(Reading time: 18 - 35 minutes)

அந்த அரைமணி நேர பயணமே ஒரு யுகம் போல அவளுக்கு தோன்ற, ஒரு வழியாக  இவர்கள் வந்த வாகனம் வீட்டை வந்து அடைந்தது. இருவரும் காரை விட்டு இறங்கவும், பின்னாலேயே மற்ற இரு கார்களும் வந்து நின்றது. ஒன்றிலிருந்து மஞ்சுளா, அர்ச்சனா இருவரும் இறங்கினர். தம்பியின் நிச்சயம் என்பதால் விஜய் அங்கேயே இருந்துவிட்டான். இன்னொரு காரிலிருந்து புவனா, பாலா, ரூபினி மூவரும் இறங்கினர். மதுரிமா வீட்டுக்கு செல்வதாக சொல்லிவிட்டாள். அதுவே சரியென்றுபட புவனாவும் அதற்கு ஒத்துக் கொண்டவர், யாதவியை நாம் தான் அவள் வீட்டில் விட்டுவிட்டு வர வேண்டும் என்று பாலா, ரூபினியை அழைத்து வந்திருந்தார்.

காரில் இருந்து இறங்கியதும், விபாகரன் வீட்டுக்குள் சென்று விடப் போகிறான் என்று அவசரமாக அவன் அருகில் வந்த மஞ்சுளா, "விபு ரெண்டுப்பேரும் ஒன்னா நில்லுங்க, ஆரத்தி எடுத்ததும் உள்ள போலாம்.." என்று அவனிடம் சொல்ல, அவன் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை,

"அர்ச்சனா போய் ஆரத்தி கரச்சு எடுத்துட்டு வந்து எடு.." என்று மகளைப் பார்த்து சொல்ல,

"என்னால முடியாதும்மா.." என்று அலட்சியமாக சொல்லிவிட்டு, அவள் கோபமாக உள்ளே சென்றுவிட்டாள்.

"நான் தேவியோட அண்ணி தானே.. நானே ஆரத்தி எடுக்கிறேன்.." என்று ரூபினியே முன்வந்து கூறினாள். நேற்று வரை அவளை அண்ணி என்று யாதவி அழைத்தாலே பிடிக்காது என்று சொல்பவள், இன்று ஒரே நாளில் மாறியதை நினைத்து பாலாவும் புவனாவும் சிரித்தனர். ரூபினி என்னத்தான் யாதவியை இப்போதும் மனதால் கீழிறக்கமாக நினைத்தாலும், அவள் விபாகரனின் மனைவி என்பதால் வெளிப்படையாக யாதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டியிருந்தது.

அதுவும் அவர்கள் உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு விபாகரன் தான் காரணம் என்றும், அவன் அப்படி செய்தது யாதவிக்காக தான், இவள் அன்னை ராகிணி யாதவியை வேலைக்காரி போல் பாவித்ததால் என்பதையெல்லாம் இப்போது காரில் வரும்போது பாலா இவளுக்கும் புரியும்படியாக புவனாவிடம் சொன்னதை கேட்டு தான், எதற்கு வம்பு என்று இனி யாதவியிடம் நன்றாக நடந்துக் கொள்ள எண்ணியே இப்போது அவளே ஆரத்தி எடுப்பதாக சொன்னாள். அந்த காரணம் தெரிந்து தான் பாலாவும் புவனாவும் அர்த்தத்துடன் சிரித்துக் கொண்டார்கள்.

ஆரத்தி எடுத்து முடித்ததும் தம்பதிகள் இருவரும் வீட்டுக்குள் செல்ல, மற்றவரும் அவர்கள் பின்னால் சென்றனர். அனைவரையும் அமர வைத்த மஞ்சுளா, அவர்கள் யாருமே நிச்சயதார்த்த நிகழ்வில் அங்கு இருந்த சூழலில் சாப்பிடாமல் வந்ததால், தோசை மாவு இருந்ததால், அதற்கு தொட்டு சாப்பிட ஏதாவது செய்யலாம் என்று முடிவெடுத்து  சமையலறைக்குச் சென்றார். அர்ச்சனா தன் அறைக்குள்ளேயே முடங்கிக் கொண்டாள். அதனால் புவனா மஞ்சுளாவிற்கு உதவி செய்வதாக கூற, மஞ்சுளாவோ மறுத்து வரவேற்பறையிலேயே இருக்கச் சொல்லிவிட்டார்.

புவனா, ரூபினி இருவரோடு வரவேற்பறையில் அமர்ந்திருந்த யாதவி வீட்டை ஒருமுறை சுற்றி பார்த்துக் கொண்டாள். அன்று ஒருநாள் இந்த வீட்டிற்கு வந்தால் தான், ஆனால் அப்போது இந்த வீட்டின் பிரமாண்டம் அவள் கண்களில் படவில்லை, ஆனால் இப்போது அது கூட அவளுக்கு கவலையை தான் ஏற்படுத்தியது.

இப்போது விபாகரனின் நிலை, அவனின் அந்தஸ்து எல்லாம் அவன் தாத்தாவின் மூலமாக வந்தது என்றாலும், அவன் தொழில் துறையில் கொடி கட்டி பறப்பது, இவளின் உதாசீனத்தின் ஏற்பட்ட உந்துதலால் அல்லவா? அதை அவளால் நன்றாகவே புரிந்துக் கொள்ள முடிந்தது.

வீட்டுக்குள் நுழைந்ததுமே விபாகரனை தனியாக அழைத்துச் சென்ற பாலா அவனை கட்டி அணைத்தான்.

