(Reading time: 12 - 23 minutes)

“சிவ..கங்காவதி..அப்படி என்ன வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறாய்?”

“என் பெரை யாருமே சரியாய் உச்சரிக்க மாட்டீர்களா?சரி அது போகட்டும் ஒன்றுமில்லை உங்களுடையது சிற்றரசாய் இருப்பினும் அதன் பிரம்மாண்டங்கள் என்னை வியப்டையச் செய்கின்றன.அதைத் தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.”

“எங்கள் உசூர் கட்டிட கலையில் மிகுந்த ஆர்வமுடையவர் அதன் விளைவு தான் இந்த அரண்மனையும் அதைச் சார்ந்த மற்ற கட்டிடங்களும் இத்தனை அழகாய் இருப்பற்குக் காரணம்.”

“ம்ம்”

அதற்குள் அங்கு ஏதோ சத்தம் கேட்க வேகமாய் அனைவரும் கட்டிடத்தின் உள்பகுதிக்குச் சென்று பார்த்தனர்.தலைமைச் சமையல்காரரின் கைககளில் கொதிக்கும் நீர் கொட்டியிருக்க அந்த இடமே பரபரப்பானது.

அவருக்கான சிகிச்சைகளை அளித்து ஓய்வெடுக்க அனுப்பிய பின்னும் ஏதோ சலசலப்பு கேட்டுக் கொண்டேயிருந்தது.சிவகங்காவதி அந்த பெண்ணிடம் என்னவென கேட்க,

“அவருக்கு மட்டும் தான் இங்கு சைவ உணவு நன்றாக சமைக்கத் தெரியும்.அதுதான் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.உசூர் அவர்களும் விருந்தினர்களாக அழைக்கப்பட்ட பக்கத்து சிற்றரசின் இராஜபுத்திரர்களோடு அமர்ந்து இவ்வுணவை பகிர்ந்து கொள்வார்.

சுவையில் ஏதேனும் குறை ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது அதனால் தான் யாரும் பொறுப்பேற்கத் தயங்குகிறார்கள்.”

சில நிமிடங்கள் யோசித்தவள் பின் மெதுவாய்,”உங்கள் அனைவருக்கும் சம்மதம் என்றால் நான் வேண்டுமானால் சமைத்துத் தருகிறேன்.”

அவளின் வார்த்தையில் ஆச்சரியமாய் அவளைப் பார்த்த பணிப்பெண்ணோ தயக்கமாய் அவளை ஏறிட்டாள்.பின் அவளே சென்று அங்கிருந்த ஆண்களில் முக்கியமானவரிடம் விடயத்தை விவரித்தாள்.சிறு பேச்சுவார்த்தைக்குப் பின் சம்மதம் தெரிவித்தவர் சிவகங்காவதியை அழைத்து வேண்டிய உணவைப் பற்றி விவரம் தெரிவித்தார்.

அனைத்தும் இந்துஸ்தானத்தின் பிரசித்தி பெற்ற சைவ உணவுகளாய் இருந்தன.சற்றே தயங்கியவள் தங்கள் முறைப்படியான இராஜபுத்திர உணவுகளை சமைத்துத் தருவதாகக் கூறினாள்.அவரோ இன்று நஸீமிடம் தான் நன்றாக வசவு வாங்கிக் கட்டிக் கொள்ள போகிறோம் என்ற முடிவுக்கே வந்துவிட்டார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "உன்னை விட மாட்டேன் என்னுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

இருந்தும் வேறு வழியில்லை உணவிற்காக மக்கள் வந்து கொண்டேயிருக்கின்றனர்.அதேநேரம் அரச குடும்ப மக்களுக்கும் உணவு பரிமாறும் நேரம் வந்துவிட்டது எனவே தாமதியாது அங்கு கொண்டு செல்வதற்கு பதார்த்தங்களை தயார் செய்தே ஆக வேண்டும்.எனவே அதிகம் யோசிக்காது சரி என்று கூறி விட்டிருந்தார்.

