செஷல்ஸ் நாட்டின் மாஹி தீவில் இருந்த டைவர் குழுவில் தேன்மொழி இணைந்து கொண்டாள்.
செஷல்ஸ் தீவின் அழகைக் கண்டு களிக்க வரும் சுற்றுலா பயணிகளை படகில் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது, ஸ்கூபா டைவிங் செய்ய விருப்பம் கொண்டவர்களுக்கு உதவுவது போன்றவற்றில் அங்கிருந்த டைவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
தாத்தாவின் பொறுப்பில் அவளை விட்டுவிட்டு குடும்பத்தினர் சென்னை திரும்பியிருந்தனர்.
ஆறுமாத காலம் அங்கிருக்கும் டைவர்களோடு சேர்ந்து பணிபுரிய போவதாக தெரிவித்த தேன்மொழி ஆறே வாரங்களில் விலகி விட்டிருந்தாள்.
அந்த ஆறு வாரங்களில் மாஹி, ப்ரசலின், ல தீக் மூன்று தீவுகளை மட்டுமே சுற்றி சுற்றி வந்தவளுக்கு அது போதவில்லை.
“அல்டாப்ரா போகணும் தாத்தா. மரைன் போட்டோகிராபியின் சொர்க்கம் அது தான்” கண்களில் கனவோடும் லயிப்போடும் பேசிய பேத்தியைப் பார்த்தார் தாத்தா.
“உன்னைப் போல மரைன் போட்டோகிராபர்ஸ் இருப்பாங்களே. அவர்களோடு கூட்டு சேர முடியுமான்னு பாரு பாப்பா” பதினைந்து வயது பெண்ணை தனியே எப்படி அனுப்புவது என்று தாத்தாவிற்கும் கவலை.
முன்பு அவள் லண்டன், ஜப்பான் இன்னும் பிற நாடுகளில் பயிற்சி மேற்கொண்ட போதெல்லாம் அங்கே குழுவினரோடு சேர்ந்தே சென்றாள். பயிற்சி நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டது.
மேலும் கடலில் இது போல டைவ் செய்பவர்கள், புகைப்படம் எடுப்பவர்கள் எல்லோரும் குழுவாக தானே செயல்படுவார்கள்.
“பெரிய குழு எல்லாம் வேண்டாம் தாத்தா. படகு செலுத்தி எனக்கு உதவி செய்ய ஒரு நல்ல டைவர் இருந்தாலே போதும். ஆனா பிழைப்பிற்காக இல்லாமல் கடலை நேசிப்பவராக இருக்கணும். இங்க இருக்கும் மீனவர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன்” என்று தாத்தாவிடம் கூறினாள் தேன்மொழி.
அங்கே இருந்த ஆறு வாரங்களில் அங்குள்ள மீனவர்களோடு நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுவிட்டாள் தேன்மொழி.
கடலை தெய்வமாக வழிபடும் மீனவர்களுக்கு கடலே அன்னை. கடல் மடியே தொட்டில். அவர்களின் ரத்தத்திலேயே கடல் மீதான பிணைப்பு ஊறிப் போனது.
அறிவியல் கண்டுபிடிக்க முடியாத நுணுக்கமான விஷயங்களை ஒரு மீனவன் கண்டு கொள்வான்.
கடலோடும் காற்றோடும் அலையோடும் கரையோடும் தான் அவனது வாழ்வியல்.