(Reading time: 8 - 15 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 33 - ஜெய்

மாணவர்களின் தற்கொலையில் ஆரம்பித்து உறுப்புத் திருட்டு வரை சந்திரனும், மதியும் கூற பத்திரிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.... சிறிது சலசலப்பு அவர்கள் மத்தியில் எழுந்தது.....

“உங்க எல்லாருக்கும் உடனே எங்கக்கிட்ட கேட்க ஏகப்பட்ட கேள்விகள் எழுவது தெரியுது... ஆனால் இந்த கேஸ் பற்றி முழுவதும் நாங்க சொல்லி முடிக்கிறவரை நீங்க அமைதி காத்தா நல்லா இருக்கும்... நாங்க விளக்கி முடிச்ச பிறகு உங்க அத்தனை கேள்விக்கும் நாங்க பதில் சொல்லுறோம்...”, மதி கூற அங்கு அமைதி ஏற்பட்டது.....

“முதல் முதலில் ஆரம்பித்த தற்கொலையிலிருந்து ஆராய ஆரம்பித்தோம்.... எல்லா ஆராய்ச்சிகளின் முடிவும் எங்களை கொண்டு வந்து நிறுத்தியது சந்தேகப்படும் இடத்தில்தான்... ஸோ முதல் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்தில் ஆரம்பித்து கடைசியாக செய்துகொண்ட மாணவி வரை அனைவரிடமும் மறைமுகமாக விசாரணை மேற்கொண்டோம்....”

“அந்த நேரத்தில்தான் மணி கேஸ் விஷயம் வந்தது... அவனோட தந்தை தனிப்பட்ட முறைல எங்களை வந்து சந்திச்சு தன் பையன் மரணத்துல சந்தேகம் இருக்கறதா சொன்னார்.... தன் மகன் அந்த பெண்ணை கொலை செய்யவில்லை என்றும் அந்த நேரத்தில் அவன் தங்களுடன் கோவிலுக்கு வந்ததாகவும் கூறினார்... அவரின் கண்களில் பொய் தெரியவில்லை... அதையும் விசாரிக்க ஆரம்பித்தோம்....”

“கடந்த ஆண்டு நரேந்திரனின் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவனுக்கு சிறுநீரகம் பழுதடைந்து இருப்பதாகக் கூறி அவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது... அறுவை சிகிச்சைக்குப் பின் அவன் வேறொரு மருத்துவரிடம் சென்று காண்பித்த பொழுது அவர் கூறியது அவனுக்கு சிறுநீரகத்தில் பழுது இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதே... அந்த மருத்துவர் திரு.சந்திரன் அவர்களின் நீண்ட கால நண்பர்... எனவே உடனடியாகத் சந்திரனைத் தொடர்பு கொண்டு அங்கு கொடுக்கப்பட்ட மெடிக்கல் ரிப்போர்ட்டை சரி பார்க்க சொன்னார்... பிறகு பல வழிகளில் முயன்று அந்த மாணவனின் ஒரிஜினல் ரிப்போர்ட் எடுத்து பார்க்க அதில் அவன் உடல்நிலை நூறு சதம் ஆரோக்கியமாக இருந்தது.... அவன் தங்கியிருந்த விடுதி சாப்பாடு ஒத்துக்கொள்ளாமல் வயிற்றில் புண் ஏற்பட்டதாலேயே அவனுக்கு வலி வந்திருக்கிறது...”

“இப்படி நரேந்திரனின் கல்லூரி, மருத்துவமனை என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் பல ஊழல் நிகழ்வுகள்... இந்த நிகழ்வுகளை பார்க்கும்போது கண்டிப்பாக இவருக்கு பக்க பலமாக நிறைய பேர் இருக்கிறார்கள் என்றே தோன்றியது....”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.