(Reading time: 14 - 27 minutes)

"என்ன மாமா எங்கயுமே விளக்கில்லை, இங்க எப்படி பொம்மை வாங்க போறிங்க?"

"என்னை மன்னிச்சிடு மாலிகா", மொழிபெயர்ப்பாளன் பெருமூச்சோடு சொன்னான்,

மாலிகா அவனை புரியாமல் பார்த்தாள். இருட்டில் அவன் முகம் தெரியவில்லை. அவளது கையை பிடித்துக் கொண்டு கூரை போட்டிருந்த கடை ஒன்றை கண்டுபிடித்து அங்கே சென்றான். அந்த இடம் மழைச்சாரல் இல்லாமல் குளிர் மட்டும் சூழ்ந்த இடமாகயிருந்தது.

"மாலிகா" மொழிபெயர்ப்பாளன் முட்டிபோட்டபடி அவள் முன் அமர்ந்தான்.

மாலிகாவின் உள்ளத்தில் ஏதோ ஒரு பயம் சூழ்ந்தது.

"உன் ஜான்சன் மாமா செத்துப் போயிட்டாரு" மெல்லிய குரலில் மொழிபெயர்ப்பாளன் சொன்னான்.

"செத்துட்டார்னா மறுபடியும் எப்போ வருவாரு?" அழுகையை அடக்கியபடி மாலிகா கேட்டாள்.

"எப்பவுமே வர மாட்டாரு. எல்லாம் அந்த சின்ன பையன் ஹகீம் செஞ்ச காரியம். இந்த வயசுலயே அவன் பழி தீர்த்துட்டான்"

"நீங்க பொய் சொல்லுறிங்க. அவர் என்னை அமெரிக்கா கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு"

மொழிபெயர்ப்பாளனுக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. நேரம் கடந்து போகிறது என்பதை உணர்ந்த அவன் தான் வந்த காரியத்தை செயல்படுத்தத் தொடங்கினான்.

"சரி மாலிகா, நீ இங்கயே இரு. காலையில உன் சொந்தகாரங்க வந்து அழைச்சிட்டு போவாங்க"

"நீங்க பொய் சொல்லுறிங்க எனக்கு சொந்தகாரங்க கிடையாது. என்னை இங்கயே விட்டுட்டு போக போறிங்களா?", அப்பாவியாய் கேட்டாள் மாலிகா.

மொழிபெயர்ப்பாளன் அமைதியாக இருந்தான்.

"ஆமா மாலிகா, என்னை மன்னிச்சிடு நான் போயிட்டு வரேன்"

"நானும் வரேன் மாமா. எனக்கு இங்க இருக்க பயமா இருக்கு. இருட்டா இருக்கு"

மொழிபெயர்ப்பாளன் பதில் பேசாமல் நடந்து சென்றான்.

மாலிகா பயந்தாள். "மாமா….போகாதிங்க… மாமா … போகாதிங்க" என அவள் கத்துவது காதில் விழாதது போல் நடந்தான் மொழிபெயர்ப்பாளன்

மாலிகா ஓடினாள். மொழிபயர்ப்பாளனை தேடினாள். இருளில் அவன் தெரியவில்லை. என்ன செய்வதென்று மாலிகாவுக்கும் புரியவில்லை. அவள் ஓ வென கத்தினாள், அழுதாள். அவளது அழுகை சப்தம் மழையில் கலந்து கரைந்து போனது.

"மாமா நீங்க திரும்ப வரலன்னா ஜான்சன் மாமா கிட்ட சொல்லிடுவேன்" என கத்தினாள் மாலிகா.

மொழிபெயர்ப்பாளன் எங்கேயோ சென்றுகொண்டிருந்தான். மழையின் குளிர் மாலிகாவை நடுங்கச் செய்யவே மொழிபெயர்ப்பாளன் விட்டுச் சென்ற இடத்திற்கு சென்று குளிரில் நடுங்கியபடி அழுதுகொண்டிருந்தாள். அவள் அழுகை நிற்கவேயில்லை. காப்பாற்ற அவள் நம்பிய ஜான்சனும் வரவில்லை.

இறைவனின் விளையாட்டில் மாலிகாவும் தப்பவில்லை இரக்கமும் காட்டவில்லை. எல்லா வகையிலும் அவள் கைவிடப்பட்டுவிட்டாள்.

கீம் தன் தங்கையை பள்ளியில் விட்டுவிட்டு வேறு வேலையைத் தேடி புறப்பட்டான். நீண்ட நாட்கள் கழித்து தன் அண்ணன் தன்னோடு பள்ளி வரை வந்தது பஹீராவுக்கு சந்தோசத்தையும் ஆச்சர்யத்தையும் கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் அவளுக்கு பிடித்த தின்பண்டங்களையும் வாங்கி கொடுத்தது பஹீராவின் மகிழ்ச்சியை மேலும் அதிகரித்தது.

ராணுவத்தினரிடமிருந்து தப்பினாலும் ஹகீமிற்கு முதலாளி கூறிய வார்த்தைகள் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருந்தன. தீவிரவாதிகளோடு தொடர்பு வைத்தது மடத்தனம் என்பதை ஹகீம் உணர்ந்து கொண்டான்.

இனி அவர்களோடு எந்த உறவையும் வளர்க்கக்கூடாது. இறைவன் நமக்கொரு வாய்ப்பை கொடுத்திருக்கிறான். அதை வீணாக்கக்கூடாது, சீக்கிரம் இந்த ஊரை விட்டு சென்றுவிட வேண்டும். அப்போது தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என தனக்குள்ளாகவே கூறிக் கொண்டான்.

அன்று அவன் நீண்ட தூரம் நடக்க வேண்டியதாய் இருந்தது. அவன் வேலை பார்த்த அதே மார்க்கெட்டில் அவனுக்கு இனி வேலை கிடைக்காது. பழைய முதலாளி இருக்கும் இடத்தில் வேறு ஒரு முதலாளியிடம் வேலை செய்யவும் அவனுக்கு விருப்பமில்லை.

அவனுக்கு தெரிந்த ஒருவன் முன்பு எப்போதோ வேலைக்கு அழைத்ததை நினைவில் கொண்டு அந்த இடத்தை நோக்கி சென்றான். ஏகப்பட்ட எண்ணங்கள் மனதில் தோன்றினாலும் வேலை பற்றிய எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்ததால் இன்று எப்படியும் எந்த இடத்திலாவது வேலை வாங்கி தீர வேண்டும் என்ற உறுதியோடு அவன் கால்கள் நடை போட்டன.

நினைத்ததை விட வரவேண்டிய இடத்திற்கு முன்னதாகவே வந்து சேர்ந்தான் ஹகீம். பசி அவன் வயிற்றை லேசாக கிள்ளியது. இருந்த காசு பஹீராவின் வயிற்றுக்கு மட்டுமே போதுமாக இருந்ததால் ஹகீம் பட்டினி கிடக்க வேண்டிய சூழ்நிலை. பசி அவனுக்கு புதிதில்லை என்றாலும் அன்று ஏனோ அவனை மிகவும் வாட்டியது.

கடைத் தெருவிலுள்ள ஒரு கடையில் கூட்டம் அதிகமாய் கூடியிருந்தது. என்னவென்று தெரிந்துகொள்ள கூட்டத்தை விலக்கிப் பார்த்த ஹகீம் அதிர்ச்சியடைந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.