(Reading time: 20 - 40 minutes)

ப்படி சுடருக்கு மகியிடம் பேச வேண்டியிருந்ததோ, அப்படித்தான் அமுதனுக்கு அருளிடம் பேச வேண்டியிருந்தது. சுடருக்காக அவளை  அழைத்துச் செல்ல நினைத்தாலும், அதன்பின் அருளுக்காக தானே அவன் யோசித்தான். அவளுக்கு மட்டும் அங்கு அப்படி ஒரு பிரச்சனை ஏற்படாமல் இருந்திருந்தால், அவளை விரைவாக வீட்டுக்கு அழைத்து வந்திருந்திருப்பானே, அதை இந்த வீட்டில் உள்ளவர்கள் தான் புரிந்துக் கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் அருளால் புரிந்துக் கொள்ள முடியும் என்று நினைத்தவனாக, அவளிடம் பேசிவிட்டு செல்ல நினைத்தவன் அவள் அருகே செல்ல முயற்சிக்க, அவனை அவளை நெருங்க விடாமல் அறிவு தடுத்தான்.

இத்தனை நேரம் நடந்த பிரச்சனையில் மகி சூழ்நிலை கைதியாக போக, அமுதன் மீது இருந்த கோபத்தை அவனால் வெளிக்காட்ட முடியவில்லை. ஆனால் அறிவழகனால அப்படியிருக்க முடியவில்லை. வேண்டுமென்றே அருளை அவன் ரெசார்ட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறான் என்று தெரிந்த நொடி, அவனை அடித்து நொறுக்கிவிடும் அளவுக்கு அவனுக்கு ஆத்திரம் வந்தது. ஆனால் பெரியவர்கள் அனைவரும் இருப்பதால், அதுவும் கதிர் மாமாவிற்கு அமுதன் தெரிந்தவன் என்பதால் இத்தனை நேரம் அவன் அமைதியாக இருக்க, இப்போது அருளிடம் அவன் பேச வந்ததும்,

“அதான் மாமா உன்னை இங்க இருந்து கிளம்ப சொன்னாருல்ல.. சும்மா போக பிடிக்கலையா? ரெண்டு வாங்கிக்கிட்டு தான் போகணுமா?” என்றுக் கேட்டான்.

“நான் அருள்க்கிட்ட பேசிட்டு போயிட்றேன்..” என்று அமுதன் பதில் கூற,

“இன்னும் அவக்கிட்ட என்ன பேசி அவளை காயப்படுத்த போறீங்க..” என்று இப்போது இலக்கியா பேசினாள். அருளை வேண்டாமென்று சார்லஸ் சொல்லமாட்டான் என்று அவள் தானே அதிகம் நம்பினாள். இதில் அவன் இந்த அளவுக்கு செய்திருப்பான் என்று அவள் நினைக்கவேயில்லை. அந்த கோபத்தில் அவள் பேச,

அவன் திட்டமிட்டு அவளை அழைத்து சென்றான் என்று தெரிந்த நொடி அவன் மீது கோபத்தில்  இருந்த அருள்மொழி, அவளே அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

“என்கிட்ட என்ன பேசணும்.. இன்னும் கூட என்கிட்ட ஏதாவது பேச இருக்கா என்ன? ஏதோ ஒரு எதிர்பாராத சூழ்நிலையில் நடந்த ஒரு விஷயத்துக்காக உங்களை கட்டாயப்படுத்தி இந்த கல்யாணத்தை நடத்த நினைச்சத நினைச்சு எனக்கும் சங்கடமா தான் இருந்துச்சு..

நான் வீட்ல சொல்லாம போனது தான் இதுக்கெல்லாம் காரணம்னு மனசு சொல்லிக்கிட்டே இருந்துச்சு.. இருந்தும் எத்தனையோ முறை உங்களை ஹர்ட் பண்ணியும் என்னால செய்ய முடியும்னு நம்பிக்கை வச்சு ஒரு வேலைக்காக  என்னை கூப்பிட்டீங்க.. நம்மால முடியும்னா கண்டிப்பா செய்யலாம்னு தான் வந்தேன்..

ஆனா நீங்க சொன்ன மாதிரி எப்பவும் குடும்பம்ங்கிற கூட்டுக்குள்ள அடைஞ்சு அதை தவிர எதுவும் முக்கியமில்லன்னு பிடிவாதமா இருந்திருக்கணும்.. உங்களுக்காக அதை கொஞ்சம் மீறினேன் பாருங்க.. எப்பவும் தள்ளி வச்சு பார்க்கிற உங்களை கொஞ்சம் நட்போடு நெருங்கினதுக்கு எனக்கு நல்லா வேணும்..”

“நீ சொன்னாலும் சொல்லாட்டியும் உன்னை நான் அந்த வேலைக்காக மட்டும் தான் அழைச்சிட்டு போனேன்.. அங்க நடந்தது நம்மள மீறின ஒரு விஷயம்.. நீ மட்டும் நல்லா இருந்திருந்தா.. உனக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்திருக்காது.. நீ நல்லப்படியாவே வீட்டுக்கு வந்திருக்கலாம்..”

