(Reading time: 18 - 35 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 33 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai 

ன்றைய அர்ச்சனாவின் பேச்சுக்கு பிறகு யாதவிக்கு விபாகரன் முன்னால் வருவதற்கே தயக்கமாக இருக்க, அவன் வீட்டில் இருக்கும் நேரம் அவன் கண்முன்னே வருவதை அவள் தவிர்த்தாள்.

முந்தைய யாதவியாக இருந்திருந்தால் அர்ச்சனா பேசியதற்கு, "என்னோட கணவனுக்கு நான் சமைச்சு கொடுக்கறது மயக்க பார்ப்பதா?" என்று எதிர்த்துக் கேள்வி கேட்டிருப்பாள்.

ஆனால் வாழ்வில் யாரும் செய்ய துணியாத காரியத்தை துணிந்து செய்துவிட்டாளே, ஏன் மோசமான, கொடுமையான கணவனை கூட சகித்து வாழும் பெண்கள் கூட இன்னும் இருக்கிறார்கள்? ஆனால் நல்ல கணவன் கிடைத்தும், அவனுடன் வாழாமல் வேண்டாமென்று சென்றவளுக்கு, இன்று அர்ச்சனாவை எதிர்த்து பதில் பேச முடியவில்லை, கழுத்தில் தாலியில்லையென்றாலும் சட்டப்படி இன்னும் அவள் விபாகரனின் மனைவி தான், ஆனால் அவளாக அந்த உரிமையை எடுத்துக் கொள்ள தயக்கமாக இருக்க, செய்த தவறு மனதை வருத்த, அவளைப் பற்றி யார் தவறாக பேசினாலும் அதை தாங்கிக் கொள்ள அவளால் முடிவதேயில்லை, அதனால் ஒதுங்கியே இருந்தாள்.

ஆனால் அப்படி அறைக்குள்ளேயே இருந்தாலும், அதற்கும் அர்ச்சனா பேசுவதை கேட்கவே முடியாது. "நீயென்ன மகாராணியா? நீங்க அந்தப்புரத்தை விட்டு வரமாட்டீங்க.. நாங்க உங்களுக்கு பணிவிடை செய்யணுமா? ஒழுங்கா வந்து வேலையை பாரு.." என்று திட்டுவாள்.

அப்படியும் சமையல் வேலையை அவளிடம் கொடுக்க மாட்டாள். வேலைக்கு ஆள் இருந்தும் மற்ற வேலைகளை அவளிடம் செய்ய சொல்லுவாள். அதுவும் விபாகரன் இல்லாத நேரத்தில் தான், அவனுக்கு யாதவியிடம் இப்படி நடந்துக் கொள்வது தெரிந்தால் தான் ருத்ர தாண்டவம் ஆடிடுவானே, அதனால் அவன் இல்லாத நேரத்தில் தான் இந்த ஆர்ப்பாட்டமெல்லாம்,

மஞ்சுளாவிற்குமே அர்ச்சனா இப்படி செய்வது பிடிக்காது தான், அன்று யாதவி சமையல் செய்த போது மகன் ஒழுங்காக காலை உணவை சாப்பிட்டுவிட்டு சென்றதற்கு மகிழ்ந்தார். அது தினமும் தொடர வேண்டுமென்று கூட சொன்னாரே, அப்படியிருக்க மீண்டும் பழைய நிலையே திரும்பியிருக்க,  மகன் காலையில் எழுந்ததுமே ஓட்டமாய் ஓடுவதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது.

ஆனால் யாதவியின் முன் மகளை விட்டுக் கொடுத்து பேசவும் வரவில்லை, யாதவி இல்லாத நேரத்தில் அர்ச்சனாவிடம் எடுத்து சொல்லி புரிய வைத்தாலும் கேட்பதில்லை, அதனால் அவருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை, ஆனால் ஏதாவது செய்ய வேண்டும் என்று மட்டும் அவருக்கு புரிந்தது.

இதில் வீட்டில் இப்படிப்பட்ட பிரச்சனை ஓடுவது தெரியாமல், யாதவி தன் ஓட்டுக்குள் சுருங்கிக் கொண்டது விபாகரனை பாதித்தது. ஏனென்றால் அவன் வீட்டில் இருக்கும் போது தான் அர்ச்சனா அடக்கி வாசிப்பாளே, அதனால் புவனாம்மா சொல்லவே தான் யாதவி அன்று காபி போட்டது, சமைத்தது, பரிமாறியதெல்லாம் போலும், அதன்பின் அதையெல்லாம் அவளாக முன்வந்து செய்ய தயங்குகிறாள் போலும் என்று நினைத்துக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.