(Reading time: 15 - 29 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 44 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

ன் பேச்சால் அனைவரையும் மீட்டிங்கில் அமுதவாணன் வசியப்படுத்தி வைத்திருந்தான். அவன் ஒருவனே போதும், அவனது பேச்சு மற்றும் அவனக்கு தொழிலில் உள்ள ஈடுபாடு இதெல்லாம் அவனுக்கு அந்த நிறுவனத்தின் ப்ராஜக்ட் எளிதாக கிடைத்துவிடும் என்று தான் அருள்மொழிக்கு தோன்றியது.

அதனால் தான் அவனுக்கென்று சொந்த நிறுவனம் இருந்தும் அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் அவனை விடாமல் வைத்திருக்கிறார்கள் போலும், ஏற்கனவே அவள் இண்டர்ன்ஷிப்பின் போதே அவனது திறமையை  பற்றி நன்கு அறிந்திருந்தாலும் இப்போது அவனது பேச்சு திறமையையும் பார்க்கிறாள்.

அதை வைத்து அவளுக்கு தோன்றியதெல்லாம் அவனுக்கு உதவிக்கு வந்திருக்க வேண்டிய அவசியமேயில்லை என்பது தான், அவன் ஒருவனாலேயே இதைவிட பெரிய ஒப்பந்தங்களை கூட அவனால் எளிதாக தன் கைவசம் கொண்டு வந்துவிட முடியும் என்பது தான் அவளது எண்ணம்.

இருந்தும் அவள் இங்கு வந்ததையும் ஒருவிதத்தில் நல்லதாக தான் நினைத்தாள். அவளுக்கு இந்த கணினி துறையில் இருக்கும் ஆர்வமே அதற்கு காரணம். பத்து நாட்கள் அவனோடு சேர்ந்து வேலை செய்த போது கூடாத தோன்றாத ஒன்று அவனுடன் சேர்ந்து இருந்த சில மணி நேரங்களில் தோன்றியது. அவனுடன் சேர்ந்து பணி செய்தால் எப்படி இருக்குமென்பது தான் அது.  தன் மனம் எண்ணியதை நினைத்து அவளுக்கே வியப்பாக தான் இருந்தது.

ஆனால் சில நிமிடங்களாக மனமும் உடலும் எதிலும் ஆர்வத்தை காட்டாமல் இடையூறு செய்தது. அதற்கு காரணம் அவளுக்கு அந்த மூன்று நாட்களில் அவளை படுத்தி எடுக்கும் வயிற்று வலியே காரணம். மாதம் மாதம் எப்போதும் தள்ளி தள்ளி வருவதால், இந்த நாள் தான் என்று அவளால் குறிப்பிட்டு தெரிந்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு சமயம் இரண்டு நாட்களுக்கு முன்னரே வயிற்று வலி ஆரம்பமாகிவிடும். சில சமயங்களில் அந்த நேரம் தான் வயிற்று வலி ஆரம்பமாகுமே, ஆனால் வந்தால் உயிர் போகும் வலி தான்,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இது போன்ற சமயங்களில் வீட்டில் இருந்தால் அப்படியே சுருண்டு படுத்துவிடுவாள். அவளின் அவஸ்தை வீட்டில் உள்ள பெண்கள் மட்டுமல்ல, ஆண்களுக்கும் தெரியும். கல்லூரி இருந்தால் கூட விடுப்பு எடுத்துக் கொள்வாள். அப்படியே அது போன்ற சமயங்களில் பரிட்சை என்றால் மருத்துவரிடம் சென்று வலி நிவாரணி மருந்து வாங்கி சாப்பிட்டுவிட்டு, மகியோ இல்லை அறிவோ அவளை பரிட்சை நேரத்திற்கு அழைத்துச் சென்று, பின் முடிந்ததும் அழைத்து வந்துவிடுவார்கள்.

அப்படி அந்த மூன்று நாட்களை பெரும் அவஸ்தையாக அவள் மாதம் மாதம் உணர, இன்று இந்த நேரம் இப்படி ஆகும் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை.

அமுதனோடு கிளம்பி வந்த நேரம் முதலில் எதுவும் தெரியவில்லை. சாதாரணமாக வந்தவள், அவனோடு சேர்ந்து இந்த ஒப்பந்தத்தை பற்றி அவனிடம் கேட்டு தெரிந்து, அவனோடு அதைப்பற்றி பேசி தன் சந்தேககங்களை தீர்த்துக் கொண்டு, தானும் சில ஆலோசனைகளை சொல்லி என்று எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் இருந்தது.

ஆனால் மீட்டிங் ஆரம்பித்ததிலிருந்தே அவளது பிரச்சனையும் ஆரம்பமாகிவிட்டது. முதலில் லேசாக ஆரம்பித்த வயிற்றுவலி பின் நேரம் போக போக அதிகம் ஆகிவிட்டது. உயிர் போகும் வலியும் கூட, ஆனால் மீட்டிங் நடக்கும் நேரத்தில் அநாகரீகமாக எழுந்து போக கூடாது என்பதால் வலியை பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

முதலில் பொதுவாக அனைவரும் பேசிக் கொண்டிருந்த போது, வயிற்று வலியும் லேசாக இருந்ததால் அவளால் அவர்களோடு பேச்சில் கலந்துக் கொள்ள முடிந்தது. பின் ப்ராஜக்ட் பற்றி அமுதன் விவரிக்க, அவளும் அதை கவனித்தது  போல் இருந்தாலும், வலியின் வேதனையை அடக்கி யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதிலேயே கவனம் செலுத்த வேண்டியதாக இருந்தது.

அமுதன் அந்த ப்ராஜக்ட் பற்றி விவரித்துக் கொண்டிருந்தாலும், திடீரென அருள்மொழி சோர்வாக காணப்பட்டதையும் கவனித்தான். நடுவில் தண்ணீர் குடிக்கும் சாக்கில் அவளிடம் என்ன என்று விசாரித்ததற்கு அவள் ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டிக் கொண்டாள்.

பின் மீட்டிங் முடிந்து அதன்பின் அனைவரும் சிற்றுண்டி எடுத்துக் கொண்டனர். அவளுக்கு இப்போது எங்கேயாவது சென்று படுத்துக் கொள்ள தோன்றியதே தவிர சாப்பிட பிடிக்கவில்லை. ஆனாலும் மற்றவர்கள் கண்ணுக்கு பிரச்சனை தெரியக் கூடாது என்பதால் சும்மா பேருக்கு சாப்பிடுவது போல் செய்துக் கொண்டிருந்தாள்.

இப்போது அடுத்த பிரச்சனை அவர்கள் செல்லும்போது வழியனுப்ப வேண்டும். இப்படி ஆகும்  என்று தெரியாததால் எந்த முன்னேற்பாடுடனும் அவள் வரவில்லை. அதனால் ஒருவேளை வெளியிலேயே ஆடையில் கறைப்பட்டிருந்தால் என்ன செய்வது என்று பயந்தாள். அதனால் அவர்கள் விடைபெறும் போது கூட அமர்ந்தப்படியே புன்னகைத்தாள். அது கூட சோர்வான புன்னகை தான், அதைப்பார்த்த அமுதனுக்கு அவளுக்கு என்னவோ பிரச்சனை என்று தான் நினைக்க தோன்றியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.