(Reading time: 8 - 15 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

“என்னப்பா...ரவீந்தர்!...எப்படியிருக்கே?” அந்த இளம் குருக்கள் திருப்பிக் கேட்டதும் ஆடிப் போனான் ரவீந்தர்.

“நீ...நீங்க....?”

“அடியேன்...சுதாகர் சுவாமிகள்....” என்று புன்னகையோடு சொன்னார் குருக்கள்.

தன் நண்பன் ஒரு அலுவலகத்தில் மேனேஜராகவோ...இல்லை...சிறு தொழிலதிபராகவோ...அல்லது....ஒரு வியாபாரியாகவோ தான் இருப்பான் என்று எண்ணிக் கொண்டு வந்த ரவீந்தர், சுதாகர் என்னும் சுட்டி இளைஞன் ஒரு இளம் கோயில் குருக்களாய் இருப்பதைக் கண்டு பெரும் வியப்பிலாழ்ந்தான்.

“என்ன சுதாகர்?...ஏன் இந்தக் கோலம்?” சன்னக் குரலில் ரவீந்தர் கேட்டான்.

“அதைப் பற்றியெல்லாம் அப்புறமாய் விரிவாய்ப் பேசலாம்...மொதல்ல நான் உனக்காகப் பார்த்து வெச்சிருக்கற வீட்டிற்குப் போவோம் வா” என்று சொல்லி, வேக வேகமாய்ப் போய் கோயிலின் பிரதான கேட்டை பூட்டி விட்டு வந்தார் சுதாகர் சுவாமிகள்.

இருவரும் நடந்து செல்லும் போது எதிரே வந்த பலர் சுதாகரைப் பார்த்து மரியாதையாய் வணங்கி விட்டுச் செல்ல, புல்லரித்துப் போனான் ரவீந்தர்.  “ஹும்...கல்லூரில படிக்கும் போது மொத்தக் காலேஜையும் கலக்கிய சுதாகர்...இன்னிக்கு இந்த ஊர் மக்கள் வணங்குற சுதாகர் சுவாமியா?...ஆண்டவா...என்ன நடக்குது இங்கே?....”

இருவரும் அந்த வீட்டின் இரும்பு கேட்டைத் திறந்து உள்ளே செல்ல, கேட்டைத் திறக்கும் ஓசை கேட்டு, வாசற் கதவைத் திறந்து எட்டிப் பார்த்த ஒரு சிறுவன்,  “அம்மா...கோயில் சாமி வந்திருக்கார்” என்று வீட்டிற்குள் பார்த்துக் கத்தினான்.

உள்ளிருந்து வெளியே வந்த அந்த இளம் பெண்ணைப் பார்த்த முதல் பார்வையிலேயே ரவீந்தருக்குள் ஒரு அலையடித்தது.  புல்லாங்குழல் இசை அவன் காதுகளுக்குள் மட்டும் ஒலித்தது.  யாரோ அவன் நரம்புகளைச் சுண்டி வீணை இசையை எழுப்பினார்கள்.

“முன்பின் அறியாத ஒரு பெண்ணை இப்படி வெறித்துப் பார்ப்பது தவறு...உடனே உன் பார்வையை அவள் மீதிருந்து நகர்த்துடா” என்று அவன் மூளை கட்டளையிட, கண்கள் அந்தக் கட்டளையை ஏற்க மறுத்தன.

“அப்பா இல்லையா வத்சலா?” சுதாகர் சுவாமிகள் கேட்க,

“சுதாகர்ஜி....அப்பா...கடைத் தெரு வரைக்கும் போயிருக்கார்” என்றாள் அவள் மயிலிறகின் வருடல் போன்ற குரலில்.  “ஒரு பெண் சாதாரண நேரத்தில், வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் தருணங்களில் கூட இவ்வளவு அழகாய் இருப்பாளா?” தனக்குத் தானே கேட்டுக் கொண்டான் ரவீந்தர்.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.