(Reading time: 13 - 26 minutes)

அமேலியா - 59 - சிவாஜிதாசன்

Ameliya

ழையின் மெல்லிய சப்தம் ஹகீமின் காதில் நுழைந்து மெல்ல பய உணர்ச்சியைக் கிளறிவிட்டது. சில்லென்ற குளிர்காற்று அவன் உடலைத் தழுவி மனதையும் நடுங்கச் செய்தது.

'கதை முடிந்தது' ஹகீம் தனக்குத்தானே கூறிக்கொண்டான். தவறு நடந்திருக்கிறது. இல்லை, தவறு செய்துவிட்டோம் அவசர கோலத்தில் எடுத்த முடிவு எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விட்டது.

பஹீராவின் முகம் கண நேரத்தில் அவன் மனக்கண் முன்னால் தோன்றி அவன் கண்களில் கண்ணீரை வரவைத்தன. அவன் இமைகள் தாழ்ந்தன. பயத்தில் மூச்சுக்காற்று புயற்காற்றாக மாறியது.

ஹகீமின் கண்கள் தன் முதலாளியை நோக்கின. அவரின் முகத்தைப் பார்க்க அவனுக்கு பயமாய் இருந்தது. முதலாளி ஹகீமின் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். ஹகீம் கடினமாக உழைப்பவன். நேரம் அவனுக்கு முக்கியமில்லை காரியம் தான் முக்கியம்.

அவன் உழைப்பை எண்ணி பலமுறை முதலாளி வியந்திருக்கிறார். எதிர்காலத்தில் அவனுக்கு தன்னால் முடிந்த உதவிகளை அளித்து வாழ்க்கையில் உயர்த்திவிட வேண்டும் என அவர் மனதில் எண்ணியிருக்கிறார். அதை ஹகீமிடம் கூட பல முறை கூறியிருக்கிறார்.

ஹகீமும் முதலாளி மேல் நல்மதிப்பைக் கொண்டிருந்தான். சில நேரங்களின் கடின வார்த்தைகளால் அர்ச்சனை செய்திருந்தாலும் எந்த இடத்திலும் அவருக்கான மரியாதையை விட்டுக் கொடுத்ததில்லை.

துப்பாக்கியில் குண்டுகளை நிரப்பிய வாட்சன் ஹகீமின் முதலாளியை சில நொடிகள் நிமிர்ந்து பார்த்தார். பின் மீண்டும் துப்பாக்கியைப் பார்த்த வாட்சன் துப்பாக்கியை தடவியபடியே, "உங்க பேரு என்ன?" என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

ஆங்கிலம் தெரியாத ஹகீமின் முதலாளி அமைதியாக நின்றார்.

ஓரக் கண்களால் மொழிபெயர்ப்பாளனை நோக்கிய வாட்சன், "உனக்கு அதுக்குள்ள ஆங்கிலம் மறந்து போச்சா?" என கடுமையாகவும் அதே நேரத்தில் குரலில் மென்மையும் கொண்டு வந்து அதிகாரத்துடன் அதட்டினார்.

திடுக்கிட்டு பேய் கனவில் இருந்து விழித்தவனைப் போல் உடலில் ஒருவித அதிர்வோடு வாட்சனைப் பார்த்த மொழிபெயர்ப்பாளன், "மன்னிச்சிடுங்க மன்னிச்சிடுங்க" என படபடப்போடு ஹகீமின் முதலாளியைப் பார்த்தான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"ஐயா உங்க பேரை கேட்கிறார்"

"மொஹமத் இப்ராஹீம்" முதலாளியின் கண்கள் வாட்சனை நோக்கின.

"இந்த பையனை உனக்கு தெரியுமா?"

மொழிபெயர்ப்பாளன் முதலாளியிடம் தெரிவிக்க,  

"தெரியும். என் கடையில தான் வேலை பார்க்கிறான்"

"எத்தனை வருஷமா?"

"ஒரு வருஷமா தான். முதலாளியின் கண்கள் ஹகீமை சுட்டு வீழ்த்துவது போல் அனலை கக்கின.

"எத்தனை இடத்துல கடை வச்சிருக்க?"

"இரண்டு இடத்துல" என்று கடைகள் இருக்கும் இடத்தையும் குறிப்பிட்டார் முதலாளி.

"அஞ்சு நாளைக்கு முன்னாடி சரியா வெள்ளிக்கிழமை உன் இன்னொரு கடையிருக்க இடத்துக்கு இந்த பையனை நீ வேலைக்கு அனுப்புனியா?"

முதலாளியின் முகத்தில் லேசான கலவரம். ஹகீமின் முகத்தைப் பார்த்தார். நிலைமையை ஏற்கனவே அரசல்புரசலாக தெரிந்து வைத்திருந்தாலும். கேள்வியை எதிர்கொண்டு பதற்றமடைந்தார்.

"என்ன பேசாம இருக்க?" வாட்சன் அதிகார தோரணையில் கேட்டார்.

மொழிபெயர்ப்பாளன் பயந்தபடி, "சீக்கிரம் பதில் சொல்லுங்க இப்ராஹீம்" என்றான்.

இப்ராஹீம் ஹகீமைப் பார்த்தார். அவன் முகத்தில் கலவரம். முதலாளி கூறப்போகும் அந்த வார்த்தைகளில் தான் அவன் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. அவனுக்கு தெரிந்து இதுவரை இப்ராஹீம் பெரிய பொய்களைக் கூறியதில்லை. பொய்களை வெறுப்பவர். தனது குழந்தைகளின் சமாதானத்திற்காக சில நேரங்களின் பொய் கூறியதுண்டு.

ஹகீமின் மனதினில் மீண்டும் பஹீராவின் எண்ணங்கள். இனி அவள் நிலையென்ன? அவள் என்ன செய்வாள்? தன் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்துகொள்வாள்? எங்கு தங்குவாள்? அந்த பழைய இடிந்த அமேலியா வீட்டிலா? எத்தனை நாள் அங்கு தங்க முடியும்? பஹீராவுக்கு யார் அடைக்கலம் கொடுப்பார்கள்? ஹகீமிற்கு நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது.

"என்ன பதிலையே காணோம்?" என வாட்சன் வார்த்தைகளில் அமிலத்தைக் கலந்து கர்ஜித்தான்.

"இப்ராஹீம் தயவு செய்து சொல்லுங்க" மொழிபெயர்ப்பாளன் அவசரப்படுத்தினான்.

"ஆமா, அன்னைக்கு நான் தான் ஹகீமை அந்த மார்க்கெட்டுக்கு அனுப்பினேன்". நீண்ட நேரம் கழித்து வேதனையோடு பொய்யை வெளிப்படுத்தினார் இப்ராஹீம்.

"எதுக்கு அவனை அங்கு அனுப்புன?"

"எப்பவும் சில வேலைகள் அங்கு இருக்கும். அழுகிப்போன காய்கறிகளை அப்புறப்படுத்துறது, புதுசா வரும் மூட்டைகளை எடுத்து வைப்பது. இப்படிப்பட்ட வேலைகள்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.