(Reading time: 13 - 26 minutes)

ஜான்சனின் உடல் அருகே நண்பர்கள் வெறுமையோடு அமர்ந்திருந்தனர். வீரன் ஒருவன் திடீரென சோகப் பாட்டை முணுமுணுக்க மற்றவர்களும் அந்த பாட்டை பாடத் துவங்கினர்.

ஜான்சனுக்கு பிடித்த பாட்டு. அவன் அடிக்கடி முணுமுணுக்கும் பாட்டு. அந்த பாட்டை பாடாத நாட்களே இல்லை. எனவே, அந்த பாட்டை பாடியே அவனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள் வீரர்கள். அந்த இரவு நீண்டுகொண்டே போனது.

றுநாள் காலை ஹகீம் மார்க்கெட்டில் வேலை செய்துகொண்டிருந்தான். அவன் முகம் மகிழ்ச்சியால் பிரகாசமடைந்திருந்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வேலை செய்துகொண்டிருந்தான்.

தன் பெற்றோரை கொன்ற ஜான்சன் இறந்துவிட்டான். இனி வாழ்க்கையில் வேறென்ன வேண்டும். சிறிய காலத்திலேயே தன் பெரிய கடமையை  முடித்துவிட்டதாய் எண்ணினான் ஹகீம்.

தீவிரவாதிகளை நினைத்து தான் அவன் உள்ளம் லேசாக நடுங்கிற்று. அடுத்து, அவர்களிடத்தில் இருந்து தப்பிக்க வேண்டும். அதற்கான வழியை கண்டுபிடிக்கவேண்டும். என்ன செய்வது?

அக்கேள்வியை சமீபகாலமாகவே ஹகீம் தன் மனதினுள் கேட்டுக்கொண்டே இருக்கிறான். விடை தான் கிடைக்கவில்லை. அவனுக்கு தெரிந்த ஒரே விடை, இந்த ஊரில் இனி இருக்கக்கூடாது. வெகு தூரம் செல்லவேண்டும். தீவிரவாதிகள் தன்னை தேடாதவாறு கண்டுபிடிக்காதவாறு அந்த இடம் அமையவேண்டும்.

ஊரை விட்டு செல்வது ஹகீமிற்கு பெரிய விஷயமில்லை. பஹீராவின் படிப்பு தடைபடும். அதுவே அவனுக்கு பெரிய கவலையாக இருந்தது. கடவுளே! ஒன்று கிடைத்தால் ஒன்று தடையாக இருக்கிறது. எதைத் தான் செய்வது என ஹகீம் குழம்பினான்.

அவன் வேலை செய்யும் இடத்திற்கு ராணுவ ஜீப்புகள் வந்தன. ஹகீமின் உள்ளத்தில் பயம் உருவானது. பதற்றமடைந்தான்; கை கால்கள் நடுங்கின; அவன் சந்தோசங்கள் நொடிப் பொழுதில் மறைந்தன. எனினும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாது, அவர்கள் வேறு வேலையாகக் கூட வந்திருக்கலாம். அவசரப்படாமல் பொறுமையோடு என்னவென்று பார்ப்போம் என முடிவெடுத்தான் ஹகீம்.

ஜீப்பில் இருந்த ராணுவ வீரர்கள் ஒவ்வொரு கடையாகச் சென்று விசாரித்தனர். கடைக்காரர்கள் ராணுவத்தினரைக் கண்டு பயந்தார்கள். ராணுவத்தினரின் ஆங்கிலம் கடைக்காரர்களுக்குப் புரியவில்லை. ஆனால், யாரையோ தேடி அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.

ஒரு கடைக்காரருக்கு ஹகீமைத்தான் தேடி வந்திருக்கிறார்கள் என்பது புரிந்து போனது. 'அந்த சிறு பயலைத் தேடி எதற்காக ராணுவம் வந்திருக்கிறது' என்ற யோசனையோடு ஹகீம் இருக்கும் இடத்திற்கு ராணுவ வீர்ர்களை அழைத்துச் சென்றார்.

ஹகீம் கடையின் தூணிற்கு பின்னால் ஒளிந்தபடி தன்னை நோக்கி வருபவர்களை பயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான். அவனிருக்கும் இடத்திற்கு அனைவரும் வந்து சேர்ந்தனர்.

"ஹகீம்! ஹகீம்!" கடைக்காரன் அழைத்தான்.

மறைந்து நின்றுகொண்டிருந்த ஹகீம் வேறு வழியில்லாமல் வெளியே வந்தான்.

"இவன் தான் ஹகீம்" என கடைக்காரன் அடையாளம் காட்ட ராணுவத்தினரின் கண்கள் ஹகீமை துளைத்துவிடுவதைப் போல் பார்த்தன.

"இவங்க உன்னை தான் தேடி வந்திருக்காங்க ஹகீம்"

"எதுக்கு?"

"தெரியல"

"அவங்க கிட்ட கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்" ஹகீம் அப்பாவியாய் கேட்டான்,

"எனக்கு ஆங்கிலம் அவ்வளவா வராதேப்பா" என்றவர், தனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் என்ன விஷயம் என்று கேட்டார்.

ராணுவத்தினரில் ஒருவன் ஆங்கிலத்தில் சில வார்த்தைகளை உதிர்த்தான். அது கடைக்காரருக்கு சரியாகப் புரியவில்லை.

"சின்ன விசாரணை தானாம் போயிட்டு வா. சின்ன பசங்களை அவங்க ஒண்ணும் பண்ணமாட்டாங்க". கடைக்காரர் ஹகீமிற்கு ஆறுதல் கூறினார்.

ராணுவவீரன் ஒருவன் ஹகீமின் தோள்பட்டையில் கைபோட்டபடி அவனை அழைத்துச் சென்றான்.

'என்ன நடக்கப் போகுதோ' என கடைக்காரர் மன சஞ்சலத்தோடு ஹகீமை பார்த்தபடி இருந்தார்.

ங்கலான மஞ்சள் வெளிச்சம் நிரம்பியிருந்த டெண்ட்டினுள் ஹகீம் அமர்ந்திருந்தான். அந்த இடம் நரகத்தின் நுழைவாயில் போல் அவனுக்குத் தோன்றியது. தவறு செய்துவிட்டோமா? அதனால், சிக்கிக் கொண்டோமா? பஹீராவின் கதி என்ன ஆகும்?

அவனிருக்கும் இடத்தை நோக்கி யாரோ வரும் காலடியோசை கேட்டது. தைரியத்தை வரவழைத்து திரும்பிப் பார்த்தான் ஹகீம்.

விஷமப் புன்னகையோடு வாட்சன் ஹகீமிடம் வந்து சேர்ந்தார். அவர் முகத்தில் இருந்த வெட்டுக் காயமும் அவரது விழிகளும் அவர் தோற்றத்தை மேலும் பயங்கரப்படுத்திக் காட்டின.

பொய்யான வாஞ்சையோடு ஹகீமின் தோள்களில் கைபோட்ட வாட்சன்,  "வாட்ஸ் யுவர் நேம்?" என ஆங்கிலத்தில் துவங்கினார்.

அவன் என்ன கேட்கிறான் என ஹகீமால் புரிந்துகொள்ள முடியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.