(Reading time: 18 - 35 minutes)

பிடிக்காத திருமணம் என்பதை விட பிடிக்காத மாப்பிள்ளை என்ற வார்த்தை உண்மையில் அவனை அதிகம் காயப்படுத்தியது. யாதவியின் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வரும் என்று அவன் கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை.

"யது இப்போ என்ன சொன்ன பிடிக்காத மாப்பிள்ளையா? என்னை நீ பிடிக்காமலா கல்யாணம் செஞ்சுக்கிட்ட.. நான் உன்கிட்ட சம்மதம் கேட்டப்போ சரின்னு சொன்னல்ல.."

"அது நான் கொஞ்சம் குழப்பத்தில் இருந்தப்போ அம்மா தான் பேசி பேசி என்னோட மனசை மாத்திட்டாங்க.. உண்மையிலேயே எனக்கு சாத்விக்கை கல்யாணம் செய்துக்க தான் விருப்பம்.." என்றாள். அப்போது கூட சாத்விக்கை காதலிப்பதாக அவள் வாயிலிருந்து வரவில்லை. ஏனென்றால் அவனை அவள் மனதார காதலித்தாளா? என்றால், அவள் அதை சிந்தித்து பார்த்தால் அவளுக்கே அதற்கான பதில் தெரியாது.

ஆனால் திருமணம் ஆகி சில மணி நேரங்களே ஆகியிருக்க, தன் மனைவிக்கு தன்னை பிடிக்கவில்லை, அதற்கு பதிலாக வேறொரு ஆடவனை பிடித்திருக்கிறது என்றால், அது யாருக்குமே அதிர்ச்சியான விஷயம் தானே, விபாகரனும் அந்த அதிர்ச்சியில் தான் இருந்தான்.

அதே அதிர்ச்சியோடு "சாத்விக்கா.." என்று அவன் கேட்க,

"ஆமாம் சாத்விக்.. சினிமா ஹீரோ, இப்போ கொஞ்ச நாள் முன்ன தான் அவனோட முதல் படம் ரிலீஸ் ஆகியிருக்கு, சாத்விக் என்னை காதலிக்கிறான், கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்பட்றான் தெரியுமா?" என்று அவளாகவே அந்த கவிதையை வைத்து புரிந்துக் கொண்டவள், அதை தன் கணவனிடமும் கூறினாள்.

அவள் ஒரு சினிமா நடிகனை பிடித்திருக்கிறது என்று கூறியதும், விபாகரன் மீண்டும் ஆசுவாசமடைந்தான். சினிமா நடிகன் என்றால், கண்டிப்பாக யாதவிக்கு அவன் மீது ஒரு ஈர்ப்பு தான் இருந்திருக்கும், அதை அவள் காதல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தான். ஆனால் சாத்விக்கை அவளுக்கு எப்படி தெரிந்திருக்கும் என்றும் புரியவில்லை,

"யது இப்போ நீ டீன் ஏஜ்ல இருக்க.. இந்த சமயத்தில் ஹார்மோன் மாற்றத்தில் சில பேர் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயல்பு தான், ஆனா அதை காதல்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க.. இப்போல்லாம் ஸ்கூல் பசங்களே காதலிக்கிறன்னு சொல்லி அவங்க வாழ்க்கையை அழிச்சிக்கிறாங்க தெரியுமா?

இப்போ உனக்கு சாத்விக் மேல இருப்பது கூட ஒருவிதமான ஈர்ப்பு தான், அதை வச்சு இப்போ நீ குழப்பிக்கிற.. கொஞ்ச நாள் போனா உனக்கே நாம முன்ன இப்படி நினைச்சோமேன்னு பைத்தியக்காரத்தனமா தோனி சிரிப்ப பாரேன்..

