(Reading time: 13 - 26 minutes)

"உன் கடைக்கு பின்னால தான் தீவிரவாதிகள் கூடிப் பேசி திட்டங்களை தீட்டினாங்கன்னு இந்த பையன் வாக்குமூலம் கொடுத்திருக்கான்"

"அதை பத்தி எனக்கு எதுவும் தெரியாது"

"நீ அவங்களை பாத்ததில்லையா?"

"இல்லை. அந்த கடைக்கு நான் வாரத்துல இரண்டு மூணு தடவை தான் போவேன். என் தம்பி தான் கடையை பாத்துட்டிருந்தான்"

"அவன் பேரு?"

"கம்ரான் கான்"

"அவரை நான் பாக்கணுமே"

"இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அவனுக்கு பக்கவாதம் வந்து நடக்க பேச முடியாம போயிட்டான். இரண்டு வார்த்தைகள் பேச ஒரு நிமிஷம் எடுத்துப்பான். அதுவும் என்ன வார்த்தைகள்னு நமக்கு புரியாது. அவனால திட்டங்கள் தீட்ட முடியாது"

"அவன் தான் திட்டம் தீட்டினான்னு நான் சொல்லவேயில்லையே" வாட்சன் இப்ராஹீமை நெருங்கி கூரிய பார்வையை இப்ராஹீமின் முகத்தில் வீசியபடி கேட்டார்.

"அவன் நிலையை நான் எடுத்து சொன்னேன். நீங்க உண்மையை கூட சந்தேகமா தான பார்ப்பிங்க"

"ரொம்ப தெனாவட்டா பேசுற"

"நான் தவறு செய்யல. அந்த துணிச்சலா இருக்கலாம்.

"உன் துணிச்சலை நான் பாராட்டுறேன். எல்லா இடத்திலையும் துணிச்சல் எடுபடாது. ஏன்னா இந்த துப்பாக்கி துணிச்சல் இருக்கிறதால சுடாம போயிடாது" வாட்சனின் விழிகள் இப்ராஹீமை எச்சரித்தன.

இப்ராஹீம் பயமில்லாமல் வாட்சனை கையாண்டது அவருக்கு கோபத்தை உண்டாக்கியிருக்கலாம்.

"நீங்க கிளம்பலாம்" என வாட்சன் கூறியதும் துளியும் தாமதிக்காமல் இப்ராஹீம் கிளம்பினார்.

"டேய் சின்ன பையா நீயும் கிளம்பு" என வாட்சன் ஆங்கிலத்தில் கூறியது புரியாமல் பயந்தபடி அமர்ந்திருந்தான் ஹகீம்.

"ஐயா உன்னை வீட்டுக்கு போக சொன்னார்" என்றான் மொழிபெயர்ப்பாளன்.

ஹகீமிற்கு ஆச்சர்யம். "உண்மையை தான் சொல்லுறிங்களா? நான் கிளம்பலாமா?" மொழிபெயர்ப்பாளனிடம் மீண்டுமொரு முறை அப்பாவியாய் கேட்டான்.

"சீக்கிரம், அவன் மனசு மாறுறதுக்குள்ள இங்கிருந்து கிளம்பிடு"

கீம் அங்கிருந்து ஒடினான். அவனால் அதை நம்ப முடியவில்லை. மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. இருந்தும், மழைக்குப் போட்டியாக அவன் ஓட்டமும் அமைந்தது. மழையில் நனைந்தபடி ஓவென கத்தினான்.

'எல்லாம் முடிந்தது. நாம் தப்பித்துவிட்டோம்' என மகிழ்ச்சி மழையில் நனைந்தபடி ஓடியவன் திடீரென நின்றான். அவனுள் இருந்த குதூகலம் மறைந்து நெஞ்சில் பயம் குடிகொண்டது.

மழைக்கு ஒதுங்கியிருந்த இப்ராஹீம் ஹகீமின் ஆர்ப்பாட்டத்தை முறைத்தபடி நின்றுகொண்டிருந்தார். ஹகீம் மெதுவாய் அவர் முன் நின்றான். இப்ராஹீம் இமைக்காமல் ஹகீமின் முகத்தையே பார்த்தபடி இருந்தார்.

"எனக்கு என்னைக்கு நாள் குறிச்சிருக்க?"

ஹகீம் அதிர்ந்தான். "முதலாளி....!" அவன் குரலில் நடுக்கம்.

"அதாண்டா அந்த அமெரிக்ககாரனுக்கு நாள் குறிச்சு தீவிரவாதிங்ககிட்ட மாட்டிவிட்டியே, எனக்கு என்னைக்குனு கேட்டேன்?"

ஹகீம் தலையைத் தாழ்த்தி அமைதியாக நின்றான்.

"உனக்கு என்ன வயசு? ஒரு பதிமூணு பதினாலு இருக்குமா? இந்த வயசுலயே பழி வாங்குற எண்ணம் உன் ரத்தத்துல ஊறி போயிருக்கு. ஒரு அமெரிக்கன பழி வாங்கியாச்சு. இன்னும் லட்சம் பேரு இங்க இருக்கானுங்களே, அவங்கள எப்போ பழி தீர்க்க போற?"

"என் அப்பா அம்மாவ கொன்னவனை தான் நான் பழி வாங்கினேன் முதலாளி. இதுல என்ன தப்பு?"

"தப்பில்லையே. யார் சொன்னா தப்புன்னு? நீ செஞ்சது தப்பே இல்ல. அமெரிக்ககாரனுக்கு நீ செஞ்ச காரியம் தெரிய வந்து உன்ன கொல்லுவானே அதுவும் தப்பில்ல"

ஹகீம் முதலாளியின் முகத்தை நோக்கினான்.

"என்ன பாக்குற? நீ செஞ்சா சரி, அதே காரியத்தை அமெரிக்ககாரன் செஞ்சா தப்பா? இஸ்லாமிய மதம் பழிவாங்குறத தான் போதனை செஞ்சிருக்கா?"

கேள்விக் கணைகள் ஹகீமின் இதயத்தைக் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தன.

"எல்லாருக்கும் முடிவை கொடுக்குற அல்லா இருக்கும்போது நீ எடுத்த முடிவு துரோகம். ஒருத்தனை நம்ப வச்சு அழைச்சுட்டு போயி கொலை செஞ்சிருக்க. இது வீரமில்லை கோழைத்தனம். உனக்கு அவனை கொல்லணும்னு வெறி இருந்துச்சுன்னா, நேருக்கு நேரா நீ வீழ்த்தியிருக்கணும். நீ முதுகுல குத்திட்டு துள்ளி குதிச்சிட்டு வர. டேய் இங்க பாரு"

ஹகீம் தலை நிமிர்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.