(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - காணாய் கண்ணே - 22 - தேவி

Kaanaai kanne

ப்ரித்விராஜ் இளவரசி என்று மரியாதையாக விளித்தாலும், அதில் கட்டளையே மேலோங்கி இருந்ததை உணர்ந்த இளவரசித் திரும்பிச் செல்ல ஆரம்பித்தாள். பிரித்விராஜ்ஜும் தன் வீரருடன் மற்ற பக்கம் செல்லத் திரும்பினான்.

அப்போது “இளவரசே” என்ற கிரண்தேவியின் அழைப்புக் கேட்கவும் திரும்பி நின்றான்.

“இளவரசே, என் அருகில் விழுந்தது அம்புதானே. ஆனால் அந்த ஒற்றனிடத்தில் கத்தி அல்லவா இருந்தது. அந்த ஒற்றனைத் தவிர வேறு யாரும் இருக்கிறார்களோ என்று எண்ணுகிறேன்”

அப்போது இளவரசியால் ப்ரித்விராஜ்ஜிடம் அனுப்பப்பட்ட அந்த வீரன்,

“அந்த அம்பு எய்தது நான்தான் இளவரசி. “ என்றான்.

வியப்புடன் அவனைப் பார்த்த கிரண்தேவி “ எதற்காக?” என்று வினவினாள்.

“தங்களைப் பாதுகாக்க பிகானர் இளவரசர் என்னை நியமித்தார் இளவரசி. தாங்கள் நீராட்டதிற்குச் செல்வது போல் தோன்றவே, சற்றுத் தொலைவில் நின்று விட்டேன். நானும் சற்று இளைப்பறிக் கொண்டு இருந்தபோது, அந்த ஒற்றன் தாங்கள் சென்று கொண்டு இருந்த பாதையில் , ஒரு மரத்தில் இருந்து குதித்ததைக் கண்டு அவனைப் பின் தொடர்ந்தேன். அப்போது மற்றொரு பக்கமாக பிகானர் இளவரசரும் தங்களைக் காண வந்து கொண்டு இருந்தார். அப்போது தான் அந்த ஒற்றன் கையில் சிறு கத்தி இருப்பதைக் கண்டு கொண்டேன். என் குரல் கேட்கும் தொலைவில் தாங்கள் இல்லை என்பதால், தங்கள் இருவரையும் எச்சரிக்கவே அம்பு எய்தேன். அதைக் கண்டு அந்த ஒற்றன் , அவன் முயற்சியைக் கைவிட்டுத் திரும்பிச் செல்லும்போது தான் அவனைப் பிடித்து இளவரசரிடம் அழைத்து வந்தேன் “ என்று கூறினான்.

அவனின் புத்திக் கூர்மையை வியந்த கிரண்தேவி ,

“சமயோசிதமாக செயல்பட்டீர்கள் வீரரே” என்று பாராட்டினாள்.

பின் ப்ரித்விராஜ் நோக்கித் திரும்பியவள்,

“தாங்கள் எதற்காக என்னைத் தேடினீர்கள் இளவரசே? என்று வினவினாள்.

கிரன்தேவி கேட்கவும்தான் தான் எதற்காக இளவரசியைப் பின் தொடர்ந்தோம் என்று எண்ணிப் பார்த்தவன், தற்போது அவள் முகத்தைப் பார்க்க, அவள் முகம் மீண்டும் மறைக்கப் பட்டு இருந்தது. அந்த அம்பு பறந்து வந்ததும் , சட்டென்று தன் கழுத்தில் இருக்கும் துணியால் தன் முகம் மறைத்தப் படித் தான் திரும்பி இருந்தாள் கிரண் தேவி.

அதை அப்போதுதான் உணர்ந்த ப்ரித்விராஜ்ஜிற்கு ஏமாற்றமே. அவள் மதி முகம் காண வந்தேன் என்று இளவரசியிடம் சொல்ல முடியாமல்.

“தாங்கள் மட்டும் தனியே செல்வதைக் கண்டு தங்களை எச்சரிக்கவே வந்தேன் தேவி” என்றான்.

இளவரசியின்  கண்கள் ப்ரித்விராஜை நோக்க, அதில் இருந்த உணர்வுகள் புரியாத நிலையில், அவன் சொல்லுவதை ஒத்துக் கொண்டுத் தலை அசைத்தாள்.

பின் மீண்டும் தங்கள் கூட்டம் நோக்கி அவள் செல்லத் திரும்புகையில்,

“தேவி, தாங்கள் இனியும் தனித்து எங்கும் செல்ல வேண்டாம். முடிந்தவரை நம் வீரர்கள் கண் பார்வையில் இருந்து கொள்ளுங்கள்”

“அப்படியே ஆகட்டும் இளவரசே” என்றபடி சென்று விட்டாள்.

ப்ரித்விராஜ் அந்த வீரனோடு ராணா இருக்கும் இடம் நோக்கிச் சென்றான்.

ராணா தன் நீராட்ட வேலைகளை முடித்துக் கொண்டு , ஏதோ யோசனையோடு அங்கிருந்த பெரிய பாறையில் அமர்ந்து இருந்தார்.

அவர் அருகில் ப்ரித்விராஜ் வரவும்

“மறைந்து இருந்து தாக்க நினைத்த அந்தக் கோழை யார்?” என்று கேட்டார்.

ப்ரித்விராஜ் உடன் இருந்த வீரன் அதிசயமாக ரானாவைப் பார்த்துவிட்டுப் பின் பிரிதிவிராஜ் முகத்தைப் பார்த்தான். இதை எதிர்பார்த்தது போல் இருந்தது ப்ரித்விராஜ்ஜின் முகம்.

“அவனைப் பற்றிய விவரங்கள் அறிய முடியவில்லை, மகாராஜ்” என்றான்.

“ஏன் ? “

“வந்தவன் முகலாயன். அவனுக்கு நம் மொழி தெரியவில்லை”

“தெரிந்து இருந்தாலும் சொல்லியிருக்க மாட்டான்”

ப்ரித்வி ஏன் என்பது போல் ராணாவைப் பார்க்க,

‘அவர்கள் பயிற்சி அப்படிப் பட்டது. மாட்டிக் கொண்டால் எதிரிகளால் கொல்லப் பட்டிருக்க வேண்டும். இல்லை என்றால் தங்கள் உயிரைத் தாங்கள் மாய்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் முதல் பயிற்சி. “ என்று ராணா கூற, வியப்புடன் அவரைப் பார்த்தான்.

ஆனால், “நீ ஏன் திருப்பி அனுப்பி வைத்தாய்?” என்று வினவினார்.

“இவன் வெறும் அம்புதானே. இவனைப் பின் தொடர்ந்தால் எய்தவன் யார் என்று தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணினேன்”

“நம்முடைய ஒரே எதிரி முஹலாய சக்கரவர்த்தி அக்பர் தானே”

“இல்லை மகாராஜ். அவர் நம் கண்ணுக்குத் தெரிந்த எதிரி. கண்ணுக்குத் தெரியாத எதிரிகளும் இருக்கிறார்கள்”

ராணா யோசனையோடு ப்ரித்வியைப் பார்க்க, அவன் சுற்றியுள்ளவர்களைப் பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.