(Reading time: 18 - 35 minutes)

இதில் ஒரே வீட்டில் இருந்தும் அவளை பார்க்க முடியாத நிலை தான், பழைய விஷயங்களை ஞாபகப்படுத்தாமல் இருந்தால் தான் அவள் இயல்பாய் இந்த வீட்டில் வலம் வருவாள் என்று அன்று மஞ்சுளாவிடமும் கூறினான். ஆனால் மாற அவளும் முயற்சி செய்ய வேண்டுமே, ஆனால் அவள் அதை விரும்பவில்லையோ, என்று அவனுக்கு குழப்பமாக இருந்தது.

அவனாகவும் அவளிடம் கணவனாய் உரிமைக் காட்டி பேசி, சிரித்து அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் அவனுக்கு தயக்கமாக இருந்தது. என்ன இருந்தாலும் அவனை பிடிக்கவில்லை என்று சொல்லித்தானே அவனை விட்டு விலகிச் சென்றாள். இப்போது அவள் மனதில் என்ன இருக்கிறது என்பது அவனுக்கு தெரியாதே,

ஒருவகையில் சாத்விக் செய்த தவறை தான் அவனும் செய்திருக்கிறான். யாதவியைப் பற்றி எதுவும் தெரிந்துக் கொள்ளாமல் அவளை மணக்க போவதாக அத்தனை பேர் முன்பு சொல்லி, அவன் அவளுக்கு மோதிரம் மாட்ட இருந்தான் என்றால், அவளுக்கு தன்னுடன் வாழ விருப்பமா? என்று அவளிடம் கேட்காமல், அத்தனை பேர் முன்பும் அவள் தன் மனைவி என்று சொல்லி இவனோ அவளை அழைத்து வந்துவிட்டான்.

இப்போதோ அவள் மனதில் இருப்பது என்ன? செய்த தவறுக்காக வருந்தி விலகிப் போகிறாளா? இல்லை தன்னுடன் சேர்ந்து வாழவே அவள் விரும்பவில்லையா? எதற்காக இத்தனை நாள் மறைவு வாழ்க்கை வாழ்ந்தாள்? அவளிடம் பேசி அவளை புரிந்துக் கொள்ளாமல் இப்படி அழைத்தும் வந்தும் விட்டான். ஆனால் அவளோ ஒதுங்கி ஒதுங்கி போகிறாளே என்று நினைத்து அவன் வருந்திக் கொண்டிருந்தான்.

இந்நிலை தான் சிறிது நாளாக அந்த வீட்டில் இருக்க, அன்று ஏதோ அலுவலக விஷயமான ஒரு முக்கிய கோப்புகளை வீட்டுக்கு கொண்டு வந்து பார்க்கலாமென்று மதிய நேரத்தை தாண்டியிருக்க விபாகரன் வீட்டிற்கு வந்தான்.

அந்த நேரம் மஞ்சுளாவும் அர்ச்சனாவும் சென்னைக்கு வந்தது தெரிந்து ஒரு உறவினர் அவர்களை விசேஷத்திற்கு அழைக்கவே, இருவரும் சென்றிருந்தனர். மதிய சாப்பாட்டிற்கு முன்பே வீட்டை விட்டு கிளம்பியவர்கள், இன்னும் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை, இப்போது யாதவி வீட்டில் இருப்பதால் மஞ்சுளா மட்டும் அவளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பியிருந்தார்.

அதற்கு அர்ச்சனாவோ, "உனக்கு இதெல்லாம் தேவையாம்மா.. அவ என்ன மகாராணியா? அவக்கிட்ட சொல்லிட்டு தான் போகணுமா?" என்று வேறு கோபத்தோடு சொல்ல,

"ஒரே வீட்டில் இருக்கிறோம்.. சொல்லாம போனா எப்படி? இருந்தாலும் நீ நடந்துக்கிறது அதிகம் தான்.." என்றப்படியே,

"வீட்டைப் பார்த்துக்கோம்மா.. வந்துட்றோம்.." என்று விடைப்பெற்று கிளம்பினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.