(Reading time: 11 - 21 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

ஒருவர் மீது உரிமை கொண்டிராமல் இருந்தால் அதுவே உண்மையான முக்தியாகிறது!

ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தவனின் எதிரில் வந்து நின்றனர் தம்பதி சகிதமாய்! அவன் எதற்காக அங்கு வந்தானோ அதன் நோக்கம் எதிரில் நிற்பதைக் கூட உணராமல் இறைவனிடத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தான் அசோக். ஆயினும், பாட்டியார் கண்ட மாத்திரமே அறிந்துக் கொண்டார், எதிர் நிற்பனே தனது பெயரன் என்று! உருவ ஜாடையில் தந்தையினை ஒத்திருந்தவன் புன்னகைக்க, கன்னத்தில் விழுந்த குழி அவன் தாயினை நினைவூட்டியது. எனினும், அவன் அருகிலிருக்கும் பெண்தான் யார்? என்ற சந்தேகமும் அவருக்குள் எழுந்திருக்கலாம். அவளது கழுத்தில் பசுமையாய் வெளித் தெரிந்த மஞ்சள் கயிறானது, அவர் வினாவிற்கு விடை நல்கிச் சென்றது. திருமணத்திற்கு ஓர் அழைப்பு விட வேண்டும் என்ற எண்ணமும் உதிக்கவில்லையா என்ற கோபம் பாட்டியாருக்கு! நீண்ட நேரமாய் தங்களையே கவனித்துக் கொண்டிருந்தவரை ஓர கண்ணால் கவனித்தாள் சிவன்யா. எதற்கும் ஆட்படாத அவளது குழந்தைத்தனம் அவளை அச்சூழலிலும் திருதிருவென விழிக்க வைத்தது. தரிசனம் முடித்துவிட்டு பிரகாரத்தினை வலம் வர அவன் நகர, இவளும் பின்னாலே நகர்ந்தாள்.

"கலெக்ட்ரே..!" ஓசையின்றி மென்மையாக அவள் அழைக்க குழம்பியவனாய் அவள் அழைத்த அதே தொனியில் "என்ன?" என்றான் அசோக்.

"டக்குன்னு பார்க்காதீங்க! அந்தம்மா உங்களுக்குத் தெரிந்தவரா?" என்று வினவ, அவள் எங்ஙனம் நோக்கலாகாது என்றுரைத்தாளோ, அங்ஙனமே சட்டென திரும்பி நோக்கினான் அசோக்.

"ப்ச்...கலெக்ட்ரே! டக்குன்னுப் பார்க்காதீங்கன்னு சொன்னேன்ல!" என்றதும் சுதாரித்தவனாய் தனதுப் பார்வையினை இலகுவாக்கி தான் அறியா தனதுப் பாட்டியாரை கூர்ந்தார் மாவட்ட ஆட்சியர்.

"தெரியலையே! யாருன்னு!" என்று கூற,

"ஐயோ..! அங்கே தான் நிற்கிறாங்க! தெரியலைன்னு சொல்றீங்க?" என்றாள் சிவன்யா. வெறுப்புற்றவனாய் அவள் சிரத்தில் செல்லமாய் ஒரு அடி வைத்தவன்,

"அவங்கத் தெரியுறாங்க! ஆனால், அவங்கத் தான் யாருன்னுத் தெரியலை!" என்று அவள் குறும்புத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தான் அவன்.

"ஒருவேளை உங்க ஹிட்லர் பாட்டியா இருக்குமோ?" தன் பக்க சிந்தனையை அவள் உரைக்க,

"ச்சே..ச்சே..! இருக்காது! நான் இங்கே இருக்கிறேன்னு தெரிந்திருக்கும் அவங்களுக்கு, அவங்கப் பாட்டியா இருந்தா, இந்நேரம் எங்கம்மா போன இடத்துக்கே போயிட்டு வாடா ராசான்னு அனுப்பி வைத்திருப்பாங்க!" என்றனை சற்றே முறைத்தாள் அவள்.

"ஐயயோ! நீங்க போயிட்டா அப்பறம் எனக்கு யார் லீவு விடுறது?" சளைக்காமல் போட்டியிட்டாள் கன்னிகை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.