(Reading time: 18 - 35 minutes)

அதையெல்லாம் யோசித்தப்படி அவர்களும் வீட்டில் இல்லாததால், அர்ச்சனா இல்லாததே மனதிற்கு ஒரு நிம்மதியை கொடுத்திருக்க, யாதவி வரவேற்பறையில் தான் அமர்ந்துக் கொண்டிருந்தாள்.

அப்போது தான் விபாகரனும் வீட்டிற்குள் நுழைந்தான். இருவரும் ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள். ஆனாலும் அவளை பார்ப்பதே அரிதாக இருக்க, இன்று அவளை பார்த்ததில் வியப்பாகி போனான்.

யாதவியுமே அவன் இந்நேரம் வீட்டுக்கு வருவான் என்று எதிர்பார்க்காததால் கொஞ்சம் அச்சத்தோடு அவனை பார்த்தாள். அந்த அச்சத்திற்கு காரணம் அர்ச்சனா தான்,

வீட்டில் இல்லாத சமயத்தில் அவனோடு பேச வேண்டுமே, அது தெரிந்தாலும் மயக்க பார்க்கிறாய் அப்படி இப்படி என்று ஏதாவது சொல்வார்களோ என்பது தான் அவளது அச்சத்திற்கு காரணம். அதுவே அவளுக்கு படபடப்பை கொடுக்க, அவளின் முக பாவனைகளும், கை கால்களில் ஏற்பட்ட நடுக்கமும் அதை விபாகரனுக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியது.

அவன் என்ன சிங்கமா? புலியா? எதற்காக இப்படி அவனை பார்த்து அச்சம் கொள்கிறாள். முன்பு அவனை பார்த்து அச்சம் கொண்டதற்கு ஒரு காரணம் இருந்தது. அவள் இவனை வேண்டாமென்று சொல்லிவிட்டு போனதற்காக அவன் கோபம் கொள்வானோ, தவறாக பேசுவானோ, என்று நினைத்து அச்சம் கொண்டாள். ஆனால் இப்போதும் அவனை அருகில் பார்த்தால் இந்த படபடப்பு ஏன்? என்று மனதில் நினைத்துக் கொண்டவன், வீட்டில் தன் அன்னை இல்லையா? என்பது போல் சுற்றிப் பார்க்க,

அவன் மஞ்சுளாவை தான் தேடுகிறான் என்பதை உணர்ந்துக் கொண்டவள், "மஞ்சுளா அம்மாவும், அர்ச்சனா அக்காவும் ஏதோ விசேஷத்துக்கு போயிருக்காங்க.." என்று கூறினாள்.

"அப்பா ஒரு வழியா வாயை திறந்து பதில் சொன்னாளே.." என்று நினைத்து மகிழ்ந்தவன், அவள் சொன்ன பதிலில் புன்னகைத்து,

"அது என்ன மஞ்சுளா அம்மா, அர்ச்சனா அக்கா? அம்மாவை அத்தைன்னு கூப்பிடு.. அர்ச்சனாவை அண்ணின்னு கூப்பிடு.. அவ கணவன் விஜயை அண்ணான்னு சொல்லணும்.." என்று கூறினான்.

முன்பு வேண்டுமானால் அவளுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்கலாம், ஆனால் இப்போது அந்த உறவு முறையெல்லாம் அவளுக்கு புரிந்தது தான், ஆனால் அதை கொண்டு அவர்களை அழைத்தால், அதை ஏற்றுக் கொள்வார்களா? முதலில் அவளுக்கு அதற்கான உரிமையும் தகுதியும் இருக்கிறதா? அதனாலேயே இப்படி சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவு செய்துக் கொண்டாள். ஆனால் அதை அவனிடம் கூறலாமா? என்பது தெரியாமல் அமைதியாக தலையாட்டிக் கொண்டாள்.

பின் விபாகரன் தன் அறைக்குச் செல்லலாம் என்று நினைக்க, "மதியம் சாப்பிட்டீங்களா?" என்றுக் கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.