“ஆனா அந்த வேலைக்காக அழைச்சிட்டு போனது கூட ஒரு நாடகம் தானே, என்னோட அம்மா சொன்னது போல ஒருவேளை எனக்கு உடம்பு சரியில்லாம போகாம இருந்தா, அப்போ உங்க ப்ரண்ட்க்காக நீங்க என்ன வேணும்னாலும் செஞ்சிருப்பீங்கல்ல..” என்ற அவளது கேள்வியில்,

“மொழி..” என்ற அதிர்ச்சியோடு அவளது பேரை அழைக்க,

“இனி என்னை அப்படி கூப்பிடாதீங்க.. ஒருமுறை என்னோட கோட்பாடுகளை மீறி நான் பட்றதெல்லாம் போதும்.. இனி நீங்க யாரோ தான், கொஞ்ச நாள் உங்க கூட வேலை பார்த்ததை கூட நான் மறக்கணும்னு தான் நினைக்கிறேன்.. இனி உங்களை பார்க்கவே கூடாதுங்கிறது தான் என்னோட ஆசை.. நீங்க போகலாம்..” என்று சொல்லி முடித்தாள்.

ஆரம்பத்தில் அவன் மீது கொண்ட கோபத்தினால் பேச ஆரம்பித்தவளுக்கு, அவனோடு திருமணம் என்ற பேச்சு வரும்போது கொஞ்சமே கொஞ்சமாய் அவனுக்காக ஏங்கிய மனதில் அவன் ஏற்படுத்திய ரணத்தின் வலியோடு பேச்சை நிறுத்தினாள்.

எத்தனையோ முறை அவனை காயப்படுத்துவது போல் அவள் யாரோ மாதிரி நடந்துக் கொண்டிருக்கிறாள், பேசியிருக்கிறாள், அப்போதெல்லாம் அது அவனை வேதனைப்படுத்தியதில்லை. அப்போது அவனும் அவளை யாரோ என்று தான் நினைத்தானோ, ஆனால் இன்றைய அவளின் பேச்சு அவனுக்கும் மனதில் காயத்தை ஏற்படுத்தியிருந்தது. அவளின் விலகல் அவனுக்கு விருப்பமில்லாமல் தான் இருந்தது. ஆனால் இப்போதும் அவளை யாரோவாக தானே நிறுத்தி முன்பு பேசினான். அவன் மனதில் அவளுக்கு இருக்கும் இடத்தை இன்னும் கூட அவன் முழுமையாக உணரவில்லை. உணர்ந்தாலும் அந்த நேரம் அவனால் எதுவும் செய்திருக்கவும் முடியாது. அவள் போகலாம் என்றதும் அவனும் வெளியேறிவிட்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

கண்ணம்மாவின் " உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அடுத்து அவன் தங்கியிருந்த இடத்திற்கு வந்தவன், சுடரிடம் மன்னிப்பு கேட்க நினைத்து அவளுக்கு அழைப்பு விடுத்தான். ஆனால் அவளோ,

“நான் பாட்டுக்கு அமைதியாக இருந்தேன்.. நீதானே மகி உன்னை காதலிக்கிறான்.. அவனை கல்யாணம் செஞ்சுக்கிட்டா உனக்கு ஒரு அழகான குடும்பம் கிடைக்கும், உங்கப்பா திரும்ப கிடைப்பார்னு சொன்ன, அந்த ஆசையோட மகிழை நான் காதலிக்க ஆரம்பிச்சாலும், இப்போ என்னோட மனசு முழுக்க என்னோட மகிழ் தான் இருக்கான்.. ஆனா அவனை எனக்கு கிடைக்காம செஞ்சுட்டியே..

நீ எனக்காக எதுவும் செய்வன்னு நினைச்சேன்.. ஒருவேளை எனக்காக கூட அருளை கல்யாணம் செஞ்சுக்க முடியலன்னா, அதை சொல்லியிருக்க வேண்டியது தானே டா.. அதைவிட்டுட்டு நான் தான் தப்புக்கு முழுக்க காரணம்னு எல்லோர் முன்னாடியும் சொல்ற.. இப்போ என்னோட காதலை குழி தோண்டி புதைச்சிட்டியே, இதுக்கும் மேல சுடர்னு உனக்கு ஒரு ப்ரண்ட் இருந்ததை மறந்திடு.. உன்னை நான் திரும்ப பார்க்கவே விரும்பல..” என்று அவனை பேசவிடாமல் பேசிவிட்டு அழைப்பை அணைத்தாள். இப்போது அவளை சமாதானம் செய்ய முடியாது, கொஞ்ச நாள் போகட்டும் என்று நினைத்த அமுதன், அங்கிருக்க பிடிக்காமல், லண்டன் செல்ல ஏற்பாடு செய்தான்.

ஒருப்பக்கம் கதிரவன் சுடரை இங்கு வரவழைத்ததால் எழிலை திட்டிக் கொண்டிருந்தார். இப்படி தனக்கு ஒரு தலைக்குனிவு வரும்படி ஆகிவிட்டதே என்று அவளிடம் கோபப்பட்டார்.

அவளின் அன்னை சுடரை மிக கேவலமாக பேசும்போது கோபம் கொண்டு கணவன் அந்த வீட்டை விட்டு வெளியேறிய போது, அவருக்கு மகள் மீது கொஞ்சமாக பாசம் இருந்ததை நினைத்து மகிழ்ந்தவளுக்கு, அவரின் இந்த பேச்சு சலிப்பை ஏற்படுத்தியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.