(Reading time: 13 - 25 minutes)

யார் மீது தவறென்று தெரியாமல் யாரையும் கைகாட்டி பேச விருப்பமில்லை எனக்கு. எனவே இந்த வழிப்பறி பிரச்சனையை நான் என் நேரடிப் பார்வையில் கொண்டு வர எண்ணுகிறேன் தந்தையே.”

“சிவகங்காவதி உன் திறமை மேல் நிச்சயம் எனக்கு சந்தேகம் இல்லை இருப்பினும் இது சற்று ஆபத்தானதாகவே தோன்றுகிறது.சிறிதேனும் பொறுமை காக்கலாம் மகளே”

“தந்தையே தங்களின் எண்ணம் புரிகிறது இருந்தும் நாட்டு மக்களின் பாதுகாப்பில் நாம் அலட்சியம் காட்டுவது சரியில்லையல்லவா!என்னை நம்புங்கள் நம் புறம் எந்த இழப்புமின்றி நல்ல படியாய் முடித்து காட்டுகிறேன்.”

“சரி ஆனால் நிச்சயம் உன்னை தனியே அனுப்பமாட்டேன்.நம் படை வீரர்களில் இருந்து உன் நம்பிக்கைக்கு பாத்திரமாய் ஐவரை தேர்ந்தெடுத்துக் கொள்.”

“அப்படியே செய்கிறேன். ஆனால் எக்காரணம் கொண்டும் இந்தசெய்தி நமை தாண்டி வெளியே செல்ல கூடாது. தாங்கள் படைத் தளபதியிடம் கூறி ஆக வேண்டியதை கவனிக்குமாறு கூறுங்கள்,நான் என்ன செய்ய வேண்டுமோ அதை மறைமுகமாகவே செய்து கொள்கிறேன் தந்தையே.”

“ஆகட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன்.ஆனாலும் அதீத கவனம் வேண்டும் சிவகங்காவதி.”

“நிச்சயம் கவனமாய் இருப்பேன் தந்தையே வருகிறேன்.”

அந்தபுரத்திற்கு வந்தவள் ஆழ்ந்த யோசனையில் இருந்தாள்.ஏதோ ஒன்று நடக்க போகிறது என உள்மனம் அடித்துக் கூறினாலும் என்ன ஏதென வரையறுக்க முடியவில்லை அவளால்.

அந்நேரம் உள் நுழைந்த மணிமேகலை அவளின் சிந்தனை தோய்ந்த முகத்தை கண்டு ஆதரவாய் தோள் பற்றியவாறு அவளருகில் அமர்ந்தாள்.

“என்னவாயிற்று என் சுட்டி தங்கைக்கு இப்படி ஒரு உணர்ச்சியை அவள் முகத்தில் கண்டதில்லையே.அவளுக்கு சற்றும் ஒப்பாத கவலை தோய்ந்த சிந்தனை?”

“ம்ம் சரிதான் ஆனால் மனம் ஒரு நிலையில் இல்லை மணிமேகலை.எதோ ஒன்று நடக்க போகிறது என என் உள்மனம் அடித்துக் கூறுகிறது.”

“சிவகங்காவதி என்ன இது இத்துனை தீவிரமாக பேசுகிறாய்!!அப்படி என்னவாயிற்று?”

“தெளிவாய் என்னவென தோன்றவில்லை ஆனால் உங்கள் அனைவரையும் விட்டு வெகுதூரம் செல்லப் போகிறேனோ என்று தோன்றுகிறது.”

“சரி தான் பெண்ணுக்கு திருமண ஆசை வந்துவிட்டதோ என்னவோ..உன் புகுந்த அகத்திற்கு செல்ல போகும் நாள் வந்திருக்குமாய் இருக்கும் வீணாக மனதை போட்டு அலட்டிக் கொள்ளாதே..வா உன்னை அரசியார் பார்க்க வேண்டுமென அழைத்தார்.”

அந்த நாளுக்குப் பின் சிவகங்காவதி மிகவும் தீவிரமாகவே இருந்தாள்.எதேதோ சிந்தனைகளில் தனக்குள்ளேயே உழன்று கொண்டிருந்தாள்.உடல் மெலிந்து நலிந்து அவளின் பெற்றோருக்கு அவளை பார்க்கவே மனம் ஒப்பாமல்  போனது.

இருந்தும் அவளின் மௌனம் அவர்களை வாய் திறக்க முடியாமல் செய்தது.இந்த நிலையில் அன்று இரவு வழிப்பறி கொள்ளையர்களை கண்காணிப்பதற்காக செல்வதற்கு தயாரானாள்.

சேதிராயன் அவளின் பாதுகாப்பிற்காக சிறப்பு பூஜையொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.அதிகாலையிலேயே எழுந்தவள் அனைவருக்கும் முன்பாய் பூஜையறையை சென்றடைந்தாள்.

தன் ஈசனை குளிர்விப்பது என்பது அத்துனை சாதாரண விஷயம் இல்லையே அவளுக்கு!

தன்முன் இருக்கும் ஈசனை மனக்கண்ணில் நிறுத்தி விழி மூடியவளுக்கு அவளின் ஈசன் கூறவரும் செய்தி புரிந்தும் புரியாமலுமாய் இருந்தது.இருந்தும் தன்னை நிதானப்படுத்தி கண்முன் வரும் காட்சிகளை கவனிக்க முயன்றாள்.

முகலாயர்களின் கொடியும் சில பல கோட்டைகளும் அதில் கைகளில் சங்கிலி பூட்டிய வண்ணம் இவள் இருந்தாள்.ஓரளவு விஷயத்தை ஊகித்தவளுக்கு மனம் பதைபதைப்பாய் இருந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

கண்ணம்மாவின் " உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

யாருக்கும் தெரியாமல் தனதறைக்குச் சென்றவளுக்கு தன் துணிவையும் மீறிய சிறு சலனம் எழுந்தது.எதிரிகளின் நோக்கம் புரிந்தாலும் என்ன யுக்தியை கையாளப் போகிறார்கள்,எத்துனை பேர் இருப்பார்காள் வெறும் ஆறு பேரான தங்களால் சமாளித்து விட முடியுமா?

தந்தையிடம் இதையெல்லாம் மறைப்பது மிகப் பெரும் தவறு தான் ஆனாலும் தந்தையை இழக்க நான் தயாராக இல்லை.என் உயிர் போனால் என் பெற்றோருக்கு மட்டுமே இழப்பு ஆனால் தந்தையை இழந்தால் தலைவனை இழந்த இந்த பாளையத்தை துண்டாட எதிரிக்கூட்டம் காத்திருக்கிறது.

எனவே இதை யாருக்கும் தெரியப்படுத்தக் கூடாது.இந்தப் பிறவியில் என் நாட்டை பாதுகாக்கும் ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.இதை எக்காரணம் கொண்டும் தவறவிட மாட்டேன்.

அதே நேரம் என் உயிரை இழந்தாலும் இழப்பேனேயன்றி என் கற்பிற்கு சிறு களங்கம் கூட நேரவிடமாட்டேன்.அதற்கும் தயாராகவே நான் செல்ல வேண்டும்.இப்போதே அதற்கும் வழி செய்கிறேன்.

அங்கிருந்த சுரங்க பாதை வழியே கோட்டையை விட்டுச் சற்று தொலைவு காட்டிற்குள் சென்று கொடிய விஷச் செடியின் சாற்றை ஒரு குப்பிக்குள் அடைத்து எடுத்து வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.