(Reading time: 17 - 33 minutes)

பாலா.. தேவி எங்கடா?” அனைவரும் நின்று பேசிக் கொண்டிருந்த போது விபாகரன் தான் கேட்டான். தெரியாதவர்களை கூட அறிமுகம் செய்து வைத்தவன், இதுவரையில் தேவியை அறிமுகம் செய்து வைக்கவில்லையே, வீட்டுக்கு வரும்போது தான் அழைத்து வரவில்லை, இங்கேயாவது தேவியை பார்க்கலாம், ஒருவேளை அவளை காண வேண்டும் என்று முன்பே நினைத்ததால் தான் இப்போது யாரோ தனக்கு சம்பந்தப்பட்டவர்கள் இங்கு இருப்பது போல் தனக்கு தோன்றுகிறதா? என்றெல்லாம் யோசித்த விபா, தேவிக்கும் எனக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான். இருந்தாலும் தேவியின் நினைவு வரவே சாதாரணமாகவே அவளை இவ்வளவு நேரம் ஆகியும் பார்க்கவில்லையே என்பதால் பாலாவிடம் கேட்டான்.

“அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை டா.. அதான் அவ ரூம்ல ரெஸ்ட் எடுக்குறா.. வீட்டுக்கு கிளம்பும் போது வேணும்னா அவ ரூம்ல போய் பார்த்துட்டு வரலாம்டா..” என்று பாலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“மஞ்சுளா ம்மா.. எப்படி இருக்கீங்க..?” என்று குரல் கேட்டு திரும்பி பார்த்தால் பன்னீர் அங்கு நின்றுக் கொண்டிருந்தார்.

பார்ட்டி என்றாலே பன்னீருக்கு கண்டிப்பாக மது இருக்க வேண்டும், சில முறை சாத்விக்கோடு அது போன்ற பார்ட்டிக்கு செல்வார். அங்கு சென்று குடிக்க ஆரம்பித்து விட்டால் சாத்விக் பன்னீர் என்பவரை மறந்துவிட்டு தான் வீடு வர வேண்டும், ஏனென்றால் தன்னிலை மறக்கும் அளவுக்கு அவர் மது அருந்திவிட்டு எங்காவது விழுந்து கிடப்பார்.

என்ன இருந்தாலும் சாத்விக் முதலாளி இல்லையா? அதனால் சாத்விக்கின் கண் பார்வையை விட்டு அகன்று எங்கேயாவது மூலையில் சென்று மது அருந்துவார். அவரின் நடவடிக்கை சாத்விக்கிற்கு தெரியாமல் போகாது, இருந்தாலும் அவர் யாதவியின் தந்தை என்பதால் கண்டும் காணாமல் இருந்துவிடுவான். அங்கே வேலை செய்பவர் யாரிடமாவது சொல்லி அவரை பாதுகாப்பாக் அவர்களது அவுட்ஹவுஸ்க்கு அழைத்து வரச் சொல்லி கூறுவிட்டு அவன் கிளம்பிவிடுவான்.

அவனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்பது மட்டுமல்லாமல், இப்போது யாதவி கிடைக்க வேண்டும் என்பதால் மட்டுமே அவரை உடன் வைத்திருக்கிறான். மற்றப்படி அவரைப்பற்றி முன்பே யாதவி மூலம் அறிந்து வைத்திருப்பதால் பன்னீரிடம் பெரியதாக மரியாதை இருந்ததில்லை. அதுமட்டுமில்லாமல் வெளியில் தனக்கென ஒரு மதிப்பு உள்ளதால் அவரை தானே வீட்டுக்கு அழைத்துச் செல்வோம் என்றெல்லாம் அவன் நினைத்ததில்லை. 

விபாகரன், பாலா, அஜய் யாருக்குமே மது அருந்தும் பழக்கம் இல்லாததால் அவர்கள் பார்ட்டியில் மதுபானம் யாருக்கும் வழங்கப்படவில்லை, பன்னீருக்கு எப்படி பார்ட்டி என்றால் மது இருக்க வேண்டுமோ, அதேபோல் மதுரிமாவின் தந்தை பூபதிக்கும் அந்த பழக்கம் உள்ளது.

மதுபானம் இல்லாமல் ஒரு பார்ட்டியா என்று சலித்துக் கொண்டவர்கள். தனி அறையில் பூபதி ஏற்கனவே வாங்கி வைத்த மதுபானத்தை இருவரும் அமர்ந்து அருந்திவிட்டு இப்போது பார்ட்டியில் கலந்துக் கொண்டனர்.