"டேய் என்னடா செய்ற? என்னை ரூபினின்னு நினைச்சிட்டீயா?" என்று விபாகரன் கேலி செய்து அவனை விடுவிக்க,

"விபா இப்படி கிண்டலா நீ பதில் பேசறது ரொம்ப நாள் கழிச்சு இப்பத்தான் டா பார்க்கிறேன்.. இதே போல நீ பழைய மாதிரி மாறணும் டா.." என்று பாலா உணர்ச்சிவசப்பட்டு பேசினான்.

"நான் எப்போதும் போல தான் இருக்கேன் டா.." என்று விபாகரன் பதில் கூறினான்.

"இல்லடா.. நீ காலேஜ்ல் படிச்ச விபாவே இல்லடா.. இப்போ நீ ரொம்பவே மாறிட்ட.. எப்போதுமே உன்னோட முகத்தில் ஒரு தீவிரம் தெரியும், அதையும் தாண்டி ஏதோ ஒரு விஷயம் உன்னை உறுத்திக்கிட்டு இருக்குன்னும் தெரியும், நீ நீயாவே இல்லன்னு மட்டும் எனக்கு புரியும், ஆனா அதை தாண்டி எனக்கு வேற ஒன்னும் தெரியாது..

ஆனா இப்போதான்  உன்னோட சந்தோஷம் தேவின்னு  எனக்கு புரியுது.. உங்க ரெண்டுபேருக்கும் எப்படி கல்யாணம் ஆச்சு, எதனால் தேவி உன்னை விட்டு வந்தா, அவளுக்கும் சாத்விக்கிற்கும் என்ன சம்பந்தம்? எதுவும் எனக்கு தெரியாது..

ஆனா தேவிக்கு நீ கணவனா கிடைச்சது அவளோட அதிர்ஷ்டம்.. அவ தப்பு செஞ்சுருந்தும், அத்தனை பேர் முன்ன அவளோட அப்பாவே அதை வச்சு அவளை அவமானப்படுத்த நினைச்சும், நீ அதை செய்யாம அவளை அவமானத்தில் இருந்து காப்பாத்தின பார், உன்னை நினைச்சாலே எனக்கு பெருமையா இருக்குடா.. நான் உன்னோட ப்ரண்ட்னு சொல்லிக்கிறதில் ரொம்ப சந்தோஷம்டா.. இத்தனை நாள் எப்படியோ ஆனா இனி நீயும் தேவியும் நல்லப்படியா சந்தோஷமா வாழணும் விபா.." என்று பாலா சொல்லவும்,

"நேத்து வரைக்குமே எங்களுக்கு கல்யாணம் நடந்ததை நான் என் வாயால் வெளிய சொல்லக் கூடாதுங்கிற உறுதியில் தான் இருந்தேன். அதான் உன்கிட்ட கூட இதைப்பத்தி நான் மனசு விட்டு பேசல.. ஆனா இன்னைக்கு எல்லோர் முன்னேயும் நானே அந்த உண்மையை வெளியில் சொல்லுவேன்னு நானே எதிர்பார்க்கல.. ஆனா ஒரு அவசியத்துக்காக சொல்லிட்டேன்..

அது தெரிஞ்சப்பிறகு யாதவி உங்க வீட்ல இருக்கிறது, வேற தேவையில்லாத கேள்விகளை கொண்டு வரும்னு தான் அவளை இங்க கூட்டிக்கிட்டு வந்தேன்.. மத்தப்படி வேற எந்த எண்ணமும் என்னோட மனசுல இப்போ இல்ல.. இனி தான் அடுத்து என்னன்னு யோசிக்கணும்,

இதுவரைக்கும் நான் ஆசைப்பட்டதை விட, என்னோட முடிவுன்னு நான் தீர்மானிக்கிற விஷயங்களை விட, நான் எதிர்பார்க்காத விஷயங்கள் தான் என் வாழ்க்கையில் நடந்துட்டு வருது.. அப்படி ஒரு அதிசயமா நீ சொல்றது போல என்னோட வாழ்க்கையில் நான் எதிர்பார்த்த சந்தோஷம் கிடைச்சா உண்மையில் நான் தான் அதிர்ஷ்டசாலியா இருப்பேன்.. கடவுள் என்ன முடிவு செஞ்சு வச்சிருக்காருன்னு பார்ப்போம்..

அப்புறம் இன்னொரு விஷயம், யாதவியை இங்க கூட்டிட்டு வரணும்னு சொன்னது என்னோட முடிவு, இதில் அர்ச்சனாவிற்கு விருப்பம் இல்லைன்னு  உனக்கே தெரியும், அதேபோல அம்மா என்னை மறுத்து பேசக் கூடாதுன்னு தான் அமைதியா இருக்காங்க.. ஆனா அவங்க மனசில் என்ன இருக்குன்னு சரியா தெரியல.. அதனால் இன்னைக்கு யாதவியோட நீங்க நைட் இங்கேயே இருக்கணும், உங்களால முடியலன்னாலும் அம்மாவாவது இங்க யாதவியோட இருக்கட்டும், மத்தப்படி இனி அவளுக்கு அர்ச்சனா மூலமாகவோ இல்லை எங்க அம்மா மூலமாகவோ எந்த பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கிறேன் பாலா.." என்றான்.

"ஏ என்னடா.. உன்னைப்பத்தி எனக்கு தெரியாதா? தேவி உன்கூட இருந்தா, நீ நல்லப்படியா அவளை பார்த்துக்குவ.. அதேபோல் நான் சொன்ன மாதிரி நீங்க சந்தோஷமா வாழும் காலமும் ரொம்ப தூரம் இல்ல புரிஞ்சுதா.. வா போகலாம்.." என்று அவனை அழைத்துக் கொண்டு வரவேற்பறைக்கு வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.