(Reading time: 13 - 26 minutes)

"உன்ன காப்பத்தணும்னு நான் பொய் சொல்லல. பஹீராவுக்காக தான் அல்லா மேல பாரத்தை போட்டுட்டு பொய் சொன்னேன். எல்லா நேரத்திலயும் நீ தப்பிச்சிட்டே இருக்க முடியாது. செய்த பாவம் ஒரு நாளு திடீர்னு கூலி கொடுன்னு வந்து நிக்கும். அன்னைக்கு அது கேக்குற கூலியை உன்னால தர முடியாது"

முதலாளியின் கண்களில் கோபம் குறையாமல் மின்னிக்கொண்டிருந்தது. மழையின் வேகமும் சற்று அதிகரித்திருந்தது.

"இனி நான் உன்னை பாக்கவே கூடாது. கடை பக்கம் வந்திடாத. வேற எங்கயாச்சும் போய் வேலைய தேடு. செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடு. உனக்காக சொல்லல பஹீராவுக்காக சொல்றேன்"

ஹகீம் அமைதியாக நின்றான்.

"ஏன் நிக்கிற? கிளம்பு" என்றார் முதலாளி கோபமாக.

ஹகீம் மெதுவாய் அங்கிருந்து நடந்து சென்றான். சிறிது நேரத்திற்கு முன்னிருந்த மகிழ்ச்சி சுத்தமாய் வற்றிப்போய் சோகம் குடிகொண்டது. நடையின் வேகமும் குறைந்து என்ன செய்வதென்ற சிந்தனையும் இல்லாமல் உயிரற்ற உடல் நடந்து செல்வதை போல் அவன் நடந்து சென்றான்.

அவன் செல்வதைக் கூட பார்க்க விரும்பாத இப்ராஹீம் மழையை வெறித்துக்கொண்டிருந்தார்.

ழையில் நனைய விருப்பப்படாத மொழிபெயர்ப்பாளன் ராணுவக் குடிலில் ஓர் ஓரமாய் நின்றுகொண்டிருந்தான். குளிரில் தன் கைகளை பரபரவென தேய்த்து குளிருக்கு இதமாய் தன்னை சூடுபடுத்திக்கொண்டான்.

இரவு உணவை முடித்த வாட்சன் அமெரிக்க சிகரெட் ஒன்றை இதழில் பிடித்தபடி யோசனையோடு அங்கு வந்தார்.

"நீ இன்னும் என்ன செஞ்சுட்டு இருக்க?"

"உங்க கிட்ட சில விஷயங்கள் பேசணும் சார். அதான் காத்துட்டு இருக்கேன்"

சிகரெட் புகையை காற்றில் கலக்கவிட்டு கேள்விக்குறி பார்வையை மொழிபெயர்ப்பாளன் மீது வீசினார் வாட்சன்.

"இறந்து போன ஜான்சன் விவகாரம் தான் சார்" அப்பாவியாய் பேசினான் மொழிபெயர்ப்பாளன்.

வாட்சனின் விழி கூர்மையானது. "தெளிவா சொல்லு"

"ஜான்சன் இரண்டு வாரத்துக்கு முன்னால என்னை சந்திச்சு மாலிகான்னு ஒரு சின்ன பெண்ணை என் வீட்டுல சில காலம் வளர்க்க சொன்னார்"

மொழிபெயர்ப்பாளன் கூறியது வாட்சனுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. "யாரு அந்த மாலிகா?" என்று வினாவை குழப்பத்தோடு எழுப்பினார்.

"அது ஒரு புத்தியில்லாத பொண்ணு சார். எப்படி நடந்துக்கணும் என்ன செய்யணும்கிற அடிப்படை அறிவு கூட அதுக்கு கிடையாது"

"அந்த பெண்ணை எதுக்கு உன் வீட்டுல வளர்க்க சொன்னான் ஜான்சன்?"

"மாலிகா மேல அவருக்கு கரிசனம் உண்டு சார். அவளை தன்னோடு வளக்கணும்னு ஆசைப்பட்டாரு"

'ஈராக் குழந்தையை வளர்க்க அமெரிக்க ராணுவ வீரன் ஆசைப்பட்டிருக்கான். என்ன ஒரு முரண்! அவனுக்கு புத்தி மழுங்கிப் போச்சா?' என தனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டார் வாட்சன்.

"அந்த மாலிகா வீட்டுக்கு வந்ததுல இருந்தே எனக்கும் என் மனைவிக்கும் தினம் தினம் சண்டை சார். ஜான்சனுக்கு பயந்து தான் ஒண்ணும் செய்ய முடியாம தவிச்சிட்டு இருந்தேன்"

"இப்போ நீ என்ன சொல்ல வர?"

"அந்த பெண்ணை திரும்ப அவ வீட்டுக்கே அனுப்பிடுறேன் சார். ஏற்கனவே எங்க வீட்டுல ஜனத் தொகை அதிகம். இதுல இந்த பெண்ணை வச்சிட்டு கஷ்டப்பட முடியாது. இதை எதுக்கு உங்க கிட்ட சொல்லுறேன்னா நாளைக்கு ஜான்சனோட நண்பர்கள் என்னை தொந்தரவு செய்யக்கூடாது அதான் சார்"

"எதாவது செய் போ போ" என வாட்சன் சிகரெட் புகைத்தபடி அங்கிருந்து கிளம்பி சென்றார்.

மொழிபெயர்ப்பாளன் அங்கிருந்து சந்தோசமாக வீட்டை நோக்கி நடந்தான். மழை நின்று தூவானம் மட்டுமே தூறிக்கொண்டிருந்தது. மனிதர்களை எண்ணி இயற்கை அன்னை கண்ணீர் விடுவதைப் போலிருந்தது அந்த சாரல் மழை.

சுயநலம்! அதற்காகவே மனிதன் பிறக்கிறானோ என்று கூட அவள் நினைத்திருக்கலாம். மிருகங்கள் மரணத்தைப் பற்றிய புரிதல் இல்லாதவை. அவற்றிற்கு தெரியாது ஒரு நாள் நாம் கொல்லப்படலாம் அல்லது இயற்கையாக இறக்கலாம் என்று. ஆனால், மனிதன் அவ்வாறு இல்லை. தான் ஒரு நாள் இறக்கப்போவது அவனுக்கு தெரியும்.

அதுமட்டுமில்லாது தொடர்ச்சியாக மரணங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். பெற்றோர், உற்றார், உடன் பிறந்தவர்கள், மனைவி, பிள்ளைகள் என மரணங்களுக்கு தாரை வார்த்தும் எல்லா உண்மைகளும் தெரிந்தும் அவன் சுயநலமாகவே இருக்கிறான்.

வேடிக்கையான விந்தை! தினம் தினம் உடல் நோய், மன நோய் என அவதிப்பட்டும் சுயநலத்தை விட மறுக்கிறான். இந்த உலகில் இயற்கையும் மற்ற உயிர்களும் அழியாமல் வாழ வேண்டுமானால் மனித குலம் மரணமடைய வேண்டும். இல்லையேல் சுயநலத்திற்காக எல்லாவற்றையும் மனிதன் அழித்துவிடுவான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.