அவன் அவளையேப் பார்த்துக் கொண்டிருக்கவும்,
“இது எல்லாத்தையும் விட எனக்கு உங்களைப் பிடிச்சதுக்குக் காரணம், கல்யாணம் பற்றிப் பேசினப்போ, எனக்கு சம்மதம்னு மற்றவங்க சொன்ன பிறகும், எங்கிட்ட வந்து நீங்க சம்மதம் கேட்டது, அது என்னை மற்றவங்க எந்த வித கட்டாயமும் படுத்தக் கூடாதுன்னு நீங்க காமிச்ச அந்த அக்கறை தான் உங்க மேலே இருந்த பாசம் நேசமா மாற ஆரம்பிச்சது” என்று கூறவும், ஷ்யாம் அப்படியே அவளைத் தூக்கிச் சுற்றினான்.
மித்ரா அவனின் செய்கையில் திகைப்புற்றவளாக,
“அத்து என்ன பண்றீங்க?”
“ஹ. ஹ. சந்தோஷம்டா ரித்து. “
“அதுக்கு இப்படியா? எனக்கு தலை சுத்துது” என, ஷ்யாம் அவளைக் கீழே இறக்கினான்.
“என்ன அப்படி ஒரு சந்தோஷம்?” என்று மித்ரா கேட்க,
“நீ சொன்னியே. பாசம் நேசமா மாற ஆரம்பிச்சதுன்னு, அதுதான் சந்தோஷம். கல்யாண வாழ்க்கைக்கு அடிப்படை அந்த நேசம் தான்.”
“இதில் என்ன அத்தான் ஆச்சரியம்? எல்லோர் வாழ்க்கையும் இப்படிதானே இருக்கும்?”
“இல்லடா ரித்து. காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டா நேசம் தான் அடிப்படை. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதே பெற்றவங்க பார்த்து செஞ்சு வைக்கிற கல்யாணத்தில், கல்யாண உறுதிக்கும் கல்யாணத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அது தானாகவே உருவாகிவிடும். ஆனால் நம் கல்யாணம் ரெண்டு வகையிலும் இல்லை. நமக்குள்ளே நேசம் மலர நமக்கு டைம் கொடுக்கப் படலை. நமக்கு நாமே அந்த டைம் எடுத்துக்கிட்டோம். முதலில் அந்த காதலை உணர்ந்தவங்களுக்கு, அடுத்தவருக்கும் அதே காதல் தோன்றும் வரை காத்து இருக்கும் காலம் கொடுமை. அது தான் என்னை இயல்பை விட நிறைய விஷயங்களில் மாற்றி இருக்கு. “ என்றவன்,
“இப்போ என் டர்ன் இல்லையா? நீ டாக்டர் பேசினப்போ, அவங்க எதுவும் சொல்லியிருக்க மாட்டாங்களே” என்று கேட்கவும், அவள் ஆம் என்று தலை அசைத்தாள் . அதுவும் கொஞ்சம் எரிச்சலோடு தலையசத்ததைப் பார்த்தவன்,
“நோ கோபம்டா செல்லம். டாக்டர் உன்னைப் பற்றி எதுவும் சொல்லியிருக்க மாட்டாங்க. ஏன்னா, நான் கன்சல்ட் பண்ணினது எனக்காகத்தான்” என்று கூறவும், மித்ரா விழி விரிய அவனைப் பார்த்தாள். அவளின் பாவனையைப் பார்த்து, அவளின் மூக்கைப் பிடித்து ஆட்டியவன்,
“என்ன ஆச்சரியம் மித்ரா?” என்று கேட்டான்.
“நீங்க சொல்றது நிஜமா?
“நூறு சதவீதம் நிஜம் தான் ரித்து”
“ஏன்? நீங்க சைகியாட்ரிகிட் கிட்ட போற அளவிற்கு என்ன பிரச்சினை?
“பிரச்சினை இல்லைடா. எனக்கு சில விஷயங்களில் தெளிவு வேண்டி இருந்தது. அதான் போனேன்”
“என்ன?” என்பதைப் போல் பார்க்க,
“இதுக்காக நீ என்னைத் தப்பா நினைக்கக் கூடாது. நம்மோட வாழக்கையை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு போக, உன்னோட ஹெல்த் பற்றி ஒரு ஆலோசனை செய்யத்தான் டாக்டர் கிட்டே போனேன்”
“எனக்குப் புரியலை. அப்படின்னா அந்த சரவணன் சொன்ன மாதிரி உங்களோட என்னாலே குடும்பம் நடத்த முடியாதுன்னு நினைசீங்களா? “ என்று மித்ரா கேட்க,
“இல்லைடா. நான் உன்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு கேட்க நினைச்சேன்.”
இப்போதும் மித்ரா புரியாமல் விழிக்க,
“அதிகமா உணர்ச்சி வசப்படும்போது நீ மயக்கமாகிடற இல்லையா? அது என்னை ரொம்ப யோசிக்க வைச்சது மித்ரா. ஒருவேளை என்னோட நெருக்கத்தில், நீ மயக்கமாகிட்டால் நான் என்ன பண்றது ? உன்னை இயல்பா இந்த விஷயத்தை எப்படி எடுத்துக்க வைக்கிறது. இது பற்றித் தெரியத்தான் நான் போனேன். “
இதற்கு இப்படி ஒரு கோணம் இருக்கும் என்று மித்ரா நினைக்கவில்லை. ஷ்யாம் சொல்வது உண்மைதானே. அவளின் குறைபாடு இது என்கையில், அதைப் பற்றிய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் தானே என்று எண்ணத் தோன்றியது. மித்ரா யோசித்துக் கொண்டு இருக்கும்போதே,
“இது மட்டும் இல்லை மித்ரா. அடுத்து நீ குழந்தை உண்டானால், அதை தாங்கும் பலம் இருக்கிறதா, அதனால் உனக்கு எதுவும் பலவீனம் ஏற்படுமா என்றும் விசாரித்தேன்” என்றான்.
“ஆனால் இது எல்லாம் சாதாரண ப்ளட் டெஸ்ட்டில் தெரியுமா என்ன?
“இல்லை. ப்ளட் டெஸ்ட் எடுத்தது நீ மயக்கமாவதற்கு அனிமீக் மாதிரி எதுவும் காரணம் இருக்குமா என்று தெரியத்தான். அதோடு உன்னோட சின்ன வயசு ரிபோர்ட்ஸ் எல்லாம் எடுத்துட்டு போய்தான் நான் டாக்டர் கிட்டே பேசினேன்”
“ஒஹ். டாக்டர் என்ன சொன்னாங்க?