இந்த இடத்தில் பன்னீரை பார்க்காத மஞ்சுளாவும் அர்ச்சனாவும் அதிர்ச்சியானார்கள்.

“இந்த ஆள் இன்னுமா உயிரோட இருக்கான்.. இந்த ஜென்மல்லாம் உயிரோட இருந்து என்ன நல்லது நடக்க போகுது, ஆண்டவா இந்த ஆளை திரும்ப ஏன் எங்க கண்ணுல காட்ற..” என்று யாருக்கும் கேட்காதபடி அர்ச்சனா வாய்க்குள்ளேயே முனுமுனுத்தாள்.

மஞ்சுளாவோ முதலில் சாத்விக் இப்போது இவரா? யாதவிக்கு சம்பந்தப்பட்டவர்களையெல்லாம் விபாகரன் பார்க்கும்படியாக ஒரு சூழ்நிலை வந்துவிட்டதே என்று அதிர்ச்சியை உள்வாங்கியப்படி விபாவை ஒருமுறை பார்த்துவிட்டு,

“பன்னீர் அண்ணா நீங்களா? எப்படி இருக்கீங்க? நீங்க சென்னையிலையா இருக்கீங்க..” என்றுக் கேட்டார்.

“நீங்களாவது என்னை ஞாபகம் வச்சு பேசறீங்களே ரொம்ப சந்தோஷம் ம்மா.. முன்ன எப்படி இருந்தீங்க.. இப்போ எப்படி மாறிட்டீங்க.. பெரிய உயரத்துக்கு போனாலும் பழசை மறக்கக் கூடாதும்மா, அதை உங்க புள்ளைக்கு சொல்லுங்க.. என்ன யாருன்னே தெரியாதது போல உங்கப் புள்ளை நடந்துக்கிறான்.

ரத்னா ஆசைப்பட்டது நடந்திருந்தா நான் உங்க புள்ளைக்கு என்ன முறை ஆகியிருக்கணும்னு தெரியும் இல்ல.. ஆனா அது நடக்கல, என் பொண்ணு..” என்று அவர் மேலே பேசுவதற்குள்,

“அஜய்..” என்று விபாகரன் குரல் கொடுத்ததும்,

“இங்கபாருங்க இந்த பார்ட்டில ட்ரிங்க்ஸ் அலோவ்ட் கிடையாது முதலில் இந்த பார்ட்டியிலிருந்து கிளம்புங்க..” என்று கொஞ்சம் தள்ளி நின்றுக் கொண்டிருந்த அஜய் அங்கு வந்து பன்னீரை அங்கிருந்து அகற்ற முயற்சித்தான்.

அதுவரையிலும் விபாகரன் யாதவிக்கு தெரிந்தவனா என்று முன்பு ஏற்பட்ட சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள சாத்விக் பன்னீர் பேசியதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவன், இப்போதோ..

“அங்கிள் என்ன இதெல்லாம், முதலில் வீட்டுக்கு கிளம்புங்க..” என்று கூறினான்.

அதற்குள் அங்கு வந்த பூபதி, “பன்னீர் எதுக்குடா இங்க வந்த..” என்று பன்னீரை வலுக்கட்டாயாமாக அழைத்துச் சென்றார்.

“மது உங்கப்பாவுக்கு எப்படி பன்னீரை தெரியும்?” என்று பாலா மதுரிமாவை கேட்கவும், அவள் தெரியாது என்பது போல் தலையசைத்தாள்.

“பார்த்தாலே ஏதோ டாஸ்மாக் ப்ரண்ட்ஷிப்னு தெரியுது.. இது ட்ரிங்ஸ் பார்ட்டி கிடையாதுன்னு முன்னாடியே சொல்லியும் உங்கப்பா ஏன் தான் இப்படி நடந்துக்கிறாரோ..” என்றி சலித்துக் கொண்டவன்,

“விபா உங்க பேமிலிக்கு பன்னீரை முன்னமே தெரியுமா?” என்று கேட்க,

“தெரியும், ஆனா சொல்லிக்கிற அளவுக்கு முக்கியம் கிடையாது..” என்று சொன்ன விபாகரன்,

“சரி எல்லாம் சாப்பிடுங்க, கிளம்பலாம்..” என்று கட்டளை பிறப்பித்தான். அவனுக்கு அதற்கு மேல் அங்கு இருக்க விருப்பமில்லை. பழைய நினைவுகள் நெஞ்சை கீறிவிட்டு சென்றிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.