(Reading time: 14 - 28 minutes)

ஆனால் பிகானரின் இளவரசராக இருந்தும், அன்று தனி வீரனாகவே வந்ததுப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தாள்.

மகாராணாவோடு வந்தவர்கள் அன்று பகல் முழுதும் நன்றாக ஒய்வு எடுத்துக் கொண்டனர். ராணாவும் பிகானர் தலைவரும் தனியாக அரசியல் நிலவரம் பேசிக் கொண்டு இருந்தனர்.

ஆதவன் மறையும் பொழுதில் , பிகானரின் பணிப்பெண் வந்து பெண்களை அழைத்துச் சென்றாள்.

ஊரில் நடுவில் மிகப் பெரிய மைதானம் போன்ற இடமிருக்க, அங்கே சில கல்மேடைகள் அமைக்கப் பெற்று இருந்தது. ஒன்றில் மகாராணா மற்றும் பிகானர் தலைவர் இருவரும் ராஜஸ்தானிய கம்பளம் ஒன்றில் அமர்ந்து இருந்தனர். அருகில் கண்ணைக் கவரும் வண்ணங்களில் தலையணைகள் நான்கு பக்கமும் அடுக்கப் பட்டு இருந்தது.

மற்றுமொரு கல் மேடையிலும் கம்பளம் விரிக்கப்பட்டு தலையணைகள் அடுக்கப் பட்டு இருந்தன. அங்கே பிகானர் அரச குடும்ப பெண்களும், ரானாவோடு வந்த பெண்களும் அமர்ந்தனர்.

முக்கிய அதிகாரிகள் மற்ற மேடைகளில் அமர, மக்கள் அங்கிருந்த மணல் மேடுகளில் அமர்ந்து கொண்டனர்.

எல்லோரும் அமர்ந்ததும் ராஜஸ்தானிய பாரம்பரிய நடனங்களும், பாடல்களும் அரங்கேறின. அது போக ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் உள்ள பாடல்களை அவர்கள் மொழியில் பாடினார்கள். கண்ணனின் லீலை நடத்திக் காட்டப் பட்டது.

எல்லோரும் ரசித்தப் பின், கலைஞர்களுக்கு ராணாவின் கையால் சன்மானம் வழங்கப் பட்டது.

இவை எல்லாமே க்ருதிக்காவின் கனவில் வந்து சென்றது. கனவு முடியவும் பொழுது புலரவும் சரியாயிருக்க, அதற்கு மேல் அவள் உறங்கவில்லை.

மீண்டும் ஒட்டகத் திருவிழாவிற்குச் சென்றனர் ப்ரித்விராஜ் மற்றும் மாணவர்கள்.

இன்றைக்கு இவர்கள் குழுவிற்கு வேறு வேறு இடங்களில் இடம் கொடுக்கப்பட்டு இருக்கவே எல்லோரும் பிரிந்து சென்று விட்டனர். ப்ரித்வி இதை எதிர்பார்க்கவில்லை. தன் உதவியாளரிடம் விசாரித்ததில் அன்றைக்கு விடுமுறை நாள் என்பதால் ஏற்கனவே அனேக டிக்கெட்கள் விற்கப்பட்டு விட்டன என்றும், இவர்களுக்கே சற்றுச் சிரமத்துடன் தான் கிடைத்தது என்றும் தெரிவித்தார்கள்.

இன்று பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ராஜஸ்தானிய விளையாட்டுக்கள் போக , பலப் பரிட்சையும் நடைப் பெற்றது.

ப்ரித்வி கிருத்திகா மேல் ஒரு கண் வைத்து இருந்தாலும், எல்லோரையும் கண்காணிப்பதும் அவன் பொறுப்பே என்பதால் கஷ்டப்பட்டான்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நடைபெற்ற போட்டிகளில் பார்வையாளர்களும் கலந்து கொள்ளலாம் என்றவுடன் இந்த மாணவப் பட்டாளங்கள் துள்ளிக் குதித்துக் கிளம்பினர்.

பானையை தலைமேல் அடுக்கி நடப்பது, வேகமான பொம்மை அலங்காரங்கள் போன்ற போட்டிகளில் மாணவிகள் பங்கேற்க, அவர்களால் அங்கிருந்த ராஜஸ்தானியப் பெண்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

ஆண்களுக்கு மல்யுத்தம், கபடிப் போட்டிகள் போன்றவை நடைபெற மாணவர்களும் கலந்து கொண்டு விளையாடினர். வெற்றி பெற முடியாவிட்டலும் கடுமையான போட்டி நடந்து கொண்டு இருந்தது.

இதை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்த ப்ரித்வி கரப்பான் பூச்சி வீராங்கனை எங்கே என்று தேட , அவளோ சற்றுத் தள்ளி ஓரிடத்தில் நின்று இருந்தாள். அங்கே வில் அம்பு எறிதல் போட்டி நடந்து கொண்டு இருந்தது.

இவன் அருகில் சென்ற போது, அவளின் சத்தம் உரத்துக் கேட்க, ஐயோ இங்கே என்ன வம்பு செய்து இருக்கிறாளோ என்று அருகில் சென்றான்.

“கிருத்திகா என்ன பிரச்சினை?”

“வாங்க பிரின்ஸ். உங்களத் தான் நினைச்சேன். “

“என்ன விஷயம்னு கேட்டேன்?

“நான் இந்த கேம் விளையாடறேன்னு சொல்றேன். இவங்க அனுமதி கொடுக்க மாட்டேன்னு சொல்றாங்க?

“ஏன்?

“முறைப்படி ஆர்சேரி படிச்சவங்கதான் கலந்துக்கனுமாம்”

“நீ படிச்சு இருக்கியா?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“இல்லை.

“அப்போ வேறே எதுவும் விளையாட வேண்டியது தானே”

“ஏன் பிரின்ஸ், சும்மா ஜஸ்ட் விளையாடறதுக்கு படிச்சுட்டு வரணும்னா என்ன சொல்றது? நம்ம தீம் பார்க் எல்லாம் போனா இது எல்லாம் விளையாடுவோமே.. அதுக்கு என்ன சர்டிபிகேட்டா காமிச்சுட்டு இருக்கோம்”

ப்ரித்வி திரும்பி அதன் பொறுப்பாளரிடம் பேச, அவர்கள் சொன்னதைக் கேட்டவன் கிருத்திகாவிடம் பேசினான்.

“கிருத்திகா , இது இங்கே போட்டியா நடந்துகிட்டு இருக்கு. கிட்டத்தட்ட நேஷனல் அளவில் பார்டிசிபன்ட் கலந்துகிட்டு இருக்காங்க. இது எல்லாமே ஒரிஜினல் வில் , அம்பு. அந்த வெயிட்டு உன்னாலே தூக்கக் கூட முடியாதுன்னு சொல்றாங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.