(Reading time: 18 - 35 minutes)

“நிஜமா தான் சொல்றீயா மகிழ்.. உனக்கு சார்லி மேல கோபம் இருக்கும்.. அருளுக்கும் அவனுக்கும் கல்யாணம் பேசறது உனக்கு பிடிக்காதுன்னு நினைச்சேன்.. நேத்து ஆனந்தி ஆன்ட்டி இதைப்பத்தி கேட்டப்பவே எனக்கு  அவ்வளவா உடன்பாடு இல்ல.. ஆனா அவங்க ஆசைப்பட்டாங்க.. அதனால அருள்க்கிட்ட கேக்கறதுக்கு முன்ன வீட்ல போய் பேசுங்கன்னு நான் தான் சொன்னேன்.. இருந்தாலும் நம்ம சுயநலத்துக்காக அருள்க்கு திரும்ப கஷ்டம் கொடுக்கிறோமோன்னு ஒருமாதிரி மனசுக்கு கஷ்டமா இருக்கு மகிழ்.. அருளும், அத்தை, மாமா, கலை பெரியம்மா, பாட்டி எல்லோரும் ஒத்துக்கிட்டாலும் கூட எனக்கு அப்படி தான் தோனுது..” என்று சொல்ல,

அவனுக்குமே அப்படி ஒரு உறுத்தல் தானே மனதில் இருக்கிறது. இதில் அருள் வேறு அவனை காயப்படுத்த என்றே பேச, அதெல்லாம் அவன் மனதிற்குள் உழன்று கொண்டிருந்தாலும், அவளை வருத்தப்பட வைக்கக் கூடாது என்பதால்,

“இங்கப்பாரு ஏன் அப்படி நினைக்கிற.. அப்பா, அம்மா, கலை அத்தை எல்லோரும் யோசிக்காம இந்த முடிவை எடுத்திருக்க மாட்டாங்க.. அவங்களுக்கு அருள் மேல இருக்க அக்கறையை விடவா நமக்கு அதிகம் இருக்கு.. அதுவும் இல்லாம உங்க ஆனந்தி ஆன்ட்டி மோசமானவங்க இல்லையே, அப்புறம் உன்னோட சார்லியும் ரொம்ப மோசமில்லை தானே.. ஏதோ உனக்காகன்னு செஞ்சுட்டான்.. அதனால இதெல்லாம் யோசிக்காம நிச்சயதார்த்திற்கு கிளம்பு..”

“இல்லை நான் வரல.. எல்லோரையும் பார்க்க எனக்கு சங்கடமா இருக்கு.. அருள்க்கு நான் அங்க வர்றது பிடிக்குமான்னு தெரியல.. அதில்லாம சார்லி மேல இருக்க கோபம் எனக்கு இன்னும் குறையல.. அதனால் இந்த நிச்சயதார்த்திற்கு நான் வரப் போறதில்ல..”

“அடப்பாவி சார்லி மேல இன்னும் கோபம் குறையலையா? அப்புறம் என்னோட ப்ரண்ட திட்டாதன்னு என்க்கிட்ட சண்டை போட்ட..”

“அது அப்போ உன்மேல அதைவிட கோபமா இருந்தேன் அதான்.. ப்ளீஸ் மகிழ் நான் வரல, நீ மட்டும் போயிட்டு வா..”

“இங்கப்பாரு சுடர்.. நீ சார்லியோட ப்ரண்டோ, இல்ல கதிர் மாமாவோட பொண்ணோ இல்ல.. நீ மகியோட மனைவி.. இன்னும் நமக்கு முறையா கல்யாணம் ஆகாம இருக்கலாம்.. ஆனா நான் உன் கழுத்தில் எப்போ அந்த மஞ்சள் கயிறை கட்டினேனோ, அப்போதே நீ என்னோட மனைவி தான், அதை யார் ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்கலன்னாலும் பரவாயில்லை, நீ அந்த வீட்டு மருமகள், உனக்கு அந்த உரிமை இருக்கு புரியுதா.. அதனால் நீ வரணும்..” என்று தீர்மானமாக கூறினான்.

