(Reading time: 13 - 25 minutes)

“யாருடா வீட்ல இருக்கீங்க வெளிய வாடா.. என் பொண்ணை அனுப்ப மாட்டேன்னு சொல்ல உங்களுக்கு என்னடா உரிமை இருக்கு.. என் பொண்ணை இப்பவே என்கூட அனுப்புங்கடா.. ஏய் எவடி உள்ள இருக்கிறது வாங்கடி..” என்று படு கேவலமாக யாரோ பேசுவது கேட்கவும், மதுரிமாவும் யாதவியும் கடந்த காலத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்தார்கள்.

“மது என்னோட அப்பா குரல் போல இருக்கு..” என்று யாதவி சொல்லவும், இருவரும் வெளியில் வந்து பார்க்க, யாதவி சொன்னது போல் பன்னீர் தான் கீழே நின்றிருந்தார்.

அவரை பார்த்து இருவரும் கீழே இறங்கி வரவும், அதற்குள் பன்னீரின் குரல் கேட்டு புவனாவும் பாலாவும் அங்கு வந்துவிட்டிருந்தார்கள். தன் அன்னை வீட்டுக்கு போயிருந்த ரூபினி இன்னும் வீடு வந்திருக்கவில்லை.

பன்னீர் முழு போதையில் நின்றிருப்பதை பார்த்ததுமே பாலா புரிந்துக் கொண்டான்.  அவரை வெளியேற்றும் முயற்சியில் காவலாளி போராடிக் கொண்டிருந்தான்.

“என்ன பன்னீர் குடிச்சிருக்கீங்களா? என்ன கலாட்டா செய்ய வந்திருக்கீங்களா?” என்று கோபமாக கேட்டவன்,

“என்ன செக்யூரிட்டி இது..” என்று காவலாளியை பார்த்து கேட்கவும்,

“தேவிம்மாவை பார்க்கணும்னு சொன்னாரு.. நல்லா குடிச்சிருந்தாரா? சரி இருங்க கேட்டுட்டு வரேன்னு சொல்லி நான் இங்க வரவும், அவரும் என்னோட பின்னாடியே வந்துட்டாரு..” என்று காவலாளி பதில் கூறினான்.

“என்ன பன்னீர் உங்க பிரச்சனை?” என்று பாலா கேட்க,

“என் பொண்ணை உங்க வீட்ல வச்சிருக்கிறது தான் பிரச்சனை.. அவளை என்கூட அனுப்புங்க..” என்று பதில் கூறினார்.

“இப்படி குடிச்சிட்டு வந்து பிரச்சனை செய்றவர் கூட எப்படி நம்பி உங்க பொண்ணை அனுப்புறது, அதெல்லாம் முடியாது..” என்று இப்போது புவனா பேசினார்.

“என் பொண்ணை என்கூட அனுப்பமாட்டேன்னு சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு.. அவ என்கூட தான் இருக்கணும் அனுப்பி வை..” என்று மரியாதை இல்லாமல் பேசினார்.

“இங்க பாருங்க பன்னீர்.. நீங்க இப்போ நிதானமா இல்லை.. அதனால ஒழுங்கா போங்க.. எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்..” என்று இப்போது பாலா கோபமாக கூறினான்.

“டேய் என்னை மிரட்ட பார்க்கிறீயா? என் பொண்ணை உங்க வீட்ல வச்சிக்கிட்டு என்கூட அனுப்பமாட்டேன்னு சொல்றீங்க.. உன்னை போலீஸ்ல புடிச்சு கொடுப்பேன் டா..” என்று பாலாவையும் மரியாதை இல்லாம பேச,

