(Reading time: 14 - 27 minutes)

கூட்டத்தின் நடுவே மாலிகா எல்லோரையும் பார்த்தபடி அழுது கொண்டிருந்தாள். சுற்றியிருந்தவர்கள் அவளை விசாரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு அவள் விடை கூறவில்லை.

"உன் பேரு என்ன?"

அழுதுகொண்டே,“ மாலிகா”

"உன் ஊரு?"

"ஊரு..ஊரு…..!?"

"என்னடா இந்த பொண்ணு எதை கேட்டாலும் சரியா பதில் சொல்ல மாட்டுது?" என்றான் கூட்டத்தில் ஒருவன்.

"புத்தி சுவாதினம் இல்ல போலிருக்கு. பாவம்" மற்றொருவன் பதில் கூறினான்.

மாலிகா என்ன செய்வதென்று புரியாமல் அழுதாள். அவளது கண்கள் ஹகீமை நோக்கின. ஹகீம் நொடியும் தாமதிக்காமல் கூட்டத்திலிருந்து கலைந்து சென்றான். மாலிகா ஹகீமை பின்தொடர்ந்தாள். கூட்டத்தினர் மாலிகா செல்வதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர்.

தன் பின்னால் வரும் மாலிகாவை அவ்வப்போது திரும்பிப் பார்த்தான் ஹகீம். அவன் இதயம் படபடத்தது. மாலிகாவின் கண்கள் எப்பொழுதும் இல்லாத அளவு, அதை எப்படி சொல்வது? ஹகீமை அவள் பார்த்த நொடி அவள் பார்வையில் இருந்த நெருப்பு ஹகீமை பயமுறுத்தியது. ஹகீம் நடையின் வேகத்தைக் கூட்டினான்.

மாலிகா மெதுவாய் தான் நடந்தாள். அவள் விழிகள் இமைக்க மறந்து ஹகீமையே பார்த்தபடியிருந்தன. ஹகீம் அவ்விடத்தைவிட்டு ஓடினான். திரும்பிப் பார்க்கவில்லை. இதயம் வேகமாய் துடித்தது. மூச்சு வாங்கியது. ஓரிடத்தில் நின்றான். மாலிகாவின் முகம் அவன் கண்களை விட்டு அகலவில்லை.

திரும்பிப் பார்த்தான். மாலிகா இல்லை. லேசான நிம்மதி. முதலில் இந்த இடத்தைவிட்டு சென்றுவிட வேண்டும் என எண்ணி சிறிது தூரம் சென்றவன் திடுக்கிட்டான்.

மாலிகா அவன் எதிரில் நின்றிருந்தாள்.

செய்த பாவம் மாலிகாவின் வடிவில் அவனை துரத்தத் தொடங்கியது.

ஹெரால்ட் கவலையோடு அமர்ந்திருந்தார். என்றும் இது போன்ற கவலையில் அவர் ஆழ்ந்ததில்லை. சிறு வயதில் கடுமையாக உழைத்தவர் இனி ஓய்வெடுக்கவேண்டிய சூழ்நிலை. டாக்டர் அவ்வாறு கூறுவார் என ஹெரால்ட் நினைக்கவில்லை.

"நடுத்தர வயதைக் கடந்துவிட்டாலே டாக்டர்கள் அவர்களுக்கு நல்லதை கூறுவதில்லை. புதுப் புது வியாதிகளை கூறுவார்கள், பயமுறுத்துவார்கள். மாத்திரைகளை சாப்பிட்டால் கட்டுக்குள் இருக்கும். டென்ஷன்

ஆகக்கூடாது. ஸ்வீட் சாப்பிடக்கூடாது. அப்ப்பா" என பெருமூச்சை விட்டார் ஹெரால்ட்.

"டாக்டர் உங்க நல்லதுக்கு தான் சொல்லுவாறு" என்றாள் ஹெரால்டின் மகள் கிரிஸ்டியனா. தந்தையின் மீது மிகுந்த பாசமும் கண்டிப்பும் கொண்டவள்.

வேண்டிய மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொண்டு காரில் புறப்பட்டு சென்றார்கள். ஹெரால்ட் அமைதியாக அமர்ந்திருந்தார்.

"அப்பா"

"சொல்லுமா"

"இன்னும் இரண்டு நாளுல உங்களுக்கு பிறந்த நாள்"

ஹெரால்ட் பதில் பேசவில்லை. அவரது விழிகள் சாலையை வெறித்துக் கொண்டிருந்தன. இதே சாலையில் வாழ்க்கையில் முன்னேற கிழிந்த காலணிகளை அணிந்துகொண்டு ஓடிய காலம் அவர் நினைவில் தோன்றியது.

அப்போதெல்லாம் காரைப் பார்த்து ஆவல் கொண்டதுண்டு. இப்பொழுது காரில் செல்லும்போது அந்த வயதில் ஓடியது போல் காலால் ஓட வேண்டும் என்ற ஆசை அதிகமாக தோன்றியது. அதுவும் சாக்கோ மில்க் சாக்லேட், அதை சாப்பிடாத நாட்களே இல்லை.

ஒவ்வொரு நாள் காலை தொடங்குவதும் சாக்கோ மில்க் தான் முடிப்பதும் சாக்கோ மில்க் தான். அதிகமாய் சாக்லேட் சாப்பிட்டு சொத்தைப் பற்கள் உருவாகியும் சாக்கோ மில்க்கை ஹெரால்ட் விடவில்லை.

திடீரென ஒரு நாள் அந்த சாக்லேட் இல்லை என கடைக்காரர் சொல்ல, பல இடங்களில் தேடி அலைந்தும் கிடைக்கவில்லை. ஆனாலும் தினமும் கடைக்காரரிடம் சாக்லேட்டைப் பற்றி விசாரிப்பான். காலப்போக்கில் சாக்லேட் ஞாபகம் மறந்து போனாலும் அவ்வப்போது அதன் சுவை ஹெரால்டின் நினைவில் தித்தித்துக்கொண்டே இருந்தது.

திடீரென அவர் முகம் அதிர்ச்சியில் மின்னியது.. "கிரிஸ்டியனா வண்டியை நிறுத்து"

காரை நிறுத்தி அதிர்ச்சியோடு தந்தையை நோக்கினாள் மகள். "என்னப்பா?"

ஹெரால்ட் பதிலேதும் பேசாமல் காரைவிட்டு கீழறங்கி கடை ஒன்றினுள் நுழைந்தார். நுழைவாயிலில் சாக்கோ மில்க்கின் விளம்பரம் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அந்த விளம்பரப் பலகையையே சிறிது நேரம் பார்த்த ஹெரால்ட் கடைக்காரரிடம் சென்றார்.

சிறு வயதில் சாக்லேட் வாங்கிய அதே கடை. ஏகப்பட்ட மாற்றங்களை சுமந்திருந்தது. எண்பது வயதைக் கடந்த முதியவர் தள்ளாடியபடி பொருட்களை எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.