இதைவிட வேறு எப்படி அவளுக்கு அவன் நம்பிக்கையை அளித்துவிட முடியும், காதலை வாய் வார்த்தையாக சொல்லிட வேண்டும் என்று இல்லை, தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் அதை காட்டி விடலாம், குடும்பம் தான் முக்கியம், அவர்கள் விருப்பப்படி தான் திருமணம் என்று சொல்லிக் கொண்டிருந்தவன், அவள் இந்த நாட்டை விட்டே செல்கிறாள் என்று தெரிந்த போது, விமான நிலையம் சென்று அவள் கழுத்தில் தாலி கட்டி அவளை ஏன் அழைத்து வர வேண்டும்,

அவள் மீது வெறும் அன்பும் அக்கறையும் மட்டுமே இருப்பதால் செய்ய கூடிய செயல் இல்லையே அது, அவளை தன்னோடு தக்க வைத்துக் கொள்ள தேடிய வழி தானே அது, அதன்பின்னால் ஒளிந்திருப்பது காதல் அல்லவா!! அவள் விருப்பத்தை நிறைவேற்றிட அவன் நினைத்தது அதனால் அல்லவா! அவன் மனதை அவன் சொல்லி தான் அவள் அறிய வேண்டுமா? அவன் செய்கைகளில் அவள் அதை உணர போவதில்லையோ..

னைவரிடமும் அருள்மொழி திருமணத்திற்கு சம்மதம் சொல்லியிருந்தாலும், அவள் மனம் அவளுக்கே புரியவில்லை, அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை, குழப்பத்துடனே அமர்ந்திருந்தாள். அந்த நேரம் தான் அமுதன் அவளை அலைபேசியில் அழைத்தான்.

அலைபேசியில் பாடல் ஒலித்ததும் யார் அழைக்கிறார்கள் என்றெல்லாம் கவனிக்காமல் அப்படியே அந்த அழைப்பை ஏற்றவள், “ஹலோ..” என்றாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "உன்னை விட மாட்டேன் என்னுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“மொழி.. நான் தான்..” என்ற அமுதனின் குரல் கேட்டதும்,

“இவனா.. இப்போதிருக்கும் மனநிலையில் இவன் என்று தெரிந்திருந்தால் எடுத்து பேசாமல் இருந்திருக்கலாமே..” என்று நினைத்தவள்,

அவன் காத்திருப்பது தெரிந்து, “ம்ம் சொல்லுங்க..” என்றாள்.

“என்ன சொல்றது மொழி.. அம்மா வந்து பேசும் போது நீ கல்யாணத்துக்கு சரின்னு சொல்லுவியான்னு சந்தேகமா இருந்துச்சு.. என்மேல உனக்கு கோபம் இருக்குன்னு தெரியும், ஆனா அம்மாவை உனக்கு பிடிக்கும்.. ஆனாலும் அவங்க இப்போ இருக்க கண்டிஷன்ல எங்க நீ வேண்டாம்னு சொன்னா அவங்களுக்கு அந்த பதில் எப்படி இருக்குமோன்னு ரொம்ப தவிச்சிட்டேன் மொழி.. ஆனா நீ சரின்னு சொல்லி அம்மாவை மட்டும் இல்ல என்னையுமே நீ ரொம்ப சந்தோஷப்பட வச்சிட்ட..” என்ற அவனது பேச்சு அவள் இருக்கும் மனநிலையை இன்னும் மோசமானதாய் மாற்றுவது போல் இருந்ததால், மேலும் அவன் ஏதோ பேச வரவும்,

“நான் இப்போ கொஞ்சம் வேலையா இருக்கேன்.. அப்புறம் பேசலாமா?” என்று அலைபேசியை அணைத்தவள் தான், அடுத்து அவனை அவர்களின் நிச்சயதார்த்தத்தில் தான் சந்தித்தாள். அவனும் அதன்பின் அவளிடம் பேச முயற்சித்தும் முடியவில்லை, நிச்சயதார்த்த புடவை எடுக்கவும் அவள் வரவில்லை, அனைத்துமே குடும்பத்தில் இருப்பவர்களின் விருப்பத்திற்கு அவள் விட்டுவிடுவாள் என்பதால் ஆனந்திக்கோ இல்லை அமுதனுக்கோ அது வித்தியாசமாக படவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.