“நான் சாத்விக்கை தான் காதலிக்கிறேன்..” விபாகரனிடம் தெளிவாக கூறியது இப்போது அவளது ஞாபகத்திற்கு வந்தது. அப்போதே சாத்விக் யாரென்பது விபாகரனுக்கு தெரியும்.. ஆனால் இப்போதும் அதை நினைவில் வைத்திருப்பானா?
முதலில் யாதவி என்ற ஒருவளை அவன் நினைவில் வைத்திருப்பானா? என்பதே கேள்வித்தான், அவன் மட்டுமல்ல சாத்விக்கும் தான் அவளை நினைவில் வைத்திருப்பானா? அவளுக்கு தெரியவில்லை. அவர்கள் அவளை மறந்துவிடுவதே நல்லது என்று தான் எப்போதும் அவள் நினைப்பது.
தன் வாழ்க்கையில் அவள் இந்த நிலையில் நிற்க ஏதோ ஒருவகையில் இருவரும் காரணம், ஆனாலும் அவள் எப்போதும் அப்படி நினைப்பதில்லை. அவள் வாழ்க்கை இப்படி அமைவதற்கு முற்றிலும் அவள் மட்டுமே காரணம், அவள் மட்டும் சரியாக இருந்திருந்தால் இப்படி ஒரு நிலையில் தான் இருந்திருக்க மாட்டோம் என்பதை அவள் உணர்ந்து தான் இருந்தாள். அதை எப்போதும் மனதில் நினைப்பதால் தான், இதுவரையில் அவர்களைப் பற்றி அடிக்கடி கேள்விப்பட்ட போதிலும், இப்போது நேரில் பார்க்கும் போதும் அவளுக்கு அவர்கள் மேல் கோபம் வரவில்லை.
பாலா, மதுரிமா மூலமாக அவர்கள் பேச்சு வீட்டில் எழும்போதும் சரி, பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் அடிக்கடி அவர்களை பார்க்கும் போதும் சரி அவர்களை பற்றி சிறு கோபமோ வருத்தமோ இருந்ததில்லை. கோபம் இல்லையென்பதால் அவர்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் இதுவரையில் அவளுக்கு தோன்றியதும் இல்லை. அவர்களை விட்டு விலகியிருக்க வேண்டும், இங்கு வருவதற்கு முன் அவள் வாழ்க்கையில் முன்பு சம்பந்தப்பட்டவர்கள் யாரையும் பார்க்கவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். ஆனால் இனியும் அது முடியுமா?
இதையெல்லாம் நினைத்தப்படி யாதவி இருவரையும் பார்த்துக் கொண்டே இருக்க, அதை இருவரும் உணர்ந்தார்களோ, என்னவோ.. ஒரே சமயத்தில் யாதவி இருக்கும் திசையில் சாத்விக்கும் விபாகரனும் திரும்பி பார்க்க, அவர்கள் தன் பக்கம் திரும்புவதை கண்டு யாதவி உடனே ஜன்னல் பக்கமிருந்து விலகி ஒளிந்துக் கொண்டாள்.
யாரோ பார்ப்பது போல் இருந்ததால் ஒருமுறை திரும்பிப் பார்த்த சாத்விக், பின் சாதாரணமாக முன்பு இருந்தப்படியே நின்றுக் கொண்டான்.
ஆனால் விபாகரனுக்கோ ஏற்கனவே இங்கு வந்ததில் இருந்தே அப்படி ஒரு உணர்வு தோன்றியதால், இப்போதும் யாரோ தன்னை தொடர்ந்து பார்ப்பது போல் உணர்ந்து திரும்பி பார்த்தவன், அந்த திசையை பார்த்தபடியே சிறிது நேரம் நின்றிருந்தான். ஆனால் அனைவரும் பார்ட்டியில் இருக்க, அங்கிருந்து யார் பார்க்க முடியும் என்று நினைத்தவன், திரும்ப மனசே இல்லாமல் திரும்பிக் கொண்டான்.
