(Reading time: 12 - 24 minutes)

“அப்பாக்கு மட்டுமல்ல யாருக்குமே உன் மேல கோபமில்லை தாரூ..”, பரத்வாஜை முந்தியபடி சொல்லியிருந்தான் வெற்றி..

“மா..மா..”, நெகிழ்ந்துபோயிருந்தவளின் குரலில் கொஞ்சம் சோகம் மேலிட, “அ..ம்மா.. அம்மாக்கு என்னைப் பிடிக்கவே இல்லை..”, என்றிருந்தாள்..

“கீ..தா.. கீ..தாக்குத் தெரிஞ்சிருச்சா..??”, பதற்றமாகவே கேட்டிருந்தார் பரத்வாஜ்..

“ஹ்ம்.. தெரியும்ப்பா..”, எங்கோ பார்த்தபடி..

“நீயே சொல்லிட்டியா கண்ணா அவக்கிட்ட..??”, என்றவரின் குரலில் என்னவென்று விவரிக்க முடியாத உணர்வு..

“இல்லப்பா.. நிதின்.. அவன் மூலமாத் தெரிஞ்சிருக்கு..”, என்றவள் தனக்கும் தன் தாய்க்குமான உரையாடலைச் சொல்லி முடிக்க.. என்ன சொல்வதென்றே புரிந்திடவில்லை யாருக்கும்..!!

தாரிகையின் தலையை இதமாக வருடியவள், “தாரூ.. அம்மா ஏதோ அதிர்ச்சியில சொல்லிருப்பாங்க.. ஒண்ணுமில்லை.. நான் பேசிக்கறேன் அவக்கிட்ட.. நீ அவ பேசுனதை மனசில வெச்சுக்காதே என்ன..??”, சமாதனப்படுத்த முயன்றார் பரத்வாஜ்..

“எனக்குத் புரியுதுப்பா.. நான் முன்னமே சொல்லியிருக்கனும் இதை உங்ககிட்ட.. என்னவோ எனக்கு ரொம்பவே பயம்.. எங்கே சொல்லி என்னை வேண்டாம்ன்னு வீட்டைவிட்டுப் போகச் சொல்லிருவீங்களோன்னு.. சாரிப்பா..”, குற்றவுணர்வுடன்..

“வீட்டைவிட்டுப் போகச் சொல்றதா..?? எதுக்கு கண்ணா உன்னை போகச்சொல்லனும்.. நீ என் குழந்தைடா..”, என்றவருக்கு என்ன சொல்வதென்றே புரியாத நிலை.. உண்மையில் இப்படியொரு நிலைமையை எப்படி கையாள்வதென்றே தெரியவில்லை..!!

இச்சந்தர்ப்பத்தில் தான் சாதரணமாக உதிர்த்திடும் வார்த்தைகள் கூட பெரியதொரு விளைவை ஏற்படுத்துமென்று தெரியும் அவருக்கு.. அ வெரி க்ரிட்டிக்கல் சிட்டுவேஷன் என்றே சொல்லலாம்..!! கூடவே இணைப்பாக சிறிது தடுமாற்றமும்..!!

“அப்போ அம்மா மட்டும் ஏன் அப்படிச் சொன்னாங்க..??”, என்னவோ மனதில் கேட்க வேண்டும் என்று தோன்ற கேட்டேவிட்டிருந்தாள் தாரிகை..!!

எந்தக் கேள்வியை இவள் கேட்கக் கூடாது என்று பரத்வாஜ் நினைத்தாரோ அதைக் கேட்டே இருந்தாள் அவள்.. குரலில் அப்படியொரு வலி..!! பதிலளிக்கவே முடிந்திடவில்லை அவரால்..!!

“தாரூ.. அம்மா ஏதோ ஒரு கோபத்துல சொல்லிருப்பாங்கடாம்மா..”, வெற்றி அந்த சூழ்நிலையைக் கையாள முயன்றிட.. வேண்டாம் என்ற தலையசைப்பு மட்டுமே தாரிகையிடமிருந்து..!!

விழிகளும் தானாகவே மூடிக்கொள்ள..!!

என்ன செய்வதென்று தெரியாமல் பெரியவர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர் அமைதியாக.. அந்த அமைதி என்னவோ மூச்சுமுட்ட வைத்தது போலும்..!!

நிஷாதான் அதைக் கலைத்திட அக்கா என்று தாரிகையை அழைத்திருந்தாள்..!!

“சொ..ல்லு நிஷா..”, விழிகள் திறக்காது இதழ்களை மட்டும் பிரித்திருந்தாள் தாரிகை..

“நான்.. எனக்குத் தூக்கம் வருது.. நான் போயிட்டு வரட்டுமா..??”

“கிளம்புகிறாயா..?? எங்கே..?? அதுவும் இப்ப.. இந்த நேரத்துல..??”, பட்டென்று எழுந்தமர்ந்து பதற்றமாகவே தாரிகையிடமிருந்து வார்த்தைகள் வெளிவந்து விழ.. மற்ற இருவரின் மனதிலும் அதே கேள்வியே..!!

“தெரியலையே..”, என்றபடி சிறிது யோசித்தவள், “ஹான்.. இங்க முன்னாடி ஒரு கோவில் இருந்துச்சே அங்க இருந்துக்கறேன்..”, சாதரானமாய்..!!

“எ..ன்ன..து..??”

“ஏன்க்கா அங்க இருக்கக்கூடாதா..?? இல்லையே நான் வரும்போது பார்த்தேன்னே.. நிறைய பேர் அங்க இருந்தாங்களே..??”, என்றவளின் குரலில்தான் எத்தனை தெளிவு..!! ஆனால் அதைக் கேட்டிருந்தவர்களின் மனநிலை..??

“கண்ட இடத்தில் எல்லாம் நீ இருக்க வேண்டாம் நிஷா.. எங்ககூட இருந்துக்கோ..”, எதுவும் யோசித்திடாமல் வெற்றி கூற..

“இல்லை அங்கிள் பரவாயில்லை.. நான் என்னைப் பார்த்துப்பேன்..”, இன்னும் இன்னும் தெளிவாகவே.. அவளது தெளிவானது மற்றவர்களின் இதயத்தில் வாட்கள் ஏதும் எரிந்திடாமல் ஏற்படும் காயம் போல் அவ்வளவு ஆழமாய் பதிந்துபோவதாய்..

“என்ன பார்த்துப்ப..?? அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. நீ எங்களோட இரு.. தாரூ எப்படியோ அப்படித்தான் நீயும்..”, இது பரத்வாஜ்..

அப்பொழுதும் மறுப்பே நிஷாவின் முகத்தினில்..!! மூவரையும் அவளுக்குப் பிடித்திருந்தபொழுதும் ஏனோ அவர்களுடன் இருப்பதில் ஒரு தயக்கம்..!! புதிதாய் கிடைத்த உறவின் மீது ஒரு நம்பிக்கை அற்ற தன்மை..!! பெற்றவர்களே தன்னை ஒதுக்கிவிட்டார்கள் இவர்களா தன்னை வைத்துக்கொள்ளப்போகிறார்கள் என்ற எண்ணம் திண்ணமாக..!!

பர்த்வாஜரும் வெற்றியும் எப்படி எப்படியோ அவளை தங்களுடன் இருத்திக்கொள்ள முயன்றிட ஒப்புக்கொள்ளவே இல்லை அவள்..!! நடையைக் கட்டிவிட்டாள் என்று சொல்லத்தான் வேண்டும்..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.