(Reading time: 18 - 35 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 27 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai 

வீட்டுக்கு வந்த பின்பும் கூட யாதவி ஏதோ தீவிர சிந்தனையில் இருந்தது போல விபாகரனுக்கு தோன்றியது. அங்கே கோவிலில் அவளை தொட்ட போது, அவள் விலகியதும், முதலில் அவன் மனம் சுணங்கினாலும்,

திருமணம் முடிந்துவிட்டதால் அடுத்து என்ன நடக்கும் என நினைத்து கவலைக் கொள்கிறாளோ, ஒருவேளை அவள் தோழி ஏதாவது கேலியாக கூறி இவள் அதை நினைத்து குழப்பிக் கொள்கிறாளோ என்று நினைத்து மனதை சமாதானமாக்கிக் கொண்டான்.

ஆனால் காரில் திரும்பி வரும்போதும் அவள் ஏதோ சிந்தனையில் அமைதியாகவே வந்தாள். ரத்னாவும் மஞ்சுளாவும் காரில் கடைசி இருக்கையில் அமர்ந்துக் கொண்டு கதை பேசிக் கொண்டு வர, அதற்கு முன் இருக்கையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர். அர்ச்சனா ஓட்டுனருக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு வர,

அருகில் இருந்த யாதவியின் கையோடு கை கோர்த்தப்படி அவளோடு பேசும் ஆவலில் அவள் விரல்களை பிடிக்க, நாசூக்காக கைகளை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டாள். அதுவுமில்லாமல் அதன்பின் கார் ஜன்னலில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தவள் தான், அவன்புறம் திரும்பவேயில்லை, வெட்கம் என்று சொல்வதற்கும் இல்லை, ஏனென்றால் அவள் முகம் எதையோ சிந்திப்பதின் தீவிரத்தை காட்டியது. பெரியவர்கள் பேசிக் கொண்டு வந்ததால் இவர்களை கண்டுக் கொள்ளவில்லை, அதுவே விபாகரனுக்கு ஏதோ ஒருவிதத்தில் நிம்மதியை கொடுத்தது.

அடுத்து நேராக விபாகரன் வீட்டுக்கு தான் சென்றனர், வாசலில் மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைக்கும் போதே, அக்கம்பக்கம் இருப்பவர்கள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அதுவும் யாரையும் அழைக்காமல் திடீரென திருமணம் முடித்துக் கொண்டு வந்ததால், அனைவரும் தங்களுக்குள் பேசியப்படியே  வேடிக்கை பார்த்தனர். சில பேர் எதற்கு இந்த திடீர் திருமணம் என்று கேள்வியும் கேட்டனர்.

பின்பு விவரமாக சொல்வதாக சொல்லிவிட்டு மஞ்சுளா மணமக்களை உள்ளே அழைத்துப் போனார். பின் யாதவியை விளக்கேற்ற சொல்லி, பால் பழம் கொடுக்கும் சடங்கு நடைபெற்ற போதும் கூட யாதவி அதையெல்லாம் பட்டும் படாமல் தான் செய்தாள். மற்றவர்களுக்கு அதை பார்க்கும் போது வித்தியாசம் தெரியவில்லையென்றாலும் விபாகரனுக்கு அவளிடம் வந்த மாற்றம் புரிந்தது. ஆனால் அதற்கான காரணம் தான் தெரியவில்லை.

விடியற்காலையிலேயே எழுந்ததால் மணமக்களை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, கல்யாணத்திற்காக செய்த பலகாரங்களை அக்கம் பக்கத்து வீடுகளில் கொடுத்துவிட்டு திடீர் திருமணத்திற்கான காரணமாக ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் என்று மஞ்சுளாவும் ரத்னாவும் அதற்கான வேலையில் இறங்கிவிட்டனர். அர்ச்சனாவும் ஓய்வெடுப்பதாக சொல்லி அவளது அறைக்குச் சென்று கதவை பூட்டிவிட்டு உறங்க ஆரம்பித்துவிட்டாள்.

