(Reading time: 20 - 40 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 48 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

ப்போது எதற்கு எனக்கு ஆதரவாக இவள் பேசுகிறாள்.. நான் அவளிடம் பேசச் சொல்லி கேட்டேனா?” என்பதாக அருள்மொழி யோசித்தப்படியே சுடரொளியை முறைத்துப் பார்க்க, அமுதன் அந்த நேரம் தான் சுடர் மகியை காதலிக்கும் விஷயத்தை அத்தனை பேர் முன் போட்டு உடைத்தான்.

“என்ன இவள் மகியை காதலிக்கிறாளா?” என்பது போல் அருள் அப்போதும் அதிர்ச்சியாக பார்க்க, அவளை போல் தான் மற்றவர்களும் அமுதன் சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ச்சியானார்கள்.

மகியும் ஒருவிதமான மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியில் இருக்க, இப்படி அமுதன் அத்தனை பேர் முன்பும் இந்த விஷயத்தை சொல்லிவிடுவான் என்று எதிர்பார்க்காத சுடருக்கு இதை அனைவரும் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று நினைக்கும் போதே ஒருமாதிரி சங்கடமான சூழ்நிலையாக அது தெரிந்தது.

காதல் ஒன்றும் தவறான விஷயம் இல்லை. அதிலும் மகிழ் ஒருவிதத்தில் அவளுக்கு திருமணம் செய்துக் கொள்ளும் முறை உள்ளவன் தானே, அதனால் அது ஒன்றும் குற்றம் புரிந்த செயல் இல்லை தான், ஆனால் அமுதன் அந்த விஷயத்தை சொன்னதோடு நிறுத்தியிருக்கலாம்.

என்னத்தான் அவள் அவனை சங்கடமான சூழ்நிலையில் நிறுத்தியிருந்தாலும், அதற்கு கோபம் கொண்டவன், அவளையும் அதே சங்கடமான சூழ்நிலையில் நிறுத்துவோம் என்று நினைத்து பார்க்காமல் மேலும் அவனை அறியாமலேயே இன்னும் பேசினான்.

“இதெல்லாம் உன்னால தான் வந்துச்சு சுடர்.. காதல் வந்தா அதை தைரியமா சொல்லணும்.. ஆனா நீ சொல்லல.. அருள்க்கும் மகிக்கும் கல்யாணம் பேசறாங்கன்னு வந்து சொன்ன.. சரி நானாவது மகிக்கிட்ட பேசறேன்னு சொன்னா அதையும் கேக்காம அருளை வெளிய அழைச்சிட்டு போற பிளானை நீ தான் சொன்ன.. அது இப்போ எங்க கொண்டு வந்து விட்ருக்கு பாரு..” என்று ஒரு கோபத்தில் அவளை குற்றம்  சாட்டியவன், அத்தனை பேர் சூழ்ந்திருக்க இந்த விஷயத்தை சொல்கிறோம் என்பதை உணராமல் சொல்லிவிட்டான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அப்போ இது வேணும்னே செஞ்ச சதி வேலை தானா? என் பொண்ணை சீரழிக்க திட்டம் போட்டு கூட்டிட்டுப் போயிருக்கீங்க.. நல்லவேளை அவளுக்கு உடம்பு சரியில்லாம போனதால அவ தப்பிச்சா.. இல்லை என்னோட பொண்ணை என்ன செய்ய பார்த்தீங்களோ..” என்ற கலையின் ஆவேசமான பேச்சில் தான், அவன் செய்த தவறு அமுதனுக்கு புரிய ஆரம்பித்தது.

ஆனால் இனி என்ன செய்ய முடியும்? அத்தனை பேர் முன்னிலையில் உளரிவிட்டானே, பதட்டத்தோடு சுடரின் முகத்தை பார்க்க, அவள் கூனி குறுகி நின்றிருந்தாள்.

“அய்யோ என்னோட பேத்தி வாழ்க்கையை அழிக்க எத்தனை நாள் இவ காத்திருந்தாளோ, அதுக்காகவே வந்தா போல, அன்னைக்கு அவளுக்கு தெரியக் கூடாதுன்னு தானே அவளை அனுப்பிட்டு மகி, அருள் கல்யாண விஷயமா பேசினோம்.. ஆனா அதை ஒளிஞ்சு இருந்து கேட்டுட்டு என்ன காரியம் செஞ்சு வச்சிருக்கா பாரு..” என்று பாட்டி புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

மனதார இன்னும் மகளாக ஏற்றுக் கொள்ளவில்லையென்றாலும் இங்கே குற்றவாளியாக நிற்பது கதிரின் மகள் தானே, இதில் அவளுக்கு உதவ என்று பிரச்சனையை உருவக்கியவன், அவரது தோழியின் மகன், இப்போது அதற்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டுமல்லவா? அதனால் அவர்கள் இருவர் மீதும் கோபம் கொண்டவர்,

“அமுதன் என்ன செஞ்சு வச்சிருக்க..?” என்று அவனிடம் கேட்டவர்,

அப்போதும் சுடரை பார்த்து நேரடியாக எதுவும் கேட்காமல், “என்ன எழில் இது..” என்று தன் மனைவியை பார்த்து தான் கேட்டார்.

எழிலுக்குமே சுடர் இப்படியெல்லாம் செய்திருப்பாளா? என்பது இன்னும் நம்ப முடியாத விஷயமாக இருக்க,

“சுடர் என்ன இதெல்லாம்.. அருளை வெளிய கூட்டிக்கிட்டு போகச் சொல்லி நீதான் சொன்னீயா?” என்றுக் கேட்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அதில சுடர் அமைதியாக இருக்க, இப்போது தன் தவறை உணர்ந்தவனாக அமுதனே ஏதோ சமாளிக்க நினைத்து, “அது ஆன்ட்டி சுடர் என்ன சொன்னான்னா..” என்று ஏதோ சொல்ல வர,

“என்ன தம்பி இது.. இப்போக் கூட உங்களை கட்டாயப்படுத்தக் கூடாதுன்னு நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.. ஆனா நீங்க என்ன செஞ்சு வச்சிருக்கீங்க.. இதை உஙகக்கிட்ட எதிர்பார்க்கல..” என்ற புகழேந்தி,

பின் சுடரையும் பார்த்து.. “என்னம்மா இதெல்லாம்..” என்றுக் கேட்டார்.

“சுடர் முன்ன நானே ஒருமுறை பொண்ணு பார்க்க வரப்ப பொண்ணு வீட்ல இல்லன்னா தப்பா பேசுவாங்கன்னு பக்கத்து வீட்ல நடந்ததை சொல்லியிருக்கேனே, அது தெரிஞ்சும் நீ இப்படி செஞ்சிருக்கேன்னா என்ன அர்த்தம் சுடர்.. தெரிஞ்சே தான் இப்படி செஞ்சீயா?” என்று பூங்கொடி கேட்ட போது,

“அய்யோ இல்ல அத்தை.. அப்படில்லாம் இல்ல..” என்று அப்போது தான் அவள் வாயை திறந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.