அதன் பின்னான வேலைகள் துரித்தப்படுத்தப்பட்டன.சிவகங்காவதியின் வேகத்தைப் பார்த்து அனைவரும் வாய் பிளந்து நின்றனர்.மிகக் குறைந்த நேரத்தில் விதவிதமான உணவுகள் தயார் செய்யப்பட்டன.இனிப்புகள் மூன்று விதமான கலவை சாத உணவுகள் அவைத் தவிர குழம்பு,பாயாசம், பொரியல் என மொத்தமாய் 16 வகையான பதார்த்தங்கள் தயாராகிவிட்டன.

வாசனையே அனைவருக்கும் மிகுந்த திருப்தியை அளித்திருந்தது.மன்னருக்கான உணவுகளை எடுத்து வருமாறு பணியாட்கள் வந்து தெரிவிக்க அனைத்தும் பரிமாறுவதற்கு ஏதுவாய் சிறு பாத்திரங்களில் எடுத்துச் செல்லப்பட்டன.

நஸீமோடு சேர்ந்து இன்னும் நான்கு அரசர்களும் அரசவை மாந்தர்களும் அமர்ந்திருக்க அவர்களுக்கான விருந்து பரிமாறப்பட்டது.உணவைப் பார்த்தவனுக்கோ கட்டுக்கடங்காத கோபம்.

“தலைமை சமையல்காரர் எங்கே?இது இரஜபுத்திர உணவு வகையில்லையே!விருந்தாளிகளின் முன் எனை அவமானப்படுத்துகிறீர்களா?”

“உசூர் மன்னித்துவிடுங்கள்!!அவருக்கு கையில் காயம் ஏற்பட்ட காரணத்தால் சமைக்க இயலவில்லை..அதனால் இன்றைய உணவு..”

“உணவு??யார் சமைத்தது??இப்போதே என் கண்முன் வர வேண்டும்!”,என்று அவன் முடிப்பதற்குள் சிவகங்காவதியை அழைத்து வர பணிப்பெண் ஒருத்தி ஓடினாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் அங்கு அழைத்து வரப்பட்டாள் சிவகங்காவதி.அவன் கோபப்பட்டு தான் அவளை அழைத்தான் என்ற செய்தி அறிந்திருந்தும் எவ்வித பயமும் கலக்கமும் இன்றி அங்கு நின்றாள்.

“உனக்கு எதற்காக இந்த தேவையற்ற வேலை?உன் பணி என்னவோ அதை மட்டும் பார்த்திருக்க முடியாதா?உனக்கு என்ன தெரியும் எங்களின் பழக்க வழக்கங்கள் பற்றி?”

“தெரியாது தான் ஆனாலும் ஆபத்திற்கு பாவமில்லை என்றுதான் உதவினேன்.அதுமட்டுமல்லாது இது எங்கள் பகுதியின் இரஜபுத்திர உணவு தான்.ருசித்துப் பாருங்கள் சுவை நன்றாக இல்லை எனில் அதற்கான தண்டனையை நான் முழுமையாய் ஏற்றுக் கொள்கிறேன்.”

“என்ன ஒரு நெஞ்சழுத்தம்.ஆக நீ செய்வதையும் சொல்வதையும் தான் இங்கு அனைவரும் கேட்க வேண்டும் இல்லையா?ஒரு அடிமட்ட கைதிக்கு இத்துனை சலுகைகளை யார் வழங்கியது.உன் சிரத்தை தரையில் வீழ்த்தாமல் விட்டது என் தவறு தான்”,என்றவன் ஆத்திரமாய் எழ எத்தனித்த நேரம் அவனருகில் அமர்ந்திருந்த அவனது நம்பிக்கைக்குரிய சிற்றரசனான ரத்தன்சிங் வேகமாய் எழுந்து நின்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.