(Reading time: 13 - 26 minutes)

அவர்களின் அரட்டையில் எவ்வித இடர்ப்பாட்டையும் கர்னல் ஏற்படுத்துவதில்லை. அது வாட்சனுக்கு எரிச்சலை கொடுக்கும். வீரர்கள் சந்தோசத்தையும் தியாகம் செய்து பணி செய்யவேண்டும் என்ற கருத்துடன் வாழ்பவர். அதுவே கர்னலின் மேல் வெறுப்பு வர காரணம்.

"என் வயசு நாற்பத்தி இரண்டு. திடீர்னு சம்மந்தமே இல்லாம என் வயசை கேட்டது தான் என்னை யோசிக்க வச்சது கர்னல்"

"இன்னும் நீங்க பக்குவப்படுற காலம் வரல மிஸ்டர் வாட்சன். இன்னைக்கு பேசுனது நாளைக்கு பேச முடியாது. கருத்துக்கள் மாறும். நம்ம தான் அப்படி நடந்துகிட்டோமான்னு வேடிக்கையா யோசிக்க தோணும்"

"என்னைக்கும் என் முடிவை மாத்திக்கமாட்டேன் கர்னல். நான் வித்தியாசமானவன்"

"இதே நாற்பத்தி இரண்டு வயசுல உங்களை விட நான் வித்தியாசமா இருந்தேன் வாட்சன். அந்த நேரத்துல இந்த மாதிரி நீங்க எங்கிட்ட கேள்வி கேட்டுட்டு இருந்திங்கன்னா வேற மாதிரி பதில் சொல்லியிருப்பேன்".  

கர்னலின் கண்கள் வாட்சனை முறைத்தன. அந்த பார்வையின் வீரியம் வாட்சனின் இதயத்தை வேகமாய் துடிக்க வைத்தது.

"என்ன செஞ்சிருப்பிங்க கர்னல்?"

"அப்போ எனக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அதனால நகைச்சுவையா உங்களுக்கு பதில் சொல்லியிருப்பேன்"

கர்னல் சமாளிக்கிறார் என தெரிந்துகொண்ட வாட்சன் தனது பேச்சினை திசை திருப்பினார்.

"இன்னைக்கு ராணுவ முகாம் ரொம்ப அமைதியா இருக்குல்ல கர்னல். எப்பவும் இரவு நேரத்துல ராகம் பாடுறேன்னு ரோதனை கொடுப்பாங்க"

"எனக்கு அவங்க பாட்டுக்கள் பிடிக்கும் வாட்சன். அந்த கூட்டத்துல ரொம்ப அற்புதமா பாடுறவன் ஜான்சன் தான். இசைன்னா அவ்வளவு பிடிக்கும். சந்தோசம் துக்கம் கோபம் என எது வந்தாலும் எதோ ஒரு பாட்டு பாடுவான், அவன் ஏன் அப்படி செய்யுறான்னு எனக்கு தெரியாது. ஆனா இசை ஒருத்தன சாந்தப்படுத்தும்"

வாட்சன் சிரித்தான். "மேதாவி போல பேசுறிங்க கர்னல். இந்த பேச்சும் தீவிரவாதிகள்கிட்ட எடுபடாது. என்னைப் பொறுத்தவரை ராணுவம்கிறது எதிரிகளை கொல்லுறது மட்டும் தான்"

"ராணுவத்தினர் கொல்லப்பட்டா...?" என்ற கேள்வியை முன்வைத்த கர்னல் வாட்சனை உற்று நோக்கினார்.

"ஒண்ணு கொல்லணும் இல்ல சாகணும். இது தான் ராணுவ வீரர்களோட எழுதப்படாத விதி. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா கேப்டன். ஆஃப்கானிஸ்தான் போர்ல குண்டடி பட்டு என் வலது கண் பார்வை பறிபோயிடுச்சு. சில மாதங்கள் மருத்துவமனையில சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயம்"

கர்னல் அவர் பேசுவதை பெரிதாக காதில் வாங்காமல் சிந்தனையில் ஆழிந்திருந்தார். அவர் எண்ணம் முழுவதும் ஜான்சன் நிரம்பியிருந்தான். வாட்சன் தன் பேச்சை தொடர்ந்துகொண்டிருந்தார்.

"எனக்கு அதிர்ஷ்டவசமா கண் தானம் கிடைச்சது, ஒரு பாதிரியாரோடது. எல்லா மனிதர்களையும் கருணையோடும் கனிவோடும் பார்த்த விழி. ஆனா என்னால அப்படி யாரையும் பாக்க முடியல, மரணங்களை தான் அதிகமா பாத்திருக்கு"

ராணுவ வேனும் ஜீப்புகளும் ராணுவ முகாமிற்குள் நுழைந்தன. வீரர்கள் பதற்றமடைந்தனர். எல்லோர் முகத்திலும் சோகம் கலந்த மெளனம். வேனில் இருந்த வீரன் ஒருவன் கீழிறங்கி, பின் கதவை திறந்தான். அருகே இருந்த வீரர்கள் வேனின் உள்ளே ஏறி சவப்பெட்டியில் இருந்த ஜான்சனின் உடலை கீழிறக்க அதை மற்ற வீரர்கள் பெற்றுக்கொண்டனர். கர்னலின் இதயம் வலியால் துடித்தது. கண்களின் லேசான கண்ணீர்.

"உடலை பாக்குறிங்களா கர்னல்?" சவப்பெட்டியை கீழிறக்கியவன் கேட்க ஜார்ஜ் அதை மறுத்துவிட்டார்.

"இல்லை வேண்டாம்" என்ற இரு வார்த்தைகளோடு அந்த இடத்தை விட்டு நகரத் தொடங்கினார் கர்னல்.

"வாட்சன்"

"சொல்லுங்க கர்னல்"

"ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடிச்சிடுங்க"

"சரிங்க கர்னல்" என்றார் வாட்சன், கர்னலின் பின்புறத்தை முறைத்தபடி.

"சவப்பெட்டியை திறங்க" உத்தரவிட்டார் வாட்சன்.

திறக்கப்பட்டது. முகத்தில் ரத்தக் காயங்களோடு ஒளிகளற்ற கண்களோடு வாட்சனையே முறைத்தான் ஜான்சன். சாகும்முன் அவனை கொடூரமாக சித்திரவதை செய்திருக்கிறார்கள் என சொல்லாமல் உணர்த்தியது அவன் உடலில் இருந்த காயங்கள்.

அவனுக்கு நெருக்கமான நண்பர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அதில் ஒருத்தன் கதறி அழ மற்றவர்கள் அவனைத் தேற்றினர். வாட்சனுக்கு கோபம் தலைக்கேறியது. அழுதவர்களை அதட்டி அனைவரையும் கட்டுப்படுத்தினார்.

அந்த இரவு எந்த வீரரும் உறங்கவில்லை. கர்னலும் விழித்துக்கொண்டு தான் இருந்தார். மழையும் தூறிக்கொண்டு தான் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.