விபாகரனும் திரும்பியப் பின் மெதுவாக ஒளிந்துக் கொண்டிருந்த யாதவி மீண்டும் ஜன்னல் பக்கம் வந்தவள், மீண்டும் இப்போது விபாகரனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சாத்விக்கையாவது அடிக்கடி திரைப்படங்களில் பார்த்திருக்கிறாள். ஆனால் 5 வருடங்களுக்கு பின் இப்போதுதான் விபாகரனை நேரில் பார்க்கிறாள். இதுவரை அவனைப்பற்றி பத்திரிகைகளிலும் பாலாவின் வாய்மொழி மூலமாகவும் தான் கேட்டு தெரிந்து கொண்டிருந்தாள். இப்பொழுது வெகு நாட்களுக்கு பிறகு நேரில் பார்த்ததில் உண்மையிலேயே அவளது மனம் மகிழ்ச்சி அடைந்தது. சற்று கூட மாற்றமில்லாமல் அப்படியே இருந்தான். உண்மையில் சொல்லப் போனால் இன்று தான் அவனை ஆராய்ந்து பர்க்கிறாள்.
சிறிது நாட்களுக்கு முன் சாத்விக்கின் திருமண செய்தியை பத்திரிகைகளில் பார்த்து அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையப்போவதை நினைத்து உண்மையிலேயே மகிழ்ந்தாள். அதேபோல் விபாகரனுக்கும் நல்ல வாழ்வு அமைய வேண்டும், அவனுக்கு அவள் கொடுத்தது ஏமாற்றத்தை மட்டும் தான், அந்த குற்ற உணர்வு அவளுக்கு இருக்கிறது. அதனால் அவனை உண்மையாக நேசிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணந்துக் கொள்ள வேண்டும். என்று நினைத்தவள், உடனே அருகில் நின்றிருந்த மதுரிமாவை பார்த்தாள்.
மதுரிமா விபாகரன் வீட்டிற்கு சென்று வந்ததிலிருந்தே அவளுக்கு விபாவின் மீது நேசம் துளிர்க்க ஆரம்பித்துவிட்டது என்பது யாதவிக்கு தெரிந்தது தான், எந்தவொரு விஷயமாக இருந்தாலும் மதுரிமா யாதவியிடம் சொல்லிவிடுவாள். ஆனால் இதைப்பற்றி இதுவரையிலும் சொல்லியதில்லை. ஆனால் மதுரிமாவின் உள்ளத்தை அவள் புரிந்துக் கொண்டாள். இப்போது விபாகரனுக்கு இருக்கும் அந்தஸ்துக்கு அவனுக்கு மதுரிமா பொருத்தமாக இருப்பாள். அதனால் விபாகரன் அவளை மணந்தால் நன்றாக இருக்கும் என்று யாதவி மனதிற்குள் நினைத்தாள்.
ஆனால் அவள் நினைத்தப்படி எல்லாம் நல்லப்படியாக நடந்தால், அனைவரையும் இப்படி அடிக்கடி பார்க்கும் சூழல் ஏற்படும், அப்போது இனியும் இந்த வீட்டில் தொடர்ந்து இருக்க முடியுமா? என்பது சந்தேகம் தான்,
ஆனாலும் இத்தனை வருடமாக பாதுகாப்போடு இருந்த இந்த இடத்தை விட்டு வேறு எங்கு செல்வது என்பதுதான் யாதவிக்கு தெரியவில்லை. அப்படியே போக வேண்டும் என்றாலும் புவனாவும் பாலாவும் அப்படியே விட்டு விடுவார்களா? மதுரிமா தான் அதை ஏற்றுக் கொள்வாளா? ஆனால் இன்னொரு முறை விபாகரனையோ, சாத்விக்கையோ, முக்கியமாக அவள் தந்தையையோ நேருக்கு நேர் சந்திக்க கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள். யார் மனதும் புண்படாமல் அனைவரையும் விட்டு விலகுவது எப்படி? என்று அந்த நிமிடத்திலிருந்தே சிந்திக்க ஆரம்பித்திருந்தாள். அந்த நேரம் அவள் அங்கு நின்று வேடிக்கை பார்ப்பதை இரண்டு கண்கள் ஒருவித கோபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது.