(Reading time: 14 - 27 minutes)

“மதுகண்ணா என்னாச்சு டா குரலே சரியில்ல..நல்லாயிருக்கதான?”

அடுத்தநொடி தன்னை தேற்றியவள்,”ம்ம் ப்பா நல்லாயிருக்கேன் காலையிலே இருந்து அத்தனை சொந்தகாரங்க செம டயர்ட் பா..அம்மாவும் நீங்களும் எப்போ கிளம்புறீங்க?”

“ஓ சரி சரிடா..பாத்து அப்பப்போ எதாவது சாப்டுக்கோ பசி தாங்கமாட்டியே நீ..நானும் அம்மாவும் நைட் பஸ்ல கிளம்பிருவோம்டா..அம்மா உனக்கு ஏதோ வாங்க போய்ருக்கா வந்ததும் பேச சொல்றேன் சரியா..”,

“சரிப்பா வச்சுட்றேன்..”,என்றவளுக்கு அப்போதுதான் நினைவு வந்தது காலை டிபனிற்குப் பின் ஒன்றுமே சாப்பிடவில்லை என..வீட்டிலிருந்தால் மது எதாவது கொரித்துக் கொண்டே தான் இருப்பாள்.அலுவலக நாட்களில் கூட அவளுக்கு மதிய உணவை தவிர இரண்டு டப்பாக்களில் ஆப்பிள் திராட்சை மாதுளம் என எதையாவது வைத்து அனுப்புவார் மரகதம்.

ஒவ்வொன்றையாய் நினைக்க நினைக்க அழுகை முட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு.ஏதோ அந்நிய தேசத்தில் தனித்து விடப் பட்டதை போன்ற உணர்வு..தேற்றகூட ஆளில்லையோ என தன்னைத்தானே ஆயிரம் கேள்வி கேட்டு குடைந்து கொண்டிருந்தாள்.

எப்போதடா சென்னை திரும்புவோம் என வேண்டிக் கொண்டிருந்தாள்.மறுநாள் காலையிலேயே மரகதமும் வைரவனும் அங்கு வந்திருக்க ஹோட்டலில் அறை புக் செய்து தங்கிக் கொண்டனர்.

காலை உணவை முடித்துவிட்டு மதுவை பார்ப்பதற்காக அவர்கள் வீட்டிற்கு வந்தனர்.தாய் தந்தையை கண்டவளுக்கு ஏதோ யுகம் யுகமாய் அவர்களின்றி தவித்த உணர்வு.அவளின் முகபாவங்களை கவனித்த ஸ்ரீகாந்தின் தாயோ,

“என்ன மது முந்தா நாள் தான் எங்க வீட்டுக்கு வந்த ஏதோ வருஷ கணக்குல பாக்காத மாதிரி நடந்துக்குற..முதல்ல அவங்களுக்கு சாப்பிட எதாவது கொண்டு வா..”,என்றவுடன் வேகமாய் கிட்சனிற்குச் சென்றவள் சிற்றுண்டியும் தண்ணீரும் கொண்டு வந்து கொடுத்தாள்.

அவர்களும் பெயருக்கு எதையோ கொரித்துவிட்டு அமர்ந்திருக்க வீட்டை சுற்றிக் காட்ட அழைத்துச் சென்றவள் தங்களறைக்குள் சென்ற அடுத்தநொடி தந்தையின் தோள் சாய்ந்து கொண்டாள்.

“மது என்னடீ..”

“ம்மா எனக்கு எதுவுமே பிடிக்கல..ஏதோ யாருமில்லாத காட்டுல இருக்குறமாதிரி இருக்கு..நம்ம வீட்ல நா பாட்டுக்கு சந்தோஷமாதான இருந்தேன் ஏன் எனக்கு கல்யாணம் பண்ணி வச்ச..”

“மது என்ன பேச்சு இதெல்லாம்..எல்லாம் போக போக சரியாய்டும்..மொதல்ல கண்ணைத் தொட மாமியார் பார்த்தா தப்பா நினைச்சுக்க போறாங்க..”

“இதான் மா பிரச்சனையே அவங்க என்ன நினைப்பாங்க இவங்க என்ன நினைப்பாங்கனு மூச்சு முட்டுதும்மா..”

“மது கண்ணா..சென்னைக்கு போய் நீயும் மாப்பிள்ளையும் மட்டும் தான இருக்க போறீங்க இன்னைக்கு ஒருநாள் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ டா..”

அதற்குள் யாரோ வரும் அரவம் கேட்டு பேச்சை நிறுத்திவிட்டு மூவருமாய் வெளியே சென்றனர்.ஸ்ரீகாந்த் அவளின் முக வாட்டத்தை பார்த்து என்னவென கேட்க அவள் ஒன்றுமில்லை எனக் கூறிவிட்டாள்.

மரகதத்திடம் சென்று கேட்டவன் மேலோட்டமாய் விஷயத்தை அறிந்து அவளை சற்றே சமாதானப் படுத்தினான்.அதன்பின் ரிசெப்ஷன் நல்லபடியாய் முடிந்து மரகதமும் வைரவனும் ஹோட்டல் அறைக்குச் சென்றுவிட வீட்டிற்கு வந்தவர்கள் மொய் பணத்தை கணக்கிட்டவாறே பேச ஆரம்பித்தனர்.

மது அவர்கள் சொல்ல சொல்ல பெயர்களை பேப்பரில் எழுதி வந்தாள்.ஓரளவு முடிந்திருந்த நிலையில் மறுநாள் அவர்கள் ஊருக்கு கிளம்புவதைப் பற்றிய பேச்சு வர ஸ்ரீகாந்தின் தாய் மதுவிடம்,

“அம்மா அப்பா எப்போ கிளம்புறாங்க மது?”

“அவங்களும் எங்களோடையே நாளைக்கு ட்ரெயின்ல தான் அத்தை..புக் பண்ணும் போது அப்பா சேர்த்தே பண்ணிட்டார்.”

“ஓ..ஏன் டா ஸ்ரீ இதைபத்தி நீ சொல்லவே இல்லையே..”

“இதுல சொல்றதுக்கு என்னம்மா இருக்கு அவங்க இங்க வந்தா திரும்ப ஊருக்கு கிளம்பிதான ஆகணும்.இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு??”

“ம்ம் இருக்காதுடா இருக்காது கல்யாணம் ஆய்டுச்சுல அதான் இப்படி பேசுற..முன்னாடியெல்லாம் சின்ன சின்ன விஷயத்தையும் என்கிட்ட சொல்லுவ..”

“ம்மா இதுக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம்!!!என்னம்மா இது என்னவோ உளர்ற..”

“ஆமாடா ஆமா என் பேச்செல்லாம் உளர்ற மாதிரிதான்  இருக்கும்..பொண்டாட்டி வந்த மூணு நாள்ல அம்மாவை இவ்ளோ பேசுறியா நீ??”

என்றவர் அவர்போக்கில் எழுந்து சென்று அறைக்குள் அமர்ந்து கொள்ள மது என்ன செய்வதென புரியாமல் விழிக்க ஸ்ரீகாந்தோ தலையில் கை வைத்துவிட்டான்.

அவன் தந்தைதான் அவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.அறைக்குள் வந்தவனோ காரணமே இல்லாமல் மதுவிடம் எரிந்து விழுந்தான்.

“ஏன்டீ உன்னை எவன் இப்போ ஊருக்கு போறத பத்தி விளக்க சொன்னான்??”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.