அதற்குள் பொறுமை இழந்த யாதவியோ, “இங்கப்பாரு நான் தான் உன்கூட வர மாட்டேன்னு சொல்லிட்டேன் இல்ல.. அப்புறம் ஏன் இப்படி வந்து பிரச்சனை செய்ற.. போதும் உன்கூட இருந்து நானும் அம்மாவும் பட்ட கஷ்டம் போதும்.. அவங்க ஒரேடியா போய் சேர்ந்துட்டாங்க.. இப்போ என்னையும் ஒரேடியா சாகடிக்க நினைக்கிறீயா?” என்று கேட்க,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் " உன்னையே தொடர்வேன் நானே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“உன்னோட அம்மா செத்ததுக்கு நானா காரணம்.. நீயே தான் டீ காரணம், உன்னால தான் உங்கம்மா செத்தா.. ஒழுங்கா என் பேச்சைக் கேட்டு நீ சினிமால நடிக்க ஒத்துக்கிட்டிருந்தா எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கலாம்.. அதைவிட்டுட்டு  உன்னை சினிமால நடிக்க விடமாட்டேன்னு சொல்லி அவசர அவசரமா உனக்கு அந்த விபாகரனோட கல்யாணம் பண்ண முயற்சி செஞ்சா.. ஆனா அவளுக்கே டிமிக்கி கொடுத்துட்டு எவன் கூடவோ ஓடிப் போன.. ஆனா இப்போ இதோ இந்த வீட்ல வேலைக்காரியா இருக்க.. நீ என்ன குத்தம் சொல்றீயா?

இப்போயாச்சும் என்கூட வா, உனக்கு என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்..” என்ற பன்னீரின் பேச்சில் உண்மையும் இருக்கவே யாதவி அங்கேயே சோஃபாவில் அப்படியே அமர்ந்து குலுங்கி குலுங்கி அழ,

பாலாவிற்கு மிகவுமே கோபம் வந்து, “செக்யூரிட்டி இவரை இழுத்துக்கிட்டு போங்க..” என்று கத்தினான். உடனே காவலாளியும் பன்னீரை இழுத்துக் கொண்டு போய் வெளியே தள்ளினார்.

அழுதுக் கொண்டிருந்த யாதவியை ஒருப்பக்கம் புவனாவும் மறுப்பக்கம் மதுரிமாவும் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.

“பார்த்தீங்களா ம்மா.. இதுக்காக தான் நான் அவரோட போக மாட்டேன்னு சொன்னேன்.. அவருக்கு என் மேலேயோ இல்ல என்னோட அம்மா மேலேயோ சுத்தமா அன்பு இல்ல.. ஏதோ கல்யாணம் செஞ்சோம் குழந்தை பெத்தோம்னு தான்தோன்றித்தனமா வாழ்ந்தவரு தான் அவர்.. அவரோட சுயநலத்தை பத்தி மட்டும் தான் சிந்திப்பாரு.. இப்போதும் என்கிட்ட ஏதோ ஆதாயம் இருக்க போய் தான் இப்படி என்னை பிடிவாதமா கூப்பிட்றாரு..

முதலில் தான் நான் அவரை சரியா புரிஞ்சிக்காம போய் பெரிய தப்பு பண்ணி அம்மாவை இழந்துட்டேன்.. இனியும் அவரை நம்பி நான் போகமாட்டேன் ம்மா.

 என்னை அவர்க்கிட்ட அனுப்பிடாதீங்க..” என்று கெஞ்ச,

“என்ன தேவிம்மா.. இப்படி ஒரு மனுஷனை நம்பி உன்னை அவரோட அனுப்பிடுவோமா? பயப்படாம இரு..” என்று புவனா அவளை சமாதானப்படுத்த,

கடந்தக்காலத்தில் நடந்த மீதியை சொல்ல யாதவியால் இப்போது முடியாது என்று உணர்ந்துக் கொண்ட மதுரிமாவிற்கு பன்னீர் சொன்னதை வைத்து சில விஷயங்களை புரிந்துக் கொண்டவள்,

“தேவி உனக்கும் விபாக்கும் உங்கம்மா கல்யாணம் ஏற்பாடு செஞ்சாங்களா? அது வேண்டாம்னு நீ ஓடிப் போனது சாத்விக்கிற்காகவா?” என்று கேட்க,

யாதவி ஒரு நிமிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்து, பிறகு ஆம் என்று தலையாட்ட, மதுரிமா அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று அவளாகவே மனதில் ஒரு கணக்குப் போட்டவள், யாதவியிடம் முழுக் கதையையும் ஒருமுறை கேட்டிருக்கலாமோ? அப்படி கேட்டிருந்தால் பின் காலத்தில் பெரிய ஏமாற்றத்தை அவள் சந்திக்காமலேயே இருந்திருப்பாள்.

மையல் தொடரும்..

Episode # 19

Episode # 21

Go to Maiyalil manam saaintha velai story main page

{kunena_discuss:1211}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.