(Reading time: 14 - 27 minutes)

அமேலியா - 60 - சிவாஜிதாசன்

Ameliya

மாலிகா அற்புதமான கனவுலகில் சிறகடித்துப் பறந்துகொண்டிருந்தாள். அங்கே யாரும் அவளை கண்டிக்கவில்லை. அவளுக்கு பிடித்த இறந்து போன பாட்டி மற்றும் ஜான்சன் மட்டுமே இருந்தனர். யார் அவளை கண்டிப்பது? அவள் தான் அவ்வுலகின் இளவரசி. அவள் சொல்வது தான் சட்டம்.

மாலிகா தன்னை மறந்து சிரித்தாள்.

"மாலிகா" என ஒரு குரல்! அவள் உடல் லேசாக குலுங்கியது.. அவள் மெதுவாக கண் விழித்தாள், விழித்தபின் தான் நடந்தவை அனைத்தும் கனவு என தெரிய அவளுக்குள் சிறு ஏமாற்றம்.

எதிரே மொழிபெயர்ப்பாளன் பதற்றமான முகத்தோடு நின்றிருந்தான்.

"நாம வெளியே போகப் போறோம் மாலிகா", மொழிபெயர்ப்பாளன் குரலில் நடுக்கத்தோடு கூறினான். அவன் கண்கள் மனைவியை நோக்கின.

'சீக்கிரம் எதையாவது சொல்லி கூட்டிட்டு போ' என மொழிபெயர்ப்பாளனுக்கு மட்டும் புரியும்படி கோபத்தோடு வாயசைத்தாள் மனைவி.

சரி என்பது போல் மனைவியை பார்த்துவிட்டு மாலிகாவை பார்த்தான் மொழிபெயர்ப்பாளன்.

"உனக்கு பிடிச்ச பொம்மை வாங்க நீ வர வேணாமா?"

"பொம்மையா?!" என வாய் பிளந்த மாலிகா, "காலையில வாங்கிக்கலாமே?" என்றாள்.

"நாளையில இருந்து எனக்கு நிறைய வேலை இருக்கு மாலிகா. உனக்கு பொம்மை வேணும்னா இப்போவே கிளம்பியாகணும்"

சரி என்பது போல் தலையசைத்த மாலிகா படுக்கையை விட்டு எழுந்தாள்.

மாலிகாவின் கையைப் பிடித்த மொழிபெயர்ப்பாளன்.அவளை அழைத்து சென்றான். நல்ல நாட்களிலேயே மின்சாரம் கிடைப்பது அரிது, மழை நேரத்தில் கூறவா வேண்டும்? மின் விளக்குகள் அனைத்தும் அணைந்திருந்தன.

குடையைப் பிடித்தபடி மொழிபெயர்ப்பாளன் மாலிகாவை அழைத்து சென்றான். மழையின் வேகம் மிதமாய் இருந்தது. சாலைக் குழிகளில் மழைநீர் நிரம்பி நடப்பதற்கு சிரமத்தைக் கொடுத்தது.

"எனக்கு ரொம்ப குளிருது மாமா" என்றாள் மாலிகா.

மொழிபெயர்ப்பாளன் பதில் பேசவில்லை. அவன் மனம் பயத்திலும் பதற்றத்திலும் இருந்தது.

"எந்த மாதிரி பொம்மை மாமா வாங்கி கொடுக்க போறிங்க?"

"கொஞ்சம் பேசாம வா" மொழிபெயர்ப்பாளன் எரிந்து விழுந்தான்.

மாலிகா பயத்தில் அமைதியானாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

நீண்ட தூரம் மாலிகாவை நடக்க வைத்து அழைத்து சென்றான் மொழிபெயர்ப்பாளன். 'எக்காரணம் கொண்டும் அவள் திரும்ப வரக் கூடாது' என அவன் எண்ணினான்.

"ஜான்சன் மாமாவ பாத்திங்களா?", மாலிகா சிறிது நேரம் கழித்து மெல்லிய குரலில் மொழிபெயர்ப்பாளனுக்கு கோபம் வந்துவிடக் கூடாது என்ற பயத்தில் கேட்டாள்.

அவள் கேட்ட கேள்வி மொழிபெயர்ப்பாளனின் நடையை நிறுத்தியது. இருட்டில் மாலிகாவின் முகம் சரியாகத் தெரியவில்லை. அந்த மழை குளிரிலும் மாலிகா கேட்ட கேள்வி அவனது இதயத் துடிப்பை அதிகப்படுத்தி வியர்வை முத்துக்களை உருவாக்கியது.

"எ...என்...என்ன?" கேட்ட குரலில் தடுமாற்றம்.

"ஜான்சன் மாமாவ பாத்திங்களான்னு கேட்டேன்"

"இல்லை". மொழிபெயர்ப்பாளன் நடந்தான்.

மாலிகா பின்தொடர்ந்தாள். குடையையும் மீறி அவள் மேல் மழைத்துளிகள் விழுந்தன. அவன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தனது ஊன கால்களை முடிந்தளவு சிரமப்படுத்தி நடந்தாள்.

"ஜான்சன் மாமா இன்னும் கொஞ்ச நாளுல என்னை அவர் கூட அமெரிக்கா  கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு".

மொழிபெயர்ப்பாளன் பேசவில்லை; நடந்தான்.

"அங்க நிறைய பொம்மைகள், தின்பண்டங்கள், விளையாட சின்ன சின்ன பசங்க, என்னை பள்ளியில சேர்த்து படிக்க வைக்கிறேன்னு கூட சொன்னாரு. நீங்க தான அவர் ஆங்கிலத்துல சொன்னதை எனக்கு புரியும்படி சொன்னிங்க"

"ஆமா"

"அமெரிக்கால இருக்க பள்ளியில ஆங்கிலம் தான சொல்லி கொடுப்பாங்க மாமா?"

"ஆமா"

"எனக்கு தான் ஆங்கிலம் தெரியாதே, அதை எப்படி கத்துக்குறது?"

"கொஞ்சம் பேசாம வரியா?" மொழிபெயர்ப்பாளன் எரிந்து விழுந்தான்.

"நீங்க எப்படி ஆங்கிலம் தெரிஞ்சிகிட்டிங்க மாமா?"

"இனிமே நீ பேசினின்னா உனக்கு அடி விழும்"

மாலிகா அமைதியானாள். மனதிற்குள், 'இரு ஜான்சன் மாமா கிட்ட உன்னை பத்தி சொல்லுறேன்' என தனக்குத் தானே கூறிக்கொண்டாள்.

இரவு நீண்டு கொண்டே சென்றது. மழையும் நின்றபாடில்லை. ஆனால்,  அவர்களின் பயணம் நின்றது. ஊருக்கு ஒதுக்குப் புறமாய் இருக்கும் கடைவீதி அது. நடுஇரவு ஆனதால் ஆட்கள் யாருமில்லை. சுற்றிலும் கும்மிருட்டு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.