(Reading time: 13 - 25 minutes)

அரண்மனைக்குத் திரும்பியவள் அதை ஒரு கயிறில் கோர்த்து தன் கழுத்தில் கட்டிக்  கொண்டாள்.அதன் பின் அப்போது தான் வருவதை போன்று சென்று பூஜையில் அனைவரோடும் கலந்து கொண்டாள்.

அரை நாள் பூசை முடிந்து தாய் தந்தையோடு உணவருந்த அமர்ந்தவள் அத்தனை நாளின் மௌனத்தையும் கலைத்து தாய் தந்தையோடு மனம் திறந்து பேச ஆரம்பித்திருந்தாள்.

“சிவகங்காவதி இப்படி நீ பேசக் கேட்டு எத்தனை திங்கள் ஆகிவிட்டது!”

“ஏதோ மனம் ஒரு சலனத்தில் சிக்கிக் கொண்டது தந்தையே இன்று அனைத்தும் தெளிந்துவிட்டது. தாங்களும் தாயும் இன்றுபோல் என்றுமே மனமொத்த தம்பதிகளாய் வாழ வேண்டும்.தாயே நாட்டின் அரசரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.”

“அடடா என்ன என் மகளுக்கு தந்தையின் மீது சட்டென இத்துனை பாசம்?”

“தாயே விளையாட்டு போல் தோன்றினாலும் உண்மையைதான் கூறுகிறேன். பிரச்சனை பெரிது உடன் இருப்பவர்களே நமக்கு ஆபத்தாய் இருக்கிறார்கள். யாரையும் நம்பி மோசம் போய்விட வேண்டாம்.”

“என்னம்மா நீ எங்களோடு இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை?”

“ம் நான் இருந்தால் காத்துவிடுவேன். ஆனால் எப்போதும் அது முடியுமா என்று தெரியவில்லையே!”

“சிவகங்காவதி!!!”

“அட ஏதோ தோன்றியது கூறிவிட்டேன் ஏன் இருவரும் இப்படி விசனப்பட்டு கொள்கிறீர்கள்.சரி சரி நான் இருக்கும் வரை நம் பாளையத்திற்கு எந்த தீங்கும் நேர்ந்துவிடாது போதுமா?”

உணவை முடித்தவள் தனது அந்தபுரத்தில் தனதறையை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.அந்நேரம் அங்கு வந்த மணிமேகலை பின்னிருந்து அவள் தோள் பற்றினாள்.

“ஆங்!!நீயா வா மணிமேகலை..”

“என்னவாயிற்று சிவகங்காவதி இப்போது தான் அரசியாரை சந்தித்து வருகிறேன்.ஏதேதோ கூறினாயாம்!”

“ம் உன்னிடம் கூறுவதற்கு கூட சில விடயங்கள் இருக்கிறது தான். நீ எப்போதுமே என் பாசத்திற்குரிய தமக்கை அதையும் தாண்டி என்னுடைய உயிர்த் தோழி.என்றும் வாழ்வில் உனக்கு மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கட்டும்.”,என்றவள் அவளின் கன்னம் வருடினாள்.

“என் தங்கைக்கு இன்று என்னவாயிற்று?! நீ சொல்வதெல்லாம் கேட்கும்போது  மனம்  சலனப்படுகிறது சிவகங்காவதி”

“கூறுவதை கவனமாக கேட்டுக் கொள் மணிமேகலை அதே நேரம் உன் மனதிற்குள்ளேயே போட்டு புதைத்துக் கொள்.இந்த பாளையத்தில் நானிருக்க போகும் இறுதி நாள் இன்று தான் என தோன்றுகிறது.அதை விட முக்கியமாய் இதற்கான மிக முக்கிய காரணம் உன் தந்தை.”

“சிவகங்காவதி!!!”

“என் கணிப்பு சரி எனில் இது நூறு சதவிகித உண்மை மணிமேகலை.இந்த வழிப்பறி நாடகம் இந்த நாட்டிற்காக என் தந்தைக்கு விரிக்கப்பட்டது ஆனால் விதியின் வசம் அதில் நான் நுழையப் போகிறேன்.

இதை வெளியில் கூறுவதால் ஒரு நன்மையும் நடக்கப் போவதில்லை. போர் நடந்து பல அழிவுகளை சந்தித்து மக்கள் தான் துன்பத்தை அனுபவிக்கப் போகின்றனர்.எனவே இது என் ஒருத்தியோடு முடிந்து போவது நல்லது.

இத்தனையையும் உன்னிடம் கூறுவதற்கான காரணம் எனக்கு உன் திறமையின் மேல் இருக்கும் நம்பிக்கை தான்.என்னிடத்தில் நீ இருந்து காப்பாற்றப் போவது என் தாய் தந்தையை மட்டுமல்ல நம் நாட்டையும் தான். எக்காரணம் கொண்டும் தந்தை பாசத்தில் தவறிழைத்து விடாதே மணிமேகலை.

உன் மேல் இருக்கும் நம்பிக்கையால் மட்டுமே இன்று இரவு நான் செல்ல போகும் விடயம் யாருக்கும் தெரியாத பட்சத்தில் உனக்கு மட்டும் தெரிவித்திருக்கிறேன்.தயை கூர்ந்து எனக்காக இந்த கடமையை ஏற்றுக் கொள் அக்கா”

முதன் முறையாய் அவளின் அக்கா என்ற விழிப்பை கேட்டவளுக்கு கண்கள் குளமாக அவளை அப்படியே தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள் மணிமேகலை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மஹாவின் "எனதுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஏனடி இத்தனை நாட்கள் இல்லாது இப்போது போய் எனை அக்கா என்கிறாய்.நீ இல்லாத இவ்விடம் எனக்கு எவ்வாறு இருக்க போகிறது என்னையும் உன்னோடு அழைத்துச் சென்றுவிடு சிவகங்காவதி.எதுவாயினும் இருவரும் சேர்ந்தே சந்திப்போம்.”

“புரியாமல் பேசாதே ஆண் வாரிசற்ற இப்பாளையத்தின் நிலையை யோசித்தாயா!”

“ஆனால்.. ஆனால் உன் அளவு திடமும் தைரியமும் எனக்கில்லை சிவகங்காவதி!!”

“எந்த ஒரு மனிதனுக்கும் அதற்கான சூழ்நிலை வரும் வரையில் அவனின் திறமை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதே இல்லை. இப்போது உன் விடயத்திலும் அதுதான்  நடக்கவிருக்கிறது. எனவே எந்த ஒரு நிலையிலும் உன் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் இழந்துவிடாதே புரிந்ததா?”

அவள் கூறிய அனைத்தையும் உள் கிரகித்துக் கொள்ளவே முடியவில்லை மணிமேகலையால். அதற்குள் சிவகங்காவதியைத் தேடி யாரோ வரும் அரவம் கேட்டு அவர்களின் பேச்சு அப்படியே தடைபட்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.