாவோ, “இவ்வளவு தூரம் வந்துட்டோம்.  அவரையும் ஒரெட்டு பாத்துட்டு போயிடலாமே” பின்னால் திரும்பி திரும்பி சங்கர் உட்கார்ந்திருந்த திசையை பார்த்தபடி சுமித்ராவின் இழுப்புக்கு சென்றாள்.

திடீரென நடையை நிறுத்தி தோழியரின் கைகளை விடுவித்தவள், “எனக்கும் சங்கருக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகியிருப்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?” பதட்டத்தை சமாளித்து பொறுமையாக கேட்க... 

அவள் கேள்வியில் குழம்பிய பெண்களிருவரும், “என்னடி உனக்கு மறதி நோய் ஏதுமிருக்கா? நிச்சயத்தன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் அட்டை போல உங்கூடவே தானே ஒட்டிக்கிட்டிருந்தோம்.  எங்களுக்கு உங்க நிச்சயம் தெரியாம இருக்குமா?”

அவர்களை முறைத்த சுமி, “நம்ம நட்பு மேல இருக்குற மதிப்புல வந்தீங்கனு நினைச்சு, நான் கேவலமா ஏமாந்து... பிறகு நீங்க விட்ட ஜொள்ளுல நனைஞ்சது மறக்குமா?” கேட்டிருந்த தோழியரிருவரும் அசடு வழிய சிரித்தனர்.

“வழிஞ்சது போதும்! சங்கருக்கு நான் இங்க வந்தது தெரியாதுடி.  அவனுக்கு மாருத வேகன் என்ற பேரே ஆகமாட்டிங்குது.  அன்னைக்கு நகரத்து நாயகனு ஒரு கட்டுரை படிச்சிட்டிருந்த, திடீர்னு வீட்டுக்கு வந்தவ கையிலிருந்ததை வாங்கி பார்த்துட்டு அந்த கத்து கத்துனா.  என்ன பேசினா ஏது பேசினான்னு தெரியாது.  அரை மணி நேரம் வச்சு செஞ்சுட்டா.  ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சது, மாருத வேகனை அவனுக்கு பிடிக்கலைனு.  அதனாலதா அவனுக்கு சொல்லாம உங்களோட வந்த.  ஆனா இப்ப நீங்க விட்ட ஜொள்ளுல நனைஞ்சு என்னை கண்டுபிடிச்சிருவானோ?” அவசரமாக சுமித்ரா தன்னிலையை விளக்க, இப்போது முறைப்பது இவர்கள் முறையானது.

“சரி சரி முறைக்காதீங்க! என்னை எப்படியாவது காப்பாத்துங்கடி” சுமித்ரா அபயம் வேண்டிய அடுத்த நொடி அவளின் கைபேசி அலறியது.

“இது வேற நேரங்காலம் தெரியாம” புலம்பியபடி அதை எடுத்து பார்த்தவள் அசையாமல் நின்றுவிட்டாள்.

தோழியின் அதிர்ந்த தோற்றத்தில் “யாரு?” இருவரும் ஒருவரையொருவர் பார்த்து முனுமுனுத்தபடி கைபேசியை எட்டிபார்த்து, அதில் தெரிந்த சங்கரின் படத்தில் அதிர்ந்தனர்.

சுமித்ரா சங்கரை பற்றியும் அவன் கோபத்தை பற்றியும் சொல்லியிருக்கிறாள்.  அவனுக்கு தெரியாமல் தான் மாருத வேகனைக் காண வந்திருக்கிறோம் என அறிந்தவர்களுக்குள் சிறு பயம் முளைத்திருக்க, அடுத்த நிமிடம் அவனிடமிருந்து வந்த அழைப்பு அவர்களை கலவரபடுத்தியது.

சற்று முன் சுந்தரம் பார்த்தது சுமித்ராவைதான்.  உடனே சங்கரிடம் சொல்லலாம் என்றும், பிறகு உறுதி படுத்தி கொண்டு சொல்லலாம் என்று முடிவெடுத்து தான் அவளை தேடிச் சென்றான்.  இவன் அவர்களை நெருங்கும்போது, சரியாக சுமித்ரா கூட்டத்தில் கலந்துவிட்டாள்.  இல்லையேல் அவளிடம் பேசிவிட்டு சங்கரிடம் அழைத்து சென்றிருப்பான்.  அது முடியாமல் போனாலும் வந்திருப்பது சுமித்ராதான் என்பதை சங்கரிடம் சொல்லிவிட்டான். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.