(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 21 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai 

திரெதிரே இருக்கையில் அஜயும் சுஜனாவும் அமர்ந்திருந்தனர். இருவர் முகத்திலும் பதட்டம், தயக்கம், குழப்பம் என்று எல்லாம் சேர்ந்து தெரிந்தது. அஜயிடம் பேசவே கூடாது என்று சுஜனா நினைத்திருக்க, அவனோ நேற்று அலைபேசியில் அழைத்து அவளை சந்திக்க வேண்டுமென்று சொல்லியிருந்தான். அவள் வரமுடியாததற்கு எத்தனையோ காரணம் சொல்லியும்,

“நான் உன்னை கண்டிப்பா மீட் பண்ணனும் சுஜா.. நீயா வர்றீயா? இல்ல நானா உன்னை வீட்ல வந்து மீட் பண்ணட்டுமா?” என்ற அவனது அதிரடி கேள்வியில், வருவதாக ஒத்துக் கொண்டவளுக்கு அவன் என்ன பேசப் போகிறான் என்பது தெரியாததால் பதட்டமும் குழப்பமும் அவளை சூழ்ந்துக் கொண்டது.

நீண்ட நாட்கள் கழித்து அவளை பார்த்த மகிழ்ச்சியில் இருந்த அஜய்க்கு அவளது திருமண செய்தியை கேட்டதும் வந்த மகிழ்ச்சி அப்படியே காணாமல் போய்விட்டது. அவளது திருமணம் நல்லப்படியாக நடக்க வேண்டும், அவள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைத்து தன் மனதை மறைத்துக் கொண்டான்.

ஆனால் அன்று பார்ட்டியில் சாத்விக் நடந்துக் கொண்டதை பார்த்தப் பிறகும் சுஜனா எப்படியும் போகட்டும் என்று அவனால் இருக்க முடியாது. இன்னும் அவள் தந்தை முடிவுக்கு அவள் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமா? என்ற கேள்வி அவனுக்குள் பிறந்த போதே, அதற்கான பதிலும் அவனுக்கு கிடைத்துவிட்டது. ஆம் இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த தன் மனதை இப்போது வெளிப்படுத்த எண்ணியே அவளை அழைத்திருந்தான். ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்ற தயக்கத்தில் அமர்ந்திருந்தவன், இனியும் தாமதிக்க கூடாது என்று நினைத்தவனாக, உணவு மேசை மேல் இருந்த தண்ணீரை எடுத்து பருகினான்.

அவன் பேச தயாராகிவிட்டதை அவளும் உணர்ந்துக் கொண்டாள். என்ன வரப் போகிறதோ என்று நினைத்தவள், அவளும் கொஞ்சம் தண்ணீரை எடுத்து பருகியவள், சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தாள்.

அது பொதுவாக பணக்காரர்கள் வந்து போகும் ரெஸ்ட்டாரண்ட். பகல் பொழுதிலும் இருட்டாக, மெல்லிய விளக்கின் ஒளி பரவ விட்டிருக்க, அங்கே ஒன்றிரண்டு பேர் தான் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இருந்தாலும் யராவது தெரிந்தவர்கள் பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம் அவளுக்கு இருந்தது. அவளும் பிரபல தொழிலதிபரின் மகள், அவனும் ஒரு பிரபல தொழிலதிபரின் உறவுக்காரன், பிரபல நிறுவனத்தின் நிர்வாகத்தை பார்ப்பவன், அதனால் யார் மூலமாவது தன் தந்தையின் காதுக்கு போனால் என்ன ஆகுமோ? என்பதே அவளது அச்சத்திற்கு காரணம்.

அவள் அச்சப்படுவது அவளது முக பாவனைகளில் தெரியவே, “இப்போ எதுக்கு பயப்பட்ற சுஜா.. நம்ம சந்திக்கிறது அவ்வளவு தப்பா.. என்னமோ ஆண்கள் கூடவே இப்படி தனியா சந்திச்சு பேசாதது போல நடந்துக்கிற.. காலேஜ்ல உனக்கு எத்தனை பாய் ப்ரண்ட்ஸ் இருந்தாங்க..” என்று அவன் கேட்டதும், அவனது பேச்சில் அவள் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அதை புரிந்துக் கொண்டவனாக,

“அய்யோ நான் அந்த சம்பவத்தை மீன் பண்ணி சொல்லல சுஜா.. என்னோட பேச நீ தயக்கம் காட்டவும், நீ முன்ன அப்படி இல்லையேன்னு மீனிங்க்ல சொன்னேன்..”

“புரியுது.. ஆனா அந்த சம்பவத்துக்குப் பிறகு பாய்ஸ்னு இல்லை கேர்ள் ப்ரண்ட்ஸ் லிஸ்ட்டையே குறைச்சிக்கிட்டேன்.. யாரோடவும் ரொம்ப நெருக்கமா பழகறதில்ல.. அத்தனை பெரிய ஆபத்துல இருந்து நான் எந்த சேதாரமும் இல்லாம தப்பிச்சாலும், யாரையும் என்னால நம்ப முடியவில்லை.. எங்க அந்த சம்பவம் என்னோட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துமோன்னு ஒருமாதிரி பயமாகவே இருக்கும்.. அதுக்காகவே கல்யாணத்தை பத்தி கூட நான் யோசிக்கல..”

