(Reading time: 15 - 29 minutes)

மாப்பிள்ளை வீட்டாரும் பெண் பார்க்க வந்துவிட்டனர். ஆனால் அப்போதும் அருள் வராததால்,

“ஒரு முக்கிய வேலையாக தன் தோழிக்கு உதவ சென்றவள், அங்கிருந்து கிளம்ப நேரமாகிவிட்டது, வந்துக் கொண்டிருக்கிறாள். அவள் வரும் வழியில் ட்ராஃபிக் ஜாமாக உள்ளது” என்று சொல்லி சமாளித்தனர்.

மாப்பிள்ளை வீட்டாரும் பெருந்தன்மையாக காத்திருப்பதாக கூறினர். ஆனாலும் நேரமாகியும் இன்னும் அருளை காணவில்லை.

இப்படி ஒரு சூழ்நிலை வந்தும் இலக்கியா உண்மையை கூறவில்லை. எங்கே இந்த சமயத்தில் அவள் சார்லஸோடு சென்றதை கூறினால் தப்பாகிவிடுமோ என்று பயந்து அமைதியாக இருந்தாள்.

மாப்பிள்ளை வீட்டாருக்கு நேரம் போக போக ஏதோ தவறாகப்பட்டது. அதற்கேற்றார் போல் அவர்களுக்கு ஒரு அலைபேசி அழைப்பு வர, அதில் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ச்சியானார்கள்.

“கொஞ்ச நேர்த்துல அருள் வந்துடுவா.. அதுக்குள்ள டிஃபன் சாப்பிடுங்களேன்..” என்று அந்த நேரம் பார்த்து கலை கூறவும்,

“இன்னும் எவ்வளவு நேரம் ஆனாலும் உங்கப் பொண்ணு வரப் போறது இல்லை..” என்று மாப்பிள்ளை வீட்டார் கூறினர்.

அவர்கள் அப்படி சொல்லவும் மற்றவர்கள் புரியாமல் பார்க்க, “எங்களுக்கு பணம், சீர்வரிசை முக்கியம் இல்ல.. நல்ல குணமான பொண்ணு தேவைன்னு தான் உங்க பொண்ணைப் பார்க்க வந்தோம்.. ஆனா இப்படி இருக்கும்னு நாங்க எதிர்பார்க்கவே இல்ல, ஞாயிற்றுக்கிழமை அதுவும் இருட்டனதுக்கு பிறகு ஊரை விட்டு தள்ளி இருக்க ஹோட்டலில் உங்க பொண்ணு ஒரு பையனோட் ஒரே ரூம்ல இருக்கா.. அவ எப்படி இங்க வருவா?” என்று அவர்கள் பேசவும்,

“ஹலோ எங்க வீட்டு பொண்ணை பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கு.. வாய் இருந்தா என்ன வேணாலும் பேசுவீங்களா..” என்று மகியும் தமிழும் எகிறிக் கொண்டு வந்தனர்.

“இல்ல என்னோட பொண்ணு அப்படில்லாம் கிடையாது.. ஏன் இப்படி அபாண்டமா பேசறீங்க..” என்று கலையும் அழுதார்.

“எங்க பொண்ணு இன்னும் வரலைங்கிறதுக்காக வாய்க்கு வந்ததெல்லாம் பேசாம முதலில் இங்கிருந்து கிளம்புங்க..” என்று புகழேந்தியும் கதிரும் கூறினர்.

அவர்கள் கூறிய வார்த்தையில் இலக்கியா பயந்து போய் இருக்க, பூங்கொடி, எழிலுக்கு இப்படி ஒரு பேச்சைக் கேட்டு அதிர்ச்சியில் பதில் பேசவும் வரவில்லை. பாட்டியோ இப்படிப்பட்ட பேச்சுக்கள் கேட்க தான் இந்த பெண் இந்த ஏற்பாடெல்லாம் செய்ததா? என்று நினைத்து கலங்கிப் போனார்.

“இங்க பாருங்க எங்கக்கிட்ட எகிறி எந்த பிரயோஜனமுமில்ல.. நாங்க சொல்றது உண்மை தான், இதை கண்ணால் பார்த்த சாட்சி இருக்கிறது. அது வேறு யாருமில்ல, கலையோட நாத்தனார் தான் நேர்ல பார்த்துட்டு சொன்னது..” என்று அவர்கள் சொல்ல,

“இல்ல அவ பொய் சொல்லியிருக்கா.. என்னோட பொண்ணு மேல அவதூறு பேசறா.. அவ பையனுக்கு என்னோட பொண்ணை கொடுக்கலன்னு தான் இப்படியெல்லாம் செய்றா..” என்று கலை அழுது புலம்பினார்.

“அது எங்களுக்கு தெரியாது.. இப்படி கேள்விப்பட்டதுக்குப் பிறகும் இந்த சம்பந்தத்தை எங்களால ஏத்துக்க முடியாது..” என்று அவர்கள் சொல்ல,

“இப்படி யாரோ சொன்னதை நம்பற உங்க வீட்டுக்கு முதலில் எங்கப் பொண்ணை தர மாட்டோம்.. கிளம்புங்க..” என்று மகி அவர்களை துரத்திவிட்டான்.

“ஏன் ண்ணா இப்படியெல்லாம் சொல்லி அவ என் பொண்ணு வாழ்க்கையை நாசம் செய்றா..” என்று கலை சொல்லிக் கொண்டே அழுதார்.

உண்மையிலேயே அங்கே ரெசார்ட்டில் அமுதனோடு அருள்மொழியை பார்த்தது அவளின் அத்தை தான், தினம் தினம் குடித்துவிட்டு பல பெண்களோடு சுற்றிக் கொண்டிருக்கும் தன் மகன் இன்று ஒரு புது பிரச்சனையை கொண்டு வந்திருந்தான்.

ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு ரெசார்ட்டிற்கு வந்தவன், குடித்து விட்டு யாருடனோ சண்டைக்கு போக, அந்த ரெசார்ட்டில் உள்ளவர்கள் காவல்துறையில் புகார் செய்தால், ரெசார்ட்டுக்கு கெட்ட பேர் என்பதால் அந்த சண்டையிட்ட இருவரின் வீட்டில் உள்ளவர்களை வரவழைத்து பிரச்சனையை முடிக்க பார்க்க தான் அவரை இந்த ரெசார்ட்டுக்கு அழைத்திருந்தனர்.

“இப்படி கெட்டு சீரழகிறான்.. சீக்கிரம் ஒரு கல்யாணத்தை முடிக்கலாம்னு பார்த்தா என் அண்ணியே பொண்ணு தர மாட்டேங்குறா.. அப்புறம் யார்க்கிட்ட போய் நிற்க..” என்று மனதிற்குள் புலம்பியப்படி நின்றவருக்கு,

மாப்பிள்ளை வீட்டார் தூரத்து சொந்தம் என்பதால், அவர்கள் இன்று அருளை பெண் பார்க்க போகும் விஷயம் அவருக்கும் தெரியும், முதலில் அவர் பெண் கேட்டு கலை வீட்டார் மறுத்ததால், இவர்கள் பெண் கேட்க செல்வதை அருள் அத்தையிடம் சொல்லியிருந்தனர்.

“என்னோட பையனை வேண்டாம்னு சொல்லிட்டு என்னோட அண்ணிக்காரி அந்த வீட்ல பொண்ணு கொடுக்கப் போறாளா.. அது அமையவே கூடாது..” என்று சாபம் விட்டுக் கொண்டிருக்கும் போது தான் அமுதனும் அருளும் அவர் கண்ணில் பட்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.