அமுதன் அவர்களை வழியனுப்ப வெளியே சென்றதும், உடனே அவசரமாக எழுந்து இருக்கையையும் ஆடையையும் பார்க்க எந்தவித அசம்பாவிடமும் ஏற்படவில்லை என்று தெரிந்ததும் உடனே தன் கைப்பையை எடுத்துக் கொண்டு அங்கேயே இருந்த ரெஸ்ட்ரூமிற்கு சென்றவள், முடிக்க வேண்டிய வேலையை முடித்ததும் அங்கேயே அமர்ந்துக் கொண்டாள். வலியின் வேதனையில் அதற்கு மேல் ஒன்றும் முடியவில்லை.
அவர்களை வழியனுப்பிவிட்டு உள்ளே வந்த அமுதன் அங்கே அருள்மொழியை காணாமல் முதலில் அதிர்ந்தவன், பின் “மொழி மொழி..” என்று குரல் கொடுக்க,
மிகவும் பலவீனமான குரலில், “இதோ வரேன்..” என்று ரெஸ்ட் ரூமிலிருந்து குரல் கொடுத்தவள், எழுந்து நடக்க கூட முடியாமல் வெளியே வந்தாள், வலியில் உடலில் உள்ள சக்தியெல்லாம் வடிந்ததால் அப்படியே விழப் போக, அமுதன் அவளை தாங்கிப்பிடித்து அமரவைத்தான்.
“என்ன ஆச்சு அருள்..” பயந்தவனாக கேட்க,
“கொஞ்சம் உடம்பு சரியில்லை..” என்று மட்டும் கூறினாள்.
“என்ன ஃபீவரா..” என்று அவன் தொட்டுப் பார்க்க,
“இல்லை ஸ்டொமக் பெயின்..” என்றாள்.
“இங்க வந்தப்போ நல்லா தானே இருந்த.. இப்போ என்ன ஆச்சு..” என்று கேட்டவனுக்கு ஏதோ புரிந்தது போல் இருந்ததால்,
“அந்த ப்ராப்ளமா..” என்றான்.
அவளும் ஆமாம் என்று தலையாட்ட, “ரொம்ப பெயினா இருக்கா மொழி.. டாக்டர்க்கிட்ட போவோமா..” என்றான்.
“இல்ல கொஞ்ச நேரமாவது எனக்கு படுக்கணும்.. என்னால சுத்தமா முடியல.. ரொம்ப வலிக்குது..” என்றவளது முகமும் வலியைக் காட்டியது.
அது கான்பரன்ஸ் அறை என்பதால், “கொஞ்சம் இரு மொழி..” என்றவன், வெளியே போனான்.
அவள் ஓய்வு எடுப்பதற்காக ஒரு அறையை எடுத்தவன் அவளை அழைத்து போக சிறிது நேரத்தில் அங்கி வந்தான். அந்த நேரம் அருள்மொழி அவள் அமர்ந்திருந்த நாற்காலியிலேயே வயிற்றைப் பிடித்தப்படி சுருண்டு மேசை மீது தலை சாய்த்து படுத்திருந்தாள்.
“மொழி வா ரூம் புக் பண்ணிருக்கேன் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்..” என்று அழைக்க, தனியாக அறை எடுத்தா? என்பதெல்லாம் அப்போதைக்கு அவளுக்கு வலியின் வேதனையில் தோன்றவில்லை.
எழுந்த போது நிற்க முடியாமல் அவள் தடுமாற, அவனோ அவளை தாங்கிப் பிடித்தான். பின் அந்த நிலையிலேயே அவளை அவன் புக் செய்திருந்த அறைக்கு அழைத்துச் செல்ல, இரு கண்கள் வியப்பாய் அதே சமயம் வன்மத்தோடு அவர்களை பார்த்து கொண்டிருந்ததை இருவரும் அறிய வாய்ப்பில்லை.
