(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - காணாய் கண்ணே - 25 - தேவி

Kaanaai kanne

தய்பூர் செல்லப் போகிறோம் என்றவுடன் கிருத்திகாவிற்கு முதல் நாள் கனவில் ராணி கிரண் தேவியை அங்கே தானே ராணா அனுப்பினார் என்ற நினைவு வந்தது.

அதிலும் மவுண்ட் அபு செல்லும் வழியில் இவளைக் கடத்தும் முயற்சி தோல்வியுற்ற நிலையில் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள்? என்ற கேள்வி தோன்றியது.

இப்போது உதய்ப்பூரில் என்ன ஆபத்து காத்து இருக்கிறதோ என்ற திகில் வந்தது.

ராஜபுத்ரர்களின் கட்டிடக் கலை என்பதால் முழுக்க ராஜஸ்தான் சுற்றித் தான் இந்த டூர் பிளான் செய்யப்பட்டு இருந்தது. அதனால் அனேக இடங்கள் பாலைவனத்தைச் சுற்றியே இருக்க, மவுண்ட் அபு மட்டுமே குளிர்ச்சியான இடமாக இருந்தது. அதை நன்றாக என்ஜாய் செய்த மாணவர்கள் உற்சாகமாகவே கிளம்பினார்கள்.

மூன்று மணி நேர பயணம் தான் என்பதால் காலை உணவை முடித்துக் கொண்டே கிளம்பினார்கள்.

லேக் சிட்டி என்றழைக்கப் படும் உதய்பூர் உள்ளே வந்ததும் எல்லோருக்கும் வாவ் என்று தான் தோன்றியது. நேராக சிட்டி பேலஸ் சென்றனர்.

சிட்டி பேலஸ் முழுதும் சுற்றி வர ஒரு நாள் என்பது சற்றுக் குறைவே. காலை பதினொரு மணி அளவில் மெயின் கேட் உள்ளே சென்ற மாணவர்கள் குழுக்களாகவே சென்றனர்.

சிட்டி பேலஸ்சிற்கு உள்ளே செல்ல மூன்று வாயில்கள் இருந்தன. அங்கே ஒரு அரண்மனை மட்டும் அல்ல. பல அரண்மனைகள் இருந்தன. ராஜா இரண்டாம் உதய்சிங்கால் கட்டப்பட்ட முதல் அரண்மனை பல தாக்குதலுக்கு உள்ளான போதும் அதன் பெருமை குறையாமல் இருந்தது.

முதல் கேட்டான கிரேட் கேட்டில் ஆரம்பித்து வரிசையாக சிறு கடைகள் அணிவகுத்து இருந்தன.

மொஹாலாய கட்டிடக் கலையும், ராஜஸ்தான் கட்டிடக் கலையும் கலந்து வடிவமைக்கப் பட்டு இருந்தது. அரண்மனையின் பகுதிகள் தனித்தனியாகப் பிரிக்கப் பட்டு இருந்தது.

படி மஹால் என்றழைக்கப் படும் நடுவில் உள்ள அரண்மனை தான் மிகப் பெரியது. இயற்கையான பாறை ஒன்றின் மேல் அமையப் பெற்ற இந்த அரண்மனை மற்ற அனைத்து அரண்மனைகளை விட உயரமானது. மற்ற அரண்மனைகளின் நாலாவது தளமும், இந்தப் பெரிய மகாலின் தரைத் தளமும் சம நிலையில் இருக்கும்.

தர்பார் ஹால், சித்ரஷாலா , தில்குஷ் ஹால் என ஒவ்வொரு பகுதியும் கலைநயத்துடன் பார்க்க பார்க்க ஆனந்தமாக இருந்தது. மோர் சௌக் என்றழைக்கப்டும் பகுதியில் அழகான மயில் சிற்பம் செதுக்கப் பட்டு இருந்தது. மூன்று பருவ காலங்களை குறிப்பதாக சொல்லப் பட்டது.

