(Reading time: 16 - 32 minutes)

“அதை நினைச்சு கூட பார்க்க நான் விரும்பல..”

“அப்புறம் எதுக்கு அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்த.. பார்க்க பிடிக்காதவங்களை எப்படியோ போறாங்கன்னு விட்டுட்டு வர வேண்டியது தானே..”

“அதைத்தான் நான் உனக்கும் சொல்றேன்.. நீ வேணாம்னு தூக்கி போட்டுட்டு போனவளுக்காக எதுக்கு இவ்வளவு கோபம், அக்கறை, துடிப்பு எல்லாம், அவ எக்கேடு கெட்டு போறா, யாரோ என்னவோ செஞ்சுக்கிறாங்கன்னு விட வேண்டியது தானே.. நீ வேணும்னா ஞானியா மத்தவங்க தப்பை மன்னிக்கலாம் ஆனா என்னால அப்படி இருக்க முடியாது.. கொஞ்சமாவது அவளை எனக்கு கஷ்டப்படுத்தி பார்க்கணும்..” என்று அவள் சொன்ன நொடி,

“அர்ச்சனா..” என்று விபா திரும்ப கோபமாக கத்த,

“விபு.. அவ உன்னோட தங்கச்சியா இருக்கலாம்.. ஆனாலும் கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு போனதை ஞாபகம் வச்சிக்கோ..” என்று மஞ்சுளா கூறினார்.

“அவளுக்கு கல்யாணம் ஆகிருச்சுங்கிறதால தான் கோபமா பேசறதோட நிறுத்திக்கிறேன்.. இதுவே அப்படி இல்லன்னா, இந்நேரம் ரெண்டு அறை விட்டிருப்பேன்..

இவளை கூட விடுங்க, உங்கக்கிட்ட இதை எதிர்பார்க்கல ம்மா.. இவ யாதவியை எந்த காரணத்துக்காக கூட்டிட்டு வந்திருக்கான்னு தெரிஞ்சும் அமைதியா இருக்கீங்க பாருங்க.. அப்போ இவ செய்றதை நீங்களும் சப்போர்ட் பண்றீங்களா?” என்றுக் கேட்டதும்,

“அதில்லப்பா..” என்று அவர் ஏதோ சொல்ல வர,

“போதும் விடுங்கம்மா.. யார் மனசுல என்ன இருந்தாலும் யாதவியை கஷ்டப்படுத்தி பார்க்கறத நான் விரும்பல, அதுக்கு உங்களுக்கு உரிமையும் இல்ல.. அதை இவக்கிட்ட சொல்லி வைங்க..” என்றான்.

பின் அர்ச்சனாவை பார்த்து, “உன்னோட புருஷனை விட்டுட்டு நீ இங்க இருக்கறது அம்மாக்காக தானே, அப்போ எல்லாம் நீதானே செய்யணும், வேலைக்கு ஆள் வரலன்னா என்கிட்ட சொல்லு, எத்தனை ஆள் வேணுமோ கூட்டிட்டு வரேன்.. அப்படி கிடைக்கலன்னா அம்மாக்காக நானே கூட செய்வேன்.. அதைவிட்டுட்டு இதுபோல அதிகப்பிரசங்கித்தனம் செஞ்ச, இன்னொரு முறை இப்படி வாயால சொல்லிக்கிட்டு இருக்க மாட்டேன்..” என்று எச்சரித்துவிட்டுச் சென்றான்.

“பாரும்மா அவமானத்தை தேடி தந்தவளுக்காக கூடப் பிறந்த தங்கைன்னு கூட பார்க்காம, அண்ணா என்கிட்ட எப்படி பேசுதுன்னு..” என்று அர்ச்சனா கண்ணீர் சிந்தினாள்.

“என்ன இருந்தாலும் நீ செஞ்சது தப்பு தான் அர்ச்சனா..” என்று மஞ்சுளா கூறினார்.

“என்னம்மா நீ கூட அண்ணனை போல பேசற..”

“பின்ன என்னடி.. என் பிள்ளை வாழ்க்கையில் முன்ன நடந்த கசப்பான சம்பவத்தை மறந்து அவனுக்குன்னு ஒரு புது வாழ்க்கை அமையணும்னு நான் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தா..

தேவையில்லாம அவன் கடந்த காலத்தை ஞாபகப்படுத்தும் ஆளுங்களை பார்க்கிறானேன்னு நான் ஏற்கனவே வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கேன்.. ஆனா யாதவியை நீ வீட்டுக்கே கூட்டிக்கிட்டு வந்தா என்ன அர்த்தம்?