அறையில் அழைத்து வந்து அவளை படுக்க வைத்தவன், அறையில் இண்டர்காம் மூலம் ரெசார்ட்டின் வரவேற்பறைக்கு பேசி மருத்துவரை அழைக்க முயற்சி எடுத்தானே தவிர, சைலண்ட் மோடில் போட்ட அலைபேசியை உயிர்ப்பிக்க வேண்டும் என்பது அந்த பதட்டமான சூழ்நிலையில் அவனுக்கு தோன்றவில்லை.
அவனுக்கே அப்படியென்றால் முடியாமல் படுத்திருந்த அருள்மொழிக்கு மட்டும் அது எப்படி தோன்றியிருக்கும்?
இங்கே வீட்டில் கலையரசியோ 4 மணிக்கெல்லாம் அருள்மொழியின் வருகைக்கு காத்துக் கொண்டிருந்தவர் இலக்கியாவை கேள்வி மேல் கேள்விக் கேட்டு துளைத்தெடுத்துவிட்டார்.
இலக்கியாவிற்கோ அவரை சமாளிப்பதற்குள் போதுமென்று ஆகிவிட்டது. “அவ கரெக்ட் டைம்க்கு வந்துடுவா அத்தை.. கவலைப்படாதீங்க..” என்று சமாதான வார்த்தைகள் கூறினாள்.
ஆனால் நேரம் ஆக ஆக அவளுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. “இன்னும் அருளை காணோமே, வரலன்னா என்னை கேள்வி மேல கேள்விக் கேட்டு தொலைச்சுடுவாங்களே..” என்று மனதிற்குள் புலம்பினாள்.
அருளின் அலைபேசிக்கு தொடர்பு கொள்ள முயற்சித்தாள். அவள் மட்டுமல்ல கலை, பூங்கொடி, எழில் என வீட்டில் இருந்தவர்கள் அனைவருமே அவளுக்கு முயற்சிக்க, அவளது அலைபேசி தான் அவளது கைப்பையில் அமைதியாக இருந்ததே, பின் அவளை எப்படி தொடர்பு கொள்ள முடியும்? பாட்டியோ மிகவும் பதட்டமாகிவிட்டார்.
வெளியில் சென்றிருந்த ஆண்கள் வீடு திரும்பியிருக்க, விஷயம் கேள்விப்பட்டு, “இப்போ எதுக்கு அவளை அனுப்பீனீங்க?” என்று தான் கேட்டனர்.
பின் அவர்களே “வந்துடுவா பயப்பட வேண்டாம்..” என்று ஆறுதலும் கூறினர்.
ஆனால் அவள் வர வேண்டுமே, அதற்கு முன்னர் மாப்பிள்ளை வீட்டில் வந்துக் கொண்டிருப்பதாக தகவல் கூறவும்,
மகியும் அறிவும் எந்த தோழி வீட்டிற்குச் சென்றிருக்கிறாள்.. நேரில் சென்று அழைத்து வருகிறோம் என்று இலக்கியாவிடம் கேட்க,
“எனக்கு சரியா தெரியல..” என்று கூறினாள். அதற்கும் அவளுக்கு பாட்டியிடமிருந்து திட்டு விழுந்தது. உண்மையிலேயே அருள் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள ரிசார்ட் என்று மொட்டையாக தான் சொல்லிச் சென்றாள். அருள்மொழிக்கே கிளம்பும் போது அந்த ரெசார்ட் எங்கே இருக்கிறது என்று தெரியுமா? என்பதே சந்தேகம் தான், இப்படியிருக்க இலக்கியா என்னவென்று சொல்லி சமாளிப்பாள்.
அருள் வெளியில் சென்றது கூட தவறில்லை. ஆனால் அவளும் இலக்கியாவும் இப்படி பொறுப்பில்லாமல் அஜாக்கிரதையாக இருப்பதற்கு வீட்டு பெரியவர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டார்கள்.