“இங்கப்பாரு இது அனாவசியமான பயம் சுஜா.. நீ எந்த தப்புமே செய்யல.. நீ நல்ல ப்ரண்ட்ஸ்னு நினைச்சவங்க உன்னை வேற மாதிரி பார்த்தாங்க.. உனக்கு போதை மருந்து கொடுத்து உனக்கு தெரியாமலேயே தப்பா நடந்துக்க பார்த்தாங்க.. ஆனா அதுல இருந்து தான் நீ தப்பிச்சிட்டல்ல.. அப்புறம் என்ன? அதை நீ எப்பவோ மறந்திருக்கணும், அதை விட்டுட்டு நீ அதையே நினைச்சிக்கிட்டு இருந்தா எப்படி?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீனுவின் "மழையின்றி நான் நனைகின்றேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“மறக்க கூடிய ஒன்னா அது.. இப்படி தான் இருக்கணும்னு ஒரு கட்டுப்பாடு இல்லாம ப்ரண்ட்ஸோட இருக்கறது தான் சந்தோஷம்னு சுத்திக்கிட்டு இருந்தேன்.. பணம் இருக்குன்னு திமிர்ல இஷடத்துக்கு அவங்களுக்காக செலவு பண்ணேன்.. ஆனா அதுக்கு அந்த அயோக்கியனுங்க நல்ல பாடம் கத்துக் கொடுத்துட்டாங்க..

நான் அவங்களை என்னோட பெஸ்ட் ப்ரண்ட்ஸ்னு நினைச்சுக்கிட்டு இருக்க.. அவங்க என்னை ஆரம்பத்திலிருந்தே தப்பா தான் பார்த்திருக்காங்க.. அதை கூட புரிஞ்சிக்க முடியாத முட்டாளா அவங்க கூப்பிட்டாங்கன்னு நான் அவங்க கூட தனியா போனேன்.. அன்னைக்கு நீங்க மட்டும் சரியான நேரத்துக்கு வராம இருந்திருந்தா என்ன ஆயிருக்கும்.. ஏதாவது தப்பா நடந்திருந்தா அதோட நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்..”

“என்ன பேசற சுஜா.. உனக்கு தப்பா ஏதாவது ஆகிட நான் விட்டுவிடுவேனா? என்னோட கண்களும் மனசும் எப்போதும் உன்னையே தான் கண்காணிச்சிக்கிட்டும் நினைச்சிக்கிட்டும் இருக்கும்.. எனக்கு மட்டும் அவங்க தப்பானவங்கன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா, முன்னமே வந்திருப்பேன்.. ஆனா உன்னோட ப்ரண்ட்ஸ்னு தான் கொஞ்சம் கேர்லெஸ்ஸா இருந்துட்டேன்..” என்று அன்றைய சம்பவத்தை பற்றி சொல்லிக் கொண்டிருக்க, அதை கேட்டு அவள் வியப்பில் கண்களை விரித்தாள்.

அன்று அவளுக்கு எந்தவித அசம்பாவமும் நேர்வதற்கு முன்னரே, அவன் வந்து அவளை காப்பாற்றியதை அடிக்கடி நினைத்துப் பார்ப்பாள். அப்போதெல்லாம் அவன் சரியான நேரத்திற்கு எப்படி அங்கு வந்தான்? என்ற கேள்வியும் அவள் மனதில் எழும், ஆனால் அவன் வந்ததால் தானே தான் காப்பாற்றப்பட்டோம் என்பதால் அதை அதிகம் ஆராயமல் அப்படியே விட்டுவிடுவாள். ஆனால் அவன் இப்போது சொல்வதை பார்த்தால், அவளை பின் தொடர்ந்து அவன் வந்திருக்கிறான் என்பது போல் அல்லவா இருக்கிறது.

“ஏற்கனவே உன்னோட கண்ணு பெருசு.. அதை இன்னும் அகலமா விரிக்காத.. அதுல அப்படியே விழுந்து உனக்குள்ள தொலைஞ்சு போயிடணும் போல இருக்கு..” என்று அவன் புன்னகைத்தப்படியே கூற,

“என்ன இப்படியெல்லாம் பேசுகிறான்?” என்று நினைத்தாலும், அதை அவள் ரசிக்கவே செய்தாள்.

“நான் அன்னைக்கு எப்படி கரெக்ட் டைம்க்கு அங்க வந்தேன்னு தானே நீ யோசிச்சிக்கிட்டு இருந்த..” என்று அவன் கேட்கவும், அவளும் ஆமாம் என்பது போல் தலையாட்டினாள்.

“அன்னைக்கு மட்டுமில்ல.. அதுக்கு முன்பிலிருந்த உன் பின்னாடியே தான் சுத்திக்கிட்டு இருப்பேன்.. ஆனா நீ தான் என்னை கண்டுக் கொண்டதே இல்ல..” என்று பாவமாக கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.