இப்போது விபாகரனும் யாதவியும் அவர்கள் அறையில் இருந்தார்கள். யாதவியிடம் தனிமையில் பேச கிடைத்த வாய்ப்பை தவற விடக் கூடாது என்று, அறையின் உள்பக்கம் கதவை தாழிட்டுவிட்டு விபாகரன் யாதவியின் அருகில் வந்தான். அதை கூட உணராமல் யாதவி அவள் எண்ணங்களில் மூழ்கியிருந்தாள்.

"யது…" என்றப்படியே அவளது கையை பிடித்து தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டவன்,

"இந்த குட்டி மூளைக்குள்ள அப்படி என்ன பெரிய யோசனை ஓடுது.." என்று புன்னகைத்தப்படியே கேட்டான்.

அதில் கோபம் கொண்டவளாக, "யாருக்கு குட்டி மூளை.. எனக்கா?" என்று கேட்டப்படி கைகளை வெடுக்கென்று இழுத்துக் கொண்டாள்.

"சரி எல்லாரையும் விட என்னோட யதும்மாக்கு தான் பெரிய மூளை.. சரியா? ஆனா அதை இப்படி யோசிச்சு டேமேஜ் செஞ்சுக்கணுமா? என்ன பிரச்சனை உனக்கு?" என்று அவன் திரும்ப கேலியாக கேட்க,

"என்ன பிரச்சனை? இந்த கல்யாணம் தான் பிரச்சனை.." என்ற அவளது பதிலில் நியாயப்படி அவன் அதிர்ச்சியாகியிருக்க வேண்டும், இல்லை கோபப்பட்டிருக்க வேண்டும்,

ஆனால் அவள் பேசிய விஷயம் அவனுக்கு தவறாக தோன்றவில்லை, முதலில் அவளுக்கு இது திருமணத்திற்கான வயதே இல்லை, இவர்களின் அன்னையர்களின் உந்துதல் பேரில் தானே இவ்வளவு அவசரமாக திருமணம், அன்றைய சூழலில் அவள் அதை ஒத்துக் கொண்டாலும், திருமணத்திற்கு பின்னரான வாழ்க்கையை பற்றி அவளுக்கு கொஞ்சம் குழப்பம் இருக்கும் என்பது அவனுக்கு புரிந்தது.

"யது.. எனக்கு தெரியும்.. கல்யாணம் முடிஞ்சுடுச்சு, ஆனா அதுக்குப்பிறகு என்ன? மத்தவங்க மாதிரி நார்மலா இருக்க முடியாதே, கல்யாணம்னா நிறைய பொறுப்பே வந்துடுமே, புருஷன் எப்படி நடந்துப்பான், மாமியார், நாத்தனாரெல்லாம் எப்படி நடந்துப்பாங்க, காலேஜ்ல ப்ரண்ட்ஸெல்லாம் இனி முன்ன மாதிரி பழகுவாங்களா? இல்லை நம்மக்கிட்ட டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணுவாங்களா? இப்படித்தானே உனக்கு குழப்பம்?" என்றுக் கேட்டான்.

உண்மையிலேயே அவன் சொன்ன இத்தனை விஷயங்களை யோசித்து பார்த்திருப்பாளா? என்றால் அவளுக்கே தெரியாது.  ஆனால் தான் விரும்பிய வாழ்க்கை கிடைத்திருந்தால் இதெல்லாம் அவளுக்கு பெரியதாக தெரிந்திருக்காதோ என்னவோ என்பது போல் யோசித்தவள்,

"ஆமாம் கல்யாணம் பிடிச்சு செஞ்சுருந்தா ஏன் எனக்கு இதெல்லாம் பெருசா தெரியப் போகுது.. இது எனக்கு பிடிக்காத கல்யாணம், நீ எனக்கு பிடிக்காத மாப்பிள்ளை, அம்மா ரொம்ப பேசி வற்புறுத்தவே தான் இந்த கல்யாணம் நடந்துச்சு, அப்போ இதெல்லாம் எனக்கு பெரிய விஷயமா தானே தெரியும்.." என்று அவன் வார்த்தையை கொண்டே அவனை காயப்படுத்தினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.