ராஜாக்களின் லாவடேரி இடத்தைப் பார்த்ததும் மாணவர்கள் அதிசயித்து நின்றனர்.

ராகவி “அடியே கிருத்திகா, அந்தக் காலத்துலே மனுஷன் என்ன சுகமா வாழுந்து இருக்காங்கன்னு இங்கே வந்ததுக்கு அப்புறம் தாண்டி தெரியுது. அதிலும் அந்தஊஞ்சல் ஒன்னு போதும். என்ன அழகா இருக்கு “ என்றாள்.

ஒவ்வொரு கட்டிடக் கலை மாணவர்களுக்கும் இந்த அரண்மனை பொக்கிஷமே. ஒவ்வொரு சின்ன இடத்திலும் அழகான சிற்பமோ, சித்திரமோ இருக்க அவர்கள் மொபைல் கலேரி நிரம்பி வழிந்தது.

ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் ப்ரிதிவியும் , அவனின் உதவியாளர்களும் விளக்கம் கொடுத்துக் கொண்டு வந்தனர். அந்தக் கட்டிடம் சமபந்தப் பட்ட தொழில் நுட்ப விளக்கம் பேராசிரியர்களால் கொடுக்கப் பட்டது.

ஒவ்வொரு பகுதியும் உள்ளே இன்டர்கனெக்ட் செய்யப் பட்டு இருந்தாலும், சேர்ந்து செல்லாவிட்டால் வழி தவறி விட வாய்ப்பு அதிகமே. அங்கே அங்கே இருந்த மேப் வைத்து வெளியில் வந்து விடலாம் என்றாலும் எந்தப் பகுதியிலும் காணாமல் போக வழியுண்டு.

தர்பார் ஹாலில் தொங்கிக் கொண்டு இருந்த சர விளக்குகள் வேலைப்பாடுடன் இருந்தது. சித்திரஷாலாவில் இருக்கும் படங்கள் உள்நாட்டு வெளிநாட்டு கலைஞர்களின் கைவண்ணத்தில் கண்ணைக் கவர்ந்தது.

ஷீஸ் மஹால் என்னும் கண்ணாடி மாளிகை கண்டு அப்படியே லயித்து நின்று இருந்தனர்.

கண்ணாடி மாளிகை வரும்வரை எல்லாம் நன்றாகவே சென்று கொண்டு இருந்தது. கண்ணாடி மாளிகையில் பெண்கள் தங்களை முன்னும் பின்னும் பார்த்து ரசித்துக் கொண்டு இருக்க, ஆண்கள் கேலி செய்து கொண்டு இருந்தனர்.

ராகவி , “ஹலோ, நாங்களாவது பேக் திறந்து மேக் அப் பாக்ஸ் எடுக்கனுமேன்னு யோசிச்சுட்டு இருக்கோம். உங்க இனம் எல்லாம் பையிலே சீப்பை வைச்சுகிட்டு சீவரேன் பேர்வழின்னு இருக்கிற நாலு முடியையும் நாற்பது தினுசிலே வாரிக்கிட்டு திரியறாங்க” என, பாய்ஸ் அசடு வழிந்தனர். எல்லோருமே இந்தக் கேலி, கிண்டலை ரசித்தனர்.

அன்றைக்கு இவர்களைப் போல் இன்னும் ஐந்து மாணவர்கள் குழு வந்து இருக்க, லோக்கல் கைட் அவர்களுக்கு சுற்றிக் காமித்துக் கொண்டு இருந்தனர்.

பொதுவாக ஒரு குரூப் உள்ளே இருக்கும்போது அடுத்தவர்கள் வருவதில்லை. ஆனால் இவர்கள் உள்ளே இருக்கும்போதே வேறொரு குரூப் உள்ளே வந்தார்கள். அவர்களும் எல்லோருமே ஸ்டுடென்ட்ஸ்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.