இங்கப்பாரு நீ சொன்ன விஷயத்தை நான் தப்பாவே நினைக்கல.. நீ யாரையோ காதலிச்சிட்டன்னு கோபமும் படல.. அதே போல உன்னோட அம்மாவும் உனக்கு தப்பா எதுவும் செய்யலன்னு புரிஞ்சுக்கோ, இங்கப்பாரு இப்போ நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு, திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்க படுதுன்னு சொல்வாங்க.. நாம ரெண்டுப்பேரையும் திருமணம் மூலமா சேர்த்து வைக்கணும்னு கடவுள் முடிவு செஞ்சுருக்கார்.. அதை ஏன் நாம மாத்த முயற்சி செய்யணும்.." என்று அவன் அவளுக்கு புரிய வைக்க முயற்சிக்க,

"இப்படி சாமாதானங்கள் சொல்லி காலம் முழுக்க பிடிக்காத வாழ்க்கையை வாழணுமா? நான் ஆசைப்பட்ட வாழ்க்கை இது இல்லையே.. உன்னோட மாச சம்பளத்தை எதிர்பார்த்து, இப்படி ஒரு வீட்ல கஷ்டப்படணும்னு எனக்கு தலையெழுத்தா.. இதை நான் அம்மாக்கிட்டேயே சொன்னேன்.. ஆனா நீ போட்ட கேஸ்ல சீக்கிரம் ஜெயிச்சு நீ வசதி வாய்ப்போட மாறிடுவ.. அப்படி இப்படின்னு பேசி என்னை சம்மதிக்க வச்சிட்டாங்க..

ஆனா நிச்சயமா நடக்கும்னு தெரியாத விஷயத்துக்கு நான் காத்திருக்கணுமா? அது என்னால முடியாது.. நான் எனக்கு பிடிச்ச சாத்விக்கோட தான் வாழப் போறேன்.. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்.." என்றவள், திடீரென விபாகரனே எதிர்பார்க்காத சூழலில் தாலியை கழட்டி அவன் கையில் கொடுத்தாள்.

திடீரென கார் ப்ரேக் போடவும், எதிர்பார்க்காமல் யாதவி முன் சீட்டில் இடிபடும்படி வந்தவள், பின் இடிக்காதப்படி சமாளித்து அமரும் போது தான், பழைய நினைவுகளிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டாள்.

"காரில் போகிறோமா? எங்கே போகிறோம்?" என்று முதலில் குழம்பியவள், பின்பு தான் அருகில் இருந்த விபாகரனை பார்த்தாள். அஜய், சுஜனா நிச்சயதார்த்தம் நடைப்பெற்ற இடத்திலிருந்து விபாகரன் பின்னால் கிளம்பியது ஞாபகத்திற்கு வரவும்,

"ஓ இப்போது அவன் வீட்டுக்கு தான் செல்கிறோமா?" என்று நினைத்தவள், எதை சந்திக்க தயங்கி இத்தனை நாள் மறைவு வாழ்க்கை வாழ்ந்தாளோ, இப்போது அதை எதிர்கொள்வதை நினைத்தவளுக்கு மீண்டும் மனதிற்குள் தானாக அச்சம் வந்து சூழ்ந்துக் கொண்டது.

அவனுக்கு அருகில் அமர்ந்திருப்பதே அவளுக்கு ஒரு மாதிரி பதட்டமாக இருந்தது. என்னத்தான் அத்தனை பேர் முன்பு அவள் தவறே செய்யாதது போல் அவளுக்காக அவன் பேசியிருந்தாலும், அவனை பொறுத்தவரை அவனுக்கு அவள் அநியாயம் செய்தவள் தானே, அதுவே அவன் முன்பு  இயல்பாக இருக்க அவளால் முடியவில்லை, மீண்டும் ஒருமுறை அவனை ஓரக்கண்ணால் ஒருமுறை பார்த்தாள். ஆனால் அவள் ஒருத்தி அருகில் இல்லையென்பது போல் அவன் தன் மடிக்கணினியில் மூழ்கி இருந்தான். அதுவே அவளுக்கு கொஞ்சம் மனதிற்கு நிம்மதியாக இருக்க, கண்களை மூடியப்படியே இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.