அண்ணனுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு சொன்னா மட்டும் பத்தாது.. அதுக்கு ஏத்த மாதிரி நம்மளும் நடந்துக்கணும்.. யாதவி முன்ன எதுவும் பேசக் கூடாதுன்னு தான் நான் அமைதியா இருந்தேன். இங்கப்பாரு உன்னோட அண்ணன் சொல்றதை தான் நானும் சொல்றேன், இனி இதுபோல காரியத்தை எப்பவும் செய்யாத..” என்று சொல்லிவிட்டு அவரும் அவர் அறைக்குச் சென்றுவிட்டார்.

காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது, “உன்னோட அண்ணிய பத்தி நம்ம எல்லோருக்கும் நல்லா தெரியும் தான், உன்னோட விஷயத்துல அவ மாறாம இருக்கறது கஷ்டமா இருக்கு.. எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டேங்குறா.. ஆனா அதுக்காக அவளுக்கு  நீ அடங்கி போகணும்னு அவசியம் இல்ல, அவ உன்னை அர்ச்சனா கூட அனுப்பி வச்சா.. என்னால போக முடியாதுன்னு முடிவா சொல்ல மாட்டீயா?” என்று பாலா யாதவியிடம் கேட்டான்.

“அது நான் சொன்னேன் ண்ணா.. ஆனா நீங்க அவங்கக் கூட பிஸ்னஸ் செய்றீங்க.. அதனால வேண்டாம்னு சொல்ல முடியாது.. அவங்களை பகைச்சுக்க கூடாதுன்னு அண்ணி சொன்னாங்க.. அதான்..” என்று அவள் தயங்கியப்படியே கூறினாள்.

“பிஸ்னஸ்ல பார்டனரா இருக்கோம்ங்கிறதுக்காக அவங்க என்ன சொன்னாலும் செய்யணுமா? அதுவும் உன்னை அவங்க வீட்ல வேலை செய்ய அனுப்பலன்னா விபா என்னோட பார்டன்ர்ஷிப்பை கேன்சல் செஞ்சுடுவானா?” என்று கேட்டுவிட்டு சிரித்தான்.

யாதவிக்கு ஒன்றும் புரியாமல், “என்ன ண்ணா சிரிக்கிறீங்க..?” என்றுக் கேட்டாள்.

“அது உங்க அண்ணியோட அம்மா ஒரு ஜிம் நடத்துறாங்கல்ல, அதுல ஒருத்தருக்கு ஆகிஸ்டெண்ட் ஆயிட்டு, பிரச்சனை ஆயிடுச்சு தெரியுமா?”

“அய்யோ எப்படி ண்ணா.. யாருக்கு உயிருக்கு ஒன்னும் ஆபத்தில்லையே..”

“இது எதைச்சையா நடந்த ஆக்சிடெண்ட் கிடையாது.. வேணும்னே ரூபியோட அம்மாக்கு பிரச்சனை தரணும்னு நடந்த ஆக்ஸிடெண்ட்.. அதனால யாருக்கும் உயிருக்கெல்லாம் ஒன்னும் ஆபத்தில்ல..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

(வினோதா) பிந்து வினோத்தின் "என்றென்றும் உன்னுடன் 01..." - காதல் கலந்த குடும்ப தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அய்யோ எதுக்கு ண்ணா இப்படி செய்யணும்.. அவங்க அப்படி என்ன செஞ்சாங்க?”

“அவங்க என்ன செஞ்சாங்களா? ஒரு அப்பாவி பொண்ணை வேலைக்காரியா ட்ரீட் செஞ்சு டார்ச்சர் கொடுத்திருக்காங்க.. அதுல அந்த பொண்ணு கையில் சுடுதண்ணி பட்டிடுச்சு.. அதுக்குதான் அவங்களுக்கு இந்த தண்டனை..” என்று அவன் சொல்ல,

“என்ன ண்ணா.. நீங்க விளையாட்டுக்கு தானே சொல்றீங்க..” என்று அவன் கேலி செய்வதாக நினைத்து யாதவி அவனிடம் கேட்டாள்.

“கேலி இல்ல உண்மை தான்.. உனக்கு செஞ்சதுக்கு தான் அவங்களுக்கு இப்படி நடந்திருக்கு.. நடத்தினது யாருன்னு தெரியுமா? விபாகரன்..

அவனா உன்னை அவங்க வீட்ல வேலை செய்ய அனுப்பாம விட்டோம்னு எங்களை பகைச்சுப்பான்.. ரூபி தான் உன்னை அனுப்பினதுன்னு தெரிஞ்சு அவளுக்கு ஏதாவது செய்யாம இருந்தாலே போதும்..” என்று சொல்லி அவன் சிரிக்க, யாதவியோ அவன் சொன்ன விஷயத்தை ஜீரணிக்க முடியாமல் அவனை பார்த்திருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.