இந்தியா ரேடியோவிலிருந்து சிறுவர் சோலை நிகழ்ச்சிக்கு குழந்தைகளை அனுப்ப முடியுமான்னு கேட்டு இருந்தாங்க... நானும் சரின்னு சொல்லிட்டேன்... நம்ம தெரு பசங்களை வச்சே ப்ரோக்ராம் பண்ணிடலாம்ன்னு ஐடியா... ஒரு கட்டுரை, நாடகம் அப்பறம் ஒரு பாட்டு இதுவரைக்கும் பண்ணலாம்ன்னு... நீங்க நம்ம பசங்களை அனுப்ப முடியுமா?”
“அதுக்கென்ன பேஷா அனுப்பிடலாமே... ராம், ரஞ்சனி, மைத்தி, மாதவன் இவாள்லாம் கலந்துப்பா... மத்த பசங்க பப்ளிக் எக்ஸாம்...அதனால படிக்க நிறைய இருக்கும்...”
“இவங்களே அதிகம் சார்... ரஞ்சனி, ராம் ரெண்டு பெரும் பாட்டு பாடுங்க... மாதவன் உன்னை நாடகத்துல போடறேன்... மைத்தி நீ நல்லா பேசுவியே... அதனால எதாச்சும் உனக்கு பிடிச்ச தலைப்புல பேசறியா....”
“கண்டிப்பா மாமா... போன வாரம் எங்க ஸ்கூல்ல பிடிச்ச விளையாட்டு பத்தி ஒரு கட்டுரை எழுத சொன்னா... அதைய பேசிடவா....”
“பேசேன்... நீ எழுதினது வச்சிருக்கியா...”, கஸ்தூரி கேட்க, மைத்தி தான் எழுதிய கட்டுரையை எடுத்துக் கொண்டு வந்து காட்டினாள்... அதில் சில இடங்களில் திருத்தங்கள் செய்தவர் அவளிடம் கொடுத்து அதை ஏற்ற இறக்கங்களுடன் பேச பயிற்சி எடுக்க சொன்னார்....
பாட்டுப்பயிற்சியை நாராயணின் பெரிய மாட்டுப்பெண் பார்த்துக்கொள்வதாகக் கூற நாடக பயிற்சியை தன் வீட்டில் வைத்துக்கொண்டார் கஸ்தூரி...
அடுத்த ஒரு வாரம் இந்த பயிற்சியிலேயே சென்றதால் சற்று கிரிக்கெட்டை மறந்து இருந்தாள் மைத்தி...
அந்த வார சனியும் வந்தது... இவர்களின் குழு வானொலி நிலையத்திற்கு சென்றது... அத்தனை பெரிய இடம்... குழந்தைகள் அனைவரும் சுற்றி சுற்றி பார்த்தார்கள்... அனைவருக்குமே அது ஒரு புதிய உலகமாக இருந்தது...
இவர்கள் உள்சென்றதும் அங்கிருந்த ரெகார்டிங் அறைக்கு அழைத்து சென்று எப்படி பேச வேண்டுமென்று பயிற்சி கொடுத்தார்கள்... பின்பு ரெகார்டிங் ஆரம்பிக்க வானொலி அண்ணா வந்து நிகழ்ச்சியை அவர் பாணியில் தொடங்கினார்...
ராம், ரஞ்சனியின் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது... அதன் பின்னர் நாடகம் நடக்க இறுதியாக மைத்தி வாழைமரத்தை பற்றி பேச வந்தாள்...
“வாங்க வாங்க பாப்பா... என்ன பண்ணப் போறீங்க...”
“நான் எனக்கு பிடிச்ச விளையாட்டை பத்தி பேசப்போறேன்...”
“ஓ ரொம்ப சந்தோஷம்மா... இது யாரானும் எழுதி கொடுத்தாங்களா.. இல்லை நீங